DISPASSIONATED DJ

March 28, 2011

வரலாற்றின் பக்கங்களைப்புரட்டிய ஆதிமனிதன் - II

Filed under: நாடற்றவனின் குறிப்ப — டிசே தமிழன் @ 9:47 am

-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)

(முந்தைய‌ பாக‌த்திற்கு)

புராதனமாக வாழ்ந்து அனுபவித்த மண்ணின் கலாச்சாரமும், வன்முறை பிதுக்கித்தள்ள சொந்த மண்ணைவிட்டு ஐரோப்பிய மண்ணைப் புகலிடமாக்கி வாழ்தலில் உருவான புலம்பெயர் சூழலின் கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று நினைவடுக்குகளிலும் மொழியடுக்குகளிலும் ஊடுருவிப் பரவுகின்றது. மேற்கத்திய வாழ்வு முறைக்கு ஆளாக்கப்பட்ட அகதி வாழ்வில் தன் பூர்வீக பண்பாட்டிலிருந்து பிடுங்கி வெளியே வீசப்பட்ட செடியின் இலைகள், கொம்புகள் உலர்ந்து போயிருந்தாலும் அதன் வேர்களில் ஈரப் பசபசப்பு இருப்பதைப் போன்று புகலிடக் கலாச்சாரச் சூழலின் அழுத்தத்தின் அடி ஆழத்தில் சொந்த பண்பாடு உரையாடலாய்க் குவிந்து கிடக்கிறது.  இதன் நிலப்பரப்பு, ஞாபகங்களின் உள் அடுக்குகளிலிருந்து உருவாகிறது.  இளங்கோவின் கவிதைகளிலும் இந்தப் பூர்வீகப் பண்பாட்டு வேர்களும் அழிக்கப்படாத ஞாபங்கங்களும் நெருக்கம் கொள்கின்றன.

மரணத்திற்குள் வாழ்தலையும், வாழ்தலுக்குள் மரணத்தையும் இளங்கோவின் கவிதைகள் பேசுகின்றன. தனது அப்பாவின் அப்பா தற்கொலை செய்த அந்தக் கிணற்றிலேயே தானும் ஒருநாள் தற்கொலை செய்வேன் என்றிருந்த துயரத்தையும் மரணத்தை உருவாக்கும் போரிலிருந்து தப்பித்தன் வழியாகத் தனக்கு வாழ்தலை உருவாக்கியுள்ள பெருந்துயரத்தையும் இளங்கோவின் கவிதை எழுத்துக்களில் பதிவு செய்கிறது.

அப்பாவின் அப்பா கோபத்தில்
தற்கொலைத்த அங்கேதான்
என்றோவோர் நாள் தவறி வீழ்ந்து
என் வாழ்வு முடியப்போகிறதென்று
நினைத்த பொழுதில்
ஆயுள் அதிகமெனத் துரத்தியது போர்

ஈழத்து ஒழுங்கைகளில் பின்மாலைப் பொழுதொன்றில் கரங்கள் கோர்த்து குதூகலமாய் நடந்ததொரு பிள்ளைப் பிராயம், ஒரு மழைக்காலத்தில் ஒற்றை வயலின் தந்தியின் சுருதியில் பெருங்குரலெடுத்துப் பாடிய ஆதிமொழியின் பாடலையும் பத்திரப்படுத்துகிறது. தனது இல்லாமையை அம்மாவுக்கு ஞாபகப்படுத்தக் கூடும் நத்தையைப் போல சுருண்டுகிடக்கும் போர்வையையும், மல்லிகைப் பூ வாசம் கமழந்தபடி இருந்திருக்கும் அந்த மண்ணில் கிளித்தட்டு விளையாட்டில் குழப்படி செய்த நண்பனைப் பறநாயேயென விளித்த உயர்சாதித் திமிரின் குரலும், இராணுவத்தால் சிதைக்கப்பட்ட தோழிக்கு முன்பொருகாலம் நாவற்பழம் பொறுக்கிக் கொடுத்த நினைவுக‌ளுமென‌ இந்தப் பூர்வீக மண்ணின் ஞாபகங்கள் எல்லாவித சந்தோசங்களுடனும் ஆற்றுப்படுத்த முடியாத துயரங்களுடனும் வரைபடமாய் விரிகிறது. தென்னை சூழந்த கடற்கரையில், ஊரின் ஞாபகம் அலையலையாய்க் கிளம்ப விழிகள் இரண்டிலும் ஈரம் கசிந்த ஒரு நாடற்றவனின் குறிப்பாக இந்த எழுத்துக்கள் உருக்கொண்டு அலைகின்றன.

புலம்பெயர் மண்ணில், நோயுற்றிறந்த அம்மம்மாவை நினைவுபடுத்தி அடிக்கடி பஸ்ஸில் பயணிக்கும் தமிழ் மூதாட்டியின் தனிமை, அலைச்சல், துயரம், மெளனம் தொடர்கிறது. அந்நியப்பட்டுப் போன அப்பெண்ணைக் கடந்துபோகும் மனது, இந்த வயதான பெண்களுக்கு எங்கள் சொந்த மண்ணில் எப்படியொரு வாழ்வு இருந்திருக்கக் கூடும் என ஏக்கம் ஒன்றைப் பதிலாகக் கூறுகிறது. சித்ரா பவுர்ணமியன்று ஊர் வைரவர் கோயில் ஞாபகத்திற்கு வருகிறது.

மூன்றாம் தத்தைக் கடந்துவிட்டால் வாழ்வு சுபம் என அடிக்கடி சொன்ன அம்மாவின் வார்த்தைகளும், கீரிமலைக் கேணியில் பாசி வழுக்கி மூழ்கி அதிசயமாய்த் தப்பிப் பிழைத்ததையும், ஒற்றை எஞ்சினுடன் பதினொரு படகுகளில் சவாரி செய்து, தாய் தேசத்திலிருந்து மீண்டு சென்ற கடலின் தத்தையும் ஞாபகச் சூழல்களில் எழுதிச் செல்கிற இளங்கோவின் வரிகள் புலம்பெயர் சூழலில் ஆழ்கடல் தேடி மாறி மாறி வலிக்கும் கானாய் சவாரி உடனான உரையாடலையும் நிகழ்த்திக் காட்டுகிறது. இரு வேறு வாழ்வுலகங்களின் சந்திப்பு இது.

இளங்கோவின் கவிதை முன்னிலைப்படுத்தும் தான் என்பதற்கு மாற்றான மற்றமை பல்வித நிலைகளில் வாசகனுடன் தொடர் உரையாடலை நிகழ்த்துகிறது. காதலின் பிரிவாகவும் அதுவே மற்றொரு நிலையில் புலம்பெயர்தலின் பிரிவாகவும் இணை நிலையில் இயங்குகிறது. இக்கவிதைகளில் வெளிப்படும் நீ/உன் என்பதான எதிர்தரப்பு குறித்த நானின் புரிதல், சிதைவுகளின், அவநம்பிக்கையின் பதற்றத்தின் வரிகளாக விரிவடைகின்றன. இந்த ‘நீ’யும் ஒற்றைத்தன்மையை மீறி இயங்குகிறது. ஒரு பெண்ணின் கடந்தகால துயர் நிறைந்த வாழ்வும் புலம்பெயர்ந்த மனிதனின் துயர் பெருக்கெடுத்து ஓடும் வாழ்வும் இங்கு சந்தித்துக் கொள்கின்றன. வெறுமையின் தடங்களை அழிப்பதன் மர்மமாய் ஏதோ ஒரு பெண்ணின் வருகை நிகழ்கிறது. அந்த ‘நீ’ யாரேனும் ஒருவனின் காதலியாகவோ அல்லது குழந்தையொன்றின் தாயாகவோ கூட இருக்க நேர்கிறது. தனிமையின் வலி உச்சப்படுகையில் அதனை ஒரு பூச்செடியாக வளர்த்து பகிரமுடியாத ஆசைகளையும் பிரியங்களையும் அச்செடியின் இலைகளாகவும் கனிகளாகவும் மலர வைக்கிறது. அந்த ‘நீ’யின் வருகையில் செடியின் உயிர் சாம்பல் நிற முயலாய் உருமாறுகிறது.

‘எவரையும் அனுமதித்திராத/ என் தோட்டமடையும் புதர் படர்ந்த ஒற்றையடிப் பாதையில் மலர்ந்து வந்து/ பிரியம் கூறுகையில் செவியிரண்டும் சிலிர்க்க/ ஒரு சாம்பல் நிற முயலாய் மாறிவிடுகிறது/ எனது செடி.’

இந்த மாற்றுத்தரப்பின் ‘நீ’ ஒரு ஆண்மையத்தின் பாலியல் அதிகாரத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கித் தவிக்கும் குரலாகவும் சன்னதமாக ஒலிக்கிறது. சென்றமுறை மாதவிலக்கு நேரத்தில் நெஞ்சில் தலைசாய்த்து கூந்தல் கோதிய முன்னிராப் பொழுதில் பரிவோடு இருப்பதைப் போல் பிறகும் நீ இருப்பாயா என்று அவனிடம் இறைஞ்சுகிறது. பாலியல் கலவியில் ஆடைகள் களைந்த மூன்றாம் ஜாமத்தில் தன் மூக்குத்தியை மூர்க்கமாய் பிடுங்கி எறியாமலிருக்க வேண்டிக் கொள்கிறது.

என்றாலும் இந்த இருப்பு நிலையற்ற உறவாய் மாறிவிடுகிறது. புரிதலற்ற, முரண்பட்ட, எதிரிடையாய் மோதுகின்ற ஒன்றான இந்த உறவுச் சிதைவின் கோலம் அழிக்கப்பட்ட சுவடின் ரூபமாகிறது. முதுகைக் காட்டிக் குழ்ந்தையாய்ப் போர்வையில் சுருண்டிருக்கும் அவளை விரல்களால் தீண்டவோ இழுத்து அணைப்பதற்கோ உரிய சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஒட்டியிருப்பதை வெட்டி விடலாமென்றால் ரத்தம் தெறிக்கக் கத்தியை முதலில் யார் வீசுவதென்ற தயக்கமும் இருக்கிறது.

இந்த விலகலும் பிரிவும் இளங்கோவின் படிமங்களால் தொட்டுணர்த்தப்படுகிறது. அது அந்திவானத்தில் எதிர்த்திசைகளில் சிறகடித்துப் பறந்துபோய்த் துயர்களை மீட்டிய இரண்டு குருவிகளாகிறது. தேவாலயத்தின் உச்சியிலிருந்து பலகணியில் கரையொதுங்கிய புறாவின் சிறகுகளாகிறது. இந்தச் சிதைவின் படிமம் இன்னொரு தளத்தில் கந்தக‌வெடியையும், ரத்தச் சகதியையும் சுமந்தபடி ஒற்றைச் சிறகுடன் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன.

இளங்கோவின் கவிதைகளில் மரணத்தின் பயம் தொற்றிக் கொள்கிறது.

யன்னலோரத்தில் - நேசம்
நிரம்பி வழிந்த பொழுதில்
தந்திட்ட ஐந்தூரியச் செடி
இரையைக் கவ்வத் துடிக்கும்
மரநாயொன்றின் வன்மத்துடன்
அசையாதென்னைக் கவனிக்கிறது.

நேசத்தின் வெளிப்பாடு கொலை வெறிப் பகையாக உருமாறுகிறது. கொலைகளும் மரணங்களும் இடைவிடாது துரத்தியபடி இருக்கின்றன. ஓநாயின் பற்களில் பிரியம் வைத்தவர்கள் கோரமாய்த் தொங்குகின்றார்கள். ஒழுங்கு தவறாத லயத்தில் வேலை, உறக்கம், கணினி வாசிப்பு என்பதைப் போலக் கொலைகள் நிகழ்தலும் அன்றாட நிகழ்வாகிப் போகிறது. எனக்கொரு கொலை நிகழாக் காலம் வேண்டுமென மனது யாசிக்கிறது. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் தொங்கும் உறைந்துபோன பனியாக மனது இறுகுகின்றது. ஒவ்வொரு காலையும் தற்கொலை செய்வதற்கான தருணமாக மாறுகிறது.

புலம்பெயர் சூழலின் முக்கியப் பிரச்சினைகளாக, ஈழத்தின் நீட்சியாகத் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான படுகொலைகளும் புலம்பெயர்ந்த தமிழ் யுவதிகளின் தர்கொலைச் சாவுகளும் உறவின்மைகளும் மனோவியல் சிக்கல்களும் எழுகின்றன. இந்த வகை கனடிய தமிழ்ச்சூழலின் குரூர இறப்பின் எதார்த்த சுவடுகளை இளங்கோவின் கவிதைகளில் உணரலாம். அந்நியப்பட்டுப் போன மனத்தின் அவலம் சமூகம் நிறுவிய ஆதிக்கங்களின், ஒழுங்குகளின் புழுக்கம் தாங்காமல்

‘கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றி வாழ முடியா
எனது சுயத்தை போதையுடன்’
எனச் சொல்லி சமரசப்படுத்துக்கொண்டு ஒரு விளிம்புநிலை வாழ்வைத் தேர்வு செய்துவிடுகிறது.

புலம்பெயர் வாழ்வு கலாச்சாரச் சிதைவை எதிர்கொள்கிறது. பாலியல் நெருக்கடியும் முரண்பாடும் மனத்தின் பிளவுகளும் உந்தித் தள்ளுகின்றன. நடுநடுங்கியபடி விரகமெழும் உறைபனிக்காலத்தில் கொஞ்சம் கொச்சைத்தமிழும் அதிகம் ஆங்கில‌மும் நாவில் சுழலும் அன்புத் தோழியுடன் மரபுகளைச் சிதைத்தபடி கலவியும் கிறங்கலுமாய்க் கழிகிற வாழ்வு பதிவாகிறது. மழைக்காலத் தெருவில், திசைகள் தெரியாப் புராதனத் தெருக்களில், ஒளியின் அரூப நடனத்துடன் பயங்களற்றுப் பயணிக்கிறது. மதுவருந்தி மயங்கும் வெள்ளியிரவுகள், நள்ளிரவுக்கப்பால் தொடர்கிற மதுவும் நடனமும், மதுபான விடுதியில் கோப்பையை நிறைக்கும் மது, நரம்புகளைத் துளைக்கும் இசை, எனக் களியாட்டங்களாய்ப் புராதன உலகத்திலிருந்தும் புலம்பெயர் உலகத்திலிருந்தும் வேறுபட்ட மூன்றாவது வெளி உருவாகிறது. புத்தர் கூட, அருந்துவதற்கு மிதமாய்க் கலந்து வைத்திருந்த வோட்காவைப் பகிர்ந்தபோது ஒவ்வொரு மிடறும் தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்று கூறுகிறார். சில நேரங்களில் குறியென விறைத்து நிற்கும் துப்பாக்கி முனையின் நினைவு அச்சுறுத்துகையில் கலவியும் காமமும் கூடப் பயம் சார்ந்த வாழ்தலின் குறியீடாகவும் அதிகாரத்தின் பயமுறுத்தலாகவும் உருமாறிவிடுகிறது.

வீடற்றவர்களை நகரம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு செர்ரிப்பூ உதிர்ந்து நிலத்தை வந்தடைவதற்குள் கட்டவேண்டிய கடன் ரசீதுகள் மலைபோல் குவிகின்றன என்பதான புலம்பெயர்ந்தவர்களின் பொருளியல்சார் வாழ்வியல் நெருக்கடியும் வாழ்தலை துரத்துகின்றன. தரிசாகிக் கொண்டிருக்கும் மனத்தில் நீயொரு மரம் நட முயல்கிறாய் இதில் தளிரொன்று அரும்புவது அவ்வளவு இலகுவல்ல என வெறுமையின் தடத்தை வரைந்து காட்டுகிறது.

வாழ்தலை எதிர்நோக்கிய இருப்பிற்கு மாற்றாக மரணத்தை எதிர்நோக்கிய உடல்களின் இருப்பு தயாராகி விடுகிறது. இங்கு உடல்கள் எழுதும் காவியத்தின் முடிவாக மரணம் உருவகப்படுத்தப்படுகிறது. சுற்றிவளைக்கும் துப்பாக்கிகளுக்குக் காணிக்கையாக்கி சவப் பெட்டிகளுக்குள் சடலங்கள் அடுக்கப்படுகின்றன.

இருப்பின் சமன் குலைவு நிகழ, எதிர்பார்க்கப்பட்ட மரணம் என்பதைவிட எதிர்பார்க்கப்படாத தற்செயல் மரணமாக நிகழ்தலை மனது அறிவிக்கிறது. இது எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி குணடடிபட்டு இறக்கும் மரணம் என்பதைத் தாண்டி எதிரிகளை அழிப்பதற்கு உடலையே குண்டாக்கி அழிவின் எல்லையை எட்டும் மரணமாகிறது. எந்தவித அடையாளமற்ற, பெயரற்ற வனாந்தரத்தில் நிகழும் மரணமாக உருமாறுவதற்கும் மனம் தயார் நிலையாகிறது.

தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன் - எனது மரணத்தை.

இளங்கோவின் கவிதைகளில் இடம்பெறும் அழகியல் படிமங்களில் ஒன்று பனி.

இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது குளிர்
நிழல்களைப் போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்

இந்த வரிகள், கடந்தகாலத்தின் துயர் மிகுந்த வரலாற்றை ஞாபகப்படுத்துகிறது. இது ஈழமக்கள் மீது ஏவப்பட்ட ராணுவ வன்முறைகள், படுகொலைகள், பாலியல் சிதைப்புகள், கூட்டு வன்புணர்ச்சி, பலாத்காரம் என்பதான எல்லைகளினூடே பயணப்படுகின்றது.

வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா

எனத் தொடரும் வரிகளில் ஈழப்பெண் கோணேஸ்வரியைப் பத்து இலங்கை காவலர்கள் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கூட்டுப்புணர்ச்சி செய்து அடையாளம் தெரியாமல் சிதைக்க, யோனியில் கிரானைட் வைத்து வெடிக்கச் செய்த வன்கொடுமை மெளன வரலாய்ப் புதைந்துள்ளது.

இலங்கை ராணுவம் மட்டுமல்ல பன்னாட்டு ராணுவம் இலங்கைக்குள் நிகழ்த்தும் தமிழன் மீதான இன அழிப்பும் மிகக் கொடூரமானது. உள்நாட்டுப் போர்ச்சூழலில் முன்பு அமைதியை நிலைநாட்டுவதற்காய் சென்ற அமைதிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமையும் இளங்கோவின் வரிகள் விமர்சனம் செய்கிறது.

எதிர்வீட்டு அக்காவின் ஆடைக்குள்
குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள்
முலைகள் திருகிக் கூட்டாய்ப் படர்கையில்
அசையாய்ச் சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்

இந்த வகை இழப்பீடுகளுக்கு மாற்றாக எதை முன்வைப்பது? அழிக்கபப்டும் உடல்களும் வாழ்வும் பழி தீர்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்கிற கேள்வி சமகால வாழ்வியல் தளத்தில் எழுப்பப்படுகிறது. எல்லா வாசல்களும் மூடப்பட்ட பதற்றமான சூழலில் மிச்சமிருக்கும் முள்வேலிகளுக்குள் வாழும் தமிழர்களின் மறுகுடியேற்றம் என்பதான சிந்தனையோட்டங்களே மிஞ்சுகின்றன. ஒரு படைப்பு நிலையில் நிகழும் சாத்தியம் என்பது பழிதீர்க்கும் படலமாகவே புனைவு எழுத்தில் தோற்றம் கொள்கிறது.

வரலாற்றின் இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும் எழுந்து வந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும் இந்தப் பாவிகளை

என எழுதிச் செல்லும் இளங்கோவின் எழுத்தில் அழிக்கப்பட்டவற்றின் தீவிர அரசியல் மேலெழும்பி வருகிறது.

பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன், தேவதைகள் மழைக்காலத்தில் அனுப்பிய நாககன்னியுடன் பிணைந்து மலர்வித்த குழந்தைகளின் குதூகலத்தை வந்திறங்கிய கடற்கொள்ளையர்கள் அபகரிக்கின்றனர். விரும்பியதைப் புனைந்து விரும்பியதை அருந்தி இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை வன்மத்துடன் புணரத் துடித்த குறிகளின் வசீகரப் பேச்சால் ஆதிமனிதன் தன் சுயத்தைத் தொலைக்கிறான. ஒரு அமாவாசை இரவில் நாககன்னியும் பச்சைக்குத்தப்பட முடியா குழந்தைகளும் கொன்றொழிக்கப்படுகின்றனர். இந்த நாககன்னி தொன்மம் இழந்துபோன ஈழத்தின் குறியீடு. கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனத்தின் வரலாறு.  அழிக்கப்பட்ட வரலாறு புனைவின் உச்சமாகி நம்முடன் செயலூக்கத்திற்கான உணர்வெழுச்சியைப் பகிர்ந்துகொள்கிறது.

(27.11.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

March 27, 2011

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன்

Filed under: நாடற்றவனின் குறிப்ப — டிசே தமிழன் @ 6:27 pm


-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)
ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின் அழிவின் துரத்தல்களாக வெளிப்படுகின்றன. கடலோரத்து கத்தோலிக்கத் தமிழ்க் கிறிஸ்தவமும் தமிழ் இஸ்லாமியமும் தமிழ் இந்து சமய அடையாளஙகளுடனான மோதல்களாகவும் வெளிப்பட்டுக் கொள்கின்றன. தமிழ் அடையாளங்களினூடே ஆதிக்கச் சாதிகளின் செல்வாக்கும் சமூகரீதியான ஒடுக்குமுறை தலித்துக்களின் மீது நிகழ்வதும் படிநிலை சாதீய கட்டுமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்கின்றன. இவற்றின் சூழலில் உயிர் அழிப்பையும், உடல் சிதைப்பையும் புலம்பெயர் படைப்புலகம் முன்னெடுத்துச் செல்கிறது.
இரண்டாயிரத்திற்குப் பிறகான ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளிலும் புலம்பெயர் எழுத்துக்களிலும் நிலவியல்சார் ஒலிகளும் மண்சார்ந்த பெருந்துயர்களும் அனுபவ வெளியினூடே நீக்கமற நிறைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தீவிரமாக எழுதும் ஏறத்தாழ முப்பது கவிஞர்களையாவது அடையாளம் காட்டமுடியும்.
கிளிநொச்சி, வன்னிப்பகுதியின் பிரதேச அடையாளம் சார்ந்த போர்வதைத் துயரத்தையும் குழந்தைமையின் நிராதரவையும் தீபச்செல்வனின் பதுங்குகுழியொன்றில் பிறந்த கவிதை இவ்வாறாக எழுதிச் செல்கிறது. ‘நான் கடும் யுத்தப் பேரழிவின்/ பிறந்ததாய்/ அம்மா சொன்னாள்/ எனது குழந்தையை நான் இந்தப் பதுங்கு குழியில்தான்/பிரசவித்திருக்கிறேன்.’
துவக்குகளின் அதிகாரமும் ராணுவ ஆதிக்கமும் பதற்றங்களே வாழ்வாகிப்போன யாழ்ப்பாண மண்ணின் சிதைந்த வாழ்வை, முகங்களைக் கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள் நடமாடத்தொடங்கிய பிறகு, குழந்தைகள் தெருக்களை இழந்தன என சித்தாந்தன பதிவு செய்கிறார்.
ஈழத்தின் கிழக்குப் பிரதேச வாழ்வுலகத்திலிருந்தும் அனுபவ வெளியிலிருந்தும் உருவாகிய அனார், பஹிமா ஜவஹான், அலறி, றஷ்மி உள்ளிட்ட கவிஞர்கள் படைப்புத் தளத்தில் தீவிரமாக இயங்குகிறார்கள். கவிதைப் புனைவின் வெளிப்பாட்டில் எதிர் அழகியலையும் மாற்றுபிரதிகளின் உருவாக்கத்தையும் செய்கின்ற ரியாஸ் குரானாவின் எழுத்துக்களும், இவ்வகையில் முக்கியமானவை.
இன்றின் புலம்பெயர் கவிதை எழுத்தைப் பேச முற்பட்டால் வ.ஜ.ச செயபாலன், சேரன், தமிழ்நதி, இளங்கோ, திருமாவளவன், த.அகிலன், நிவேதா, மாதுமை எனப் படைப்பாளிகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. எண்பதுகளில் எழுதத் துவங்கிய பழைய தலைமுறைப் படைப்பாளிகளிலிருந்து, சமகாலப் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் என இவ்வரிசை தொடர்கிறது.
முப்பது வயதே நிரம்பிய ஈழத்து இளம்படைப்பாளியான இளங்கோ யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்துப் போர்ச்சூழலில் தன் இளவயதிலேயே அலைக்கழிப்புக்கும், இடம்பெயர்வுக்கும் ஆளாகி தாயக மண்ணிலேயே அகதியாக அலைந்தவர். தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். ஈழத்தில் தான் வாழ்ந்த இருப்பிடம் இராணுவ உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வருவதால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ மண்ணின் உறவுகளையோ பின்னாட்களில் பார்க்க முடிந்ததில்லை என எழுதுவார்.
டிசே தமிழன் எனும் மாற்றுப்பெயரில் இணைய தளங்களிலும், இலக்கிய இதழ்களிலும் படைப்பாளியாகவும் விமர்சகராகவும் அறியப்பட்டவர். இளங்கோ டாட் நெட் வலைப்பக்கத்திலும் இவரது எழுத்துக்களை வாசிக்க முடியும். பின்காலனியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலை எனக் கோட்பாடு சார்ந்த விவாத நிலைகளிலும் படைப்பிலக்கிய வெளிகளிலும் தொடந்த தனது உரையாடல்களின் மூலமாகப் புதிய திறப்புக்களைச் செய்பவர்.
தொன்மவியல் கதாபாத்திரங்கள் மீதான வரலாற்றை அழித்துத் திரும்பவும் சமகாலச் சூழலில் எழுதப்படும் மறு வ‌ர‌லாறாக‌ இளங்கோவின் கவிதைப் புனைவு உருவாகிறது. புத்தர் கவிதைப் பரப்பெங்கும் பன்மை மாதிரியாய் உருவெடுக்கிறார். தமிழ் அடையாள மீட்பில் விகாரையிலிருந்து வெளியேறிய புத்தரும் பங்கெடுத்துக் கொள்கிறார். பூமியெங்கும் பரப்பிவைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஒற்றைக் காலினை இழந்து ஊர் வைரவர் புத்தருக்கு அடைக்கலம் கொடுத்து, தெய்வநிலையிலிருந்து புனைவு நீக்கம் செய்து ஒரு கிராமத்து மனிதனின் சகலவிதமான ஆசாபாசங்களோடு கள்ளுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
புனித விகாரையிலிருந்து வெளியேறிய புத்தர் தனது நீங்கலுக்கான காரணமாகச் சீடர்களான பெளத்த பிக்குகளின் நிலைப்பாடு முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களது முன் படைக்கப்பட்ட குவளைகளில் நிரம்பி இருப்பது ரத்தம்.  இந்த ரத்தம் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தமென்பதை வாசகன் தன்னுணர்வாக புரிந்துகொள்ள முடிகிறது. தியானமும் துறவும் அர்த்தமற்ற வெளிப்பரப்பில் பொருளற்றுப் போகின்றன.
‘நேற்று என்கனவில்/ புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்/ சிவில் உடை அணிந்த அரசகாவலர் அவரைக் கொன்றனர்/ யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே/ அவரது சடலம் குருதியில் கிடந்தது’ என எண்பதுகளில் நுஃமான் எழுதிய புத்தனின் கொலை கவிதையையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். ஹம்சத்வனியின் புத்தனின் நிர்வாணம் என்றதொரு கவிதை ‘மூடிய விழிகளைத் திறந்து பார்த்தபோது/அவனது கால்களை நனைத்தது குருதி ஆறு/ உலகை வெறுத்து போதி மரத்தில் தூக்குப்போட்டுச் செத்தான் புத்தன்’ எனப் புத்தனின் மரணத்தைப் பேசியது. பூர்வீக பெளத்தம் அரச பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளதை இக்கவிதைகள் குறிப்பீடு செய்கின்றன.
இளங்கோவின் கவிதையில் தான் நம்பிய துறவும் தியானமும் அதன் பூர்வீகச் சாரத்தை இழந்துவிட்ட சமகால இருப்பின் துயரம் நெட்டித்தள்ள வனம் நீங்கி புத்தன் பதற்றத்துடன் தன் இல்லம் நோக்கித் திரும்புகிறார். மற்றுமொரு கவிதையில், சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து தூசி தட்டியபடி புத்தர் உயிர்த்தெழுந்து வருவதும் நிகழ்கிறது. நவீன வாழ்வியல் சூழலின் நெருக்கடிகளில் மறு உயிர்ப்பு பெற்ற புத்தரால் ராப் பாடலுக்கு ஆடவும் தெரிகிறது. எனினும் ஒரு கவிதையின் முடிவு இவ்வாறாக எழுதப்படுகிறது.
நேரம் நள்ளிரவைக் கடந்தபோது
வெறுமையான மதுக் கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும் துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும் எனது நான்கு வயது மகளும்
காணாமற் போயிருந்தனர்
ஈழத்துச் சூழலில் நிகழும் சிறார் கடத்தலும் அவர்கள் மீதான வன்முறையும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு அழிக்கப்பட்ட பெண்குழந்தைகளின் துயரமும் மாற்று உருவில் இவ்வரிகளினூடே உயிர்ப்பு பெற்றுள்ளது.
அரச வாழ்வையையும் யசோதரா, ராகுலன் என மனைவி குழந்தை குடும்பத்தையும் விட்டு விலகி சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது எதுவெனும் கேள்வி தொடர்ந்து கேட்டபடி இருக்கிறது. புத்தனின் கண்களில் பெருகும் அமைதி இதயத்தில் உயிர்ப்புடன் கசிந்து பரவுகிறது என்றாலும் புத்தனின் மனைவி யசோதரா ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போதுதான் அந்த அறையிலிருந்து யதோதராவுக்குத் தெரியாமலேயே புத்தர் வெளியேறுகிறார். இந்தப் புறக்கணிப்பின் வெளிப்பாடாகவே இளங்கோவின் யசோதரா மறு உருவாக்கம் பெறுகிறாள். வரலாற்றின் சொல்லப்படாத, மெளனப்படுத்தப்பட்ட பக்கங்களிலிருந்தும் புனைவு கட்டி எழுப்பப்படுகிறது. அறியப்படாத கதை மாந்தர்களின் வருகை நிகழ்வுகளின் சுழல்களோடும் ரணங்களோடும் நானை அழித்த இன்னொன்றாக கவிதைக்குள் பிரதிநித்துவம் பெறுகிறது.
யசோதரா இந்த வகையில் புனிதங்களையும் பராம்பரிய பெருமைகளையும் இழந்துபோன ஒரு அகதி சித்திரத்தின் புலம்பெயர்ந்த குறியீடு. மூலைக்கடை முடக்குத்தெரு பெஞ்சில் வரலாற்றில் தன்னந்தனிமையாய் புத்தனால் கைவிடப்பட்ட யசோதரா தென்படுகிறாள். அகதியாக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட யசோதராவின் இருப்பு சோகமயமானது. பெண் சார்ந்த இருப்பும் காயங்களும் வேறுவிதமானவையென கூறிய யசோதரா செய்யாத தொழிலுக்காகச் சம்பளம் பெறுவதில்லை எனவும் கூறுகிறாள். நவீனத்துவ மேலை வாழ்வின் சாயல் யசோதராவின் மீதும் படர்கிறது. நெடுமிரவில் கண்கூசா வெளிச்சத்தில் கிறீக் உணவும் வைனும் அருந்தி தன் உணர்வுகளை சிகரெட் புகைக்குள் மறைத்தபடி உரையாடிக் கொண்டிருப்பவளாகவும் மாறுகிறாள்.
தமிழ்நதி தன் கவிதையொன்றில் யசோதராவைச் சித்திரப்படுத்துகையில் சாளரத்தின் ஊடே அனுப்பிய/ யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை/ பெளர்ணமி நாளொன்றில் அவன் புத்தனாகிறான்/ இவள் பிச்சியாகினாள்– என எழுதிச் செல்வார். சுழலும் ஒளிவட்டங்களின் பின்னாலிருக்கிறது கவனிக்கப்படாத இருட்டென புத்தனின் மீதும் துறவற ஞானத்தின் மீதும் விமர்சனக் குறிப்பை முன்வைத்து யசோதராவின் மறைக்கப்பட்ட அவலத்தை தமிழ்நதி உணர்த்துகிறார்.
புத்தனோடு தொடர்புறுத்தப்பட்ட தொன்மக் கதையாடல்களில் குவேனியும் கவிதைக்குள் மறு உருவாக்கம் பெறுகிறாள். முதல் சிங்கள மன்னனாகக் கருதப்படும் விஜயனால் முன்னர் திருமணம் செய்யப்பட்டு பாண்டிய நாட்டு இளவரசியை இரண்டாவதாக மணந்து அரசனாக முடிசூட்டிய பின் நாட்டைவிட்டே துரத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்ட தீவொன்றின் குலராணி குவேனி. குவேனியும் புத்தனும் பெளத்த பழங்குடி மரபின் இரு அடையாளங்கள். சங்கமித்ராவின் ஆவேசமும் ஊழிநடனமும் புத்தரின் நட்பிற்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடாகப் படர்கின்றன. அரசமரக்கிளைக்குப் பதிலாக சங்கமித்ராவின் கரங்களில் கொடும் ஆயுதங்கள் முளைக்கின்றன. இந்தக் கொலை வதைப்படலத்தில் புத்தர் குவேனி எனும் இரு சடலங்கள் காலப்பெருவெளியில் மிதக்கின்றன.
வன்முறையும் மரணமும் இருப்பின் யதார்த்தம். இதன் மீள் பிரதியாக்கமே வெவ்வேறான அளவீடுகளில் வெவ்வேறான தொன்மக் கதையாடல்களுடனான கதாபாத்திரங்களோடு கவிதையில் புனைவாய் மாறுகின்றன. யுத்ததிற்கும் அமைதிக்குமான போராட்டம் எல்லையில்லாப் பெருவெளியில் தொடர்ந்து நடக்கிறது. அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான இந்த ஈர்ப்பு சிங்கள இனவாதமாகவும் ராணுவ மேலாதிக்கமாகவும் தமிழர்களின் மீதான இன அழிப்பாகவும் சமகால வாழ்வில் அர்த்தம் பெறுகின்றன.
இளங்கோவின் கவிதைகள் தொடர்ந்து மரணத்தின் பதற்றத்தை எழுதிச் செல்கின்றன. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியும் தூரமும் குறைந்து கொண்டே வருகின்றது. மகிழ்ச்சியும் துயரமும் இடைவிடாது துரத்தியவண்ணம் உள்ளது.
‘ரைபிளை துடைத்தபடிக்கு/ காதலிக்கு முத்தம் கொடுப்பேன்’ என முற்றுபெறாத காதலுக்கும் யுத்தத்திற்குமான உணர்வெழுச்சி வ.ஜ.ச.செயபாலனின் வரிகளில் முன்பு வெளிப்பட்டது. இளங்கோவின் கவிதை இவ்வுணர்ச்சியை வேறு விதமாகப் பிரதியாக்கம் செய்கிறது. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியை அக்கவிதை வரிகள் இவ்வாறு எழுதிச் செல்கிறது.
ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை
இந்த முத்தம் காத‌ல‌ன்-காதலி என்ற ஒற்றைப் பரிமாணத்தைத் தாண்டி குழந்தைக்குத் தந்தை கொடுக்கும் முத்தமாகவும், மகனுக்குத் தாய் கொடுக்கும் முத்தமாகவும், போராளிக்குக் காதலி கொடுக்கும் முத்தமாகவும் இன்னும் பலவாகவும் அர்த்தங்களைப் பல்கிப் பெருக்கி உணர்த்துகிறது.
இரு முத்தங்களுக்கு இடையே கூட மரணம் காத்திருக்கிறது. இது இருப்பின் இல்லாமை சார்ந்த வெளிப்பாடாகும்.
இளங்கோவின் மற்றுமொரு கவிதை இவான் என்னுமொரு சிறுவனைப் பற்றியது. அந்த நீள் கவிதையை இவ்வாறாக வாசித்தும் பார்க்கலாம்.
இன்னமும் உருகிவழியும்
வெம்மையைத் தவிர்க்க
ஏசி நிறையுமென் அறையினுள் நுழைகிறான்
இவான் என்னுமொரு சிறுவன்
வெறுமையையும் முடிவிலா கவலையையும்
அறையினுள் அலையவிட்டு
மேசையில் குழந்தையொன்றின்
குருதி தோய்ந்த படத்தை
வெறித்துக் கொண்டிருப்பவனைக் கண்டு
பதற்றம் நிரம்புகிறது அவனது விழிகளில்
……
……

வந்த இவான்

இடையில் எங்கே போனானென
பதற்றத்துடன் வீடு திரும்புகையில்
முன்னர் மேசையிலிருந்த
குருதி தோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது.
யதார்த்தமும் புனைவும் ஒரு விசித்திரமாக மாறி நிகழும் வன்முறையின் துயரத்தைப் பதிவு செய்கிறது. மேசையின் மீது இருந்த குருதி தோய்ந்த படம் குழந்தையொன்றின் உடலாக மாறுகிறது. இருப்பிற்கும் இல்லாமைக்குமான நுண் உரு இது. சிறார் மரணங்களின் வருத்தமிகுந்த வலி நுட்பமான மொழியினூடாகக் கவிதைப் படிமமாக மாற்றுகிறது.
நாட்டார் தெய்வ — பெளத்த கலாச்சாரங்களின் சந்திப்பு இளங்கோவின் கவிதைகளில் நிகழ்கிறது. மிதிவெடியில் காலை இழந்த ஊர் வைரவர் என்கிற கிராமப்புற நாட்டார் தெய்வ அடையாளம் மட்டுமல்ல, பிள்ளையாரெனும் பெருங்கதையாடலாகிவிட்ட கணேசரின் இருப்பும் பத்திரகாளியின் ஊழி நடனமும் கவிதைக்குள் நடமாடுகின்றன. தமிழர்களின் பாதுகாவலற்ற பதற்றமான இருப்பை இளங்கோவின் வரிகள் இவ்வாறாக கோணேசரின் குறியீட்டு மொழியின் வழி உணர்த்திச் செல்கிறது.
கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு
தமிழ் மூதாதைக்கவி கணியன் பூங்குன்றன் பேசிய யாதும் ஊரே யாவரும் கேளீர், விரிந்த தோழமை பூண்ட மண்ணின் உறவு சமகாலத்தில் சொந்த மண்ணை இழந்த நாடற்றவனின் துயரத்தோடு முரண்படுவதை இளங்கோவின் கவிதை வலிமிகுந்த சொற்களால் உருவாக்குகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்
ஒற்றப் பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்
கணியனுக்கு வாய்த்த ஊர், புலம் பெயர்ந்த ஈழத்தமிழனுக்குக் கிடைக்காமல் போனதுதான் வலிமிகுந்த துயரம்.
சங்கத் தமிழ்த் தொன்ம கதாபாத்திரங்களில் ஒன்றான புறநானூற்று வீரத்தாய் படிமம் இளங்கோவின் கவிதைகளில் மறு உருவாக்கம் பெற்றுள்ளது. போரில் எதிர்களை வீழ்த்த முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான் என்றால் இரு முலைகளையும் அறுத்தெறிவேன் என்ற புறநானூற்றுத்தாய் போருக்காவும் அதன் வெற்றிக்காகவும் எதிரியின் அழிப்பிற்காகவும் சபதமேற்கிறாள். இத்தகைய போரின் மீது ஏற்றப்பட்டிருக்கும் புனிதங்களின் எதிர்மாறான தரப்பாக இளங்கோவின் கவிதை இயங்குகிறது. இது மிகை புனைவு தளத்தில் இயங்கும் கவிமொழியிலிருந்து வேறுபட்டது. யதார்த்த தளத்தில் போரின் வன்கொடுமையால் அழிக்கப்பட்ட மக்கள் வாழ்விலிருந்தும் சிதைவிலிருந்தும் பெரும் துயரிலிருந்தும் மறுதரப்பாய் இக் கவிமொழி இயங்குகிறது. போரில் இறந்துபோன தனது பிள்ளைகளை நினைவுகூரத் தன் முலைகளை அறுத்தெறிகிறாள் இந்தத் தாய். இளங்கோவின் கவிதைப் படிமம் இவ்வாறாக உள் எழுச்சியில் உருவாகி ஒரு புறச்சித்தரிப்பாய் உருவாகி நிற்கிறது.
புறமுதுகிட்டு பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தோத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை நினைவுகூர்கிறாள்
தன் முலைகளை அறுத்தெறிந்து.
என்றாலும் இன்னொருவித மன எழுச்சியில் சங்க இலக்கியத்தின் அகத்துறையான காதலையும், காமத்தையும், பசலை படர்ந்த பிரிவின் துயரத்தையும் பேசுகிற பெண்ணாக இருப்பதற்கு மாற்றாகப் போர்க்களத்தின் வாளாகவும், கவச‌மாகவும் உருமாறும் பெண்ணை முன்னிறுத்தவும் செய்கிறது.
‘பின்னிரவில் மயிலிறகு வீசி/ மடியில் கிடக்கும்/ பிரிவில் பசலை படிந்து வெம்பித் தவிக்கும் / சங்ககாலப் பெண்ணுமல்ல நீ/ போர்க்களத்தில் வீசுகின்ற வாளாகவும்/ தாங்குகின்ற கவசமாகவும் மாறிவிடத் துடிப்பவளின்/ மொழி கிள்ளிப் புனைவேன் கவிதை.’
இவை இரட்டை மனநிலைகளால் கட்டமைக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுநிலைகளாக இளங்கோவின் கவிதைக்குள் உணரலாம். ஒன்று போரின் சாவுகளுக்கு எதிரானதாகவும் மற்றொன்று சாவினைத் தடுக்கும் போரின் தரப்பாகவும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.
(தொடரும்…நீளங்கருதி)
(27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

March 17, 2011

க‌ட‌தாசிப்பூக் குறிப்புக‌ள்

Filed under: குறிப்புகள் — டிசே தமிழன் @ 10:27 am

1.
நஹீப் மஹ்பஷ் எழுதிய ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ (Arabian Nights and Days), ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்’ கதைகளைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். ‘ஆயிரத்தொரு அரேபிய கதைகளின்’ இறுதியில் சுல்தான்(ஷாகிரியார்), கதைகளைச் சொல்லும் ஷஹாரஜாத்தைக் கொல்லாது, மன்னித்து மணமுடிக்கப் போவதாக முடிகிறது.  இங்கே, ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ நாவலில் மணவிழாவிற்கான கொண்டாட்டங்களோடு, நாட்டின் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கதை தொடங்குகின்றது. ஆனால் சுல்தானை மணமுடிக்க இருக்கும் ஷஹரஜாத் உண்மையில் நாடு நிம்மதியாக இல்லையென தனக்குத் தெரிந்த, நாட்டில் நிகழும் கதைகளைச் சொல்லத் தொடங்குகின்றார். பூதங்களும் (Genie) அதிகாரம் மிக்க மனிதர்களும், மாறி மாறிக் கொலைகளையும், வன்புணர்வுகளையும் செய்ய நாடே கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதாய் ஷஹாரஜாத்தின் பார்வை வழியே கதை சொல்லப்படுகின்றது. ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில்’ ஒவ்வொரு கதைகளின் முடிவிலிருந்தும் இன்னொரு கதை கிளைத்தெழுவதுபோல, இந்நாவலிலிலும் அநேக அத்தியாயங்களில் ஒரு கதாபாத்திரத்தின் கதை முடிய இன்னொரு புதிய பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய கதாபாத்திரத்தின் வழியே கதை சொல்லப்படுகின்றது. இதற்கு நிகரான ஒரு கதைசொல்லல் முறையே ஒர்ஹான் பாமுக்கின், ‘எனது பெயர் சிவப்பிலும்” (My name is Red ) பின்பற்றப்படுவதை நாம் கவனிக்கலாம். இறுதியில் பூதங்கள் அல்லது பூதங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களே நாட்டின் அதிகாரமிக்கவர்களாய் மாறுவதாய் கதை முடிக்கப்பட்டிருக்கும்.

உண்மையில் இந்நாவல், ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின்’ நீட்சி எனச் சொல்லப்பட்டாலும் இது ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்’ கதையை நிகழ்காலத்திற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்கின்றது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் துஷ்பிரயோகத்தினால் ஒரு நாடே கொந்தளிப்பாக மாறி, அச்சமும் பீதியும் எல்லா இடங்களிலும் பரவிப் பாய்கின்றது என்ப‌தை இந்நாவ‌ல் மிக‌ நுட்ப‌மாக ப‌திவு செய்கிற‌து. இந்தக் கொந்தளிப்பின் நிமித்தம் அநீதியானவர்கள் மட்டுமின்றி நேர்மையானவர்களும் பலியிடப்படுகின்றனர் என்பதை இந்நாவலில் எக்குற்றங்களையும் செய்யாத அலாவுதீன் போன்றோர் வீணே தூக்குத் தண்டனைக்கு ஆளாவதை உதார‌ண‌ங்க‌ளாய் எடுத்துக் கொள்ள‌லாம். அலாவுதீனில் ஆசானாய் இருந்து, தன் மகளான சூபிடாவை மணமுடித்து வைக்கின்ற சீக்கிடம் (Sheikh), ஏன் அலாவுதீன் அநியாயமாய்க் கொல்லப்பட்டார் எனக்கேட்கப்படும்போது, ‘I prayed to Almighty God and gave myself over to death, relinquishing all hope in human beings. When night fell I heard a movement at the surface of the hole. As I listened to it the mouth of hole was opened and I saw a large animal like dragon. It let down its tail to me and I knew that God had sent it to rescue me. I clung on to its tail and it drew me up. Then a voice from the heavens called out to me, “We have saved you from death with death.” (p 171) என ஒரு மரணத்தைக் தவிர்க்க இன்னொரு மரணமே வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. அந்த மரணம் இன்னொரு அப்பாவியான அலாவுதீனின் மரணமாக இங்கே அமைந்திருக்கிற‌து.

மாயத்தன்மை நிறைந்த புதிர்கள் நிறைந்த உலகிற்கு இந்நாவல் வாசிக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது. ஒருவர் கொல்லப்படுவதற்கு அல்லது கொலையாளியாவதற்கு எப்போதும் உறுதியான காரணங்கள் இருப்பதேயில்லை. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடில்லாது ஒரு சிறுசந்தேகம் அல்லது முன்பகை ஒருவருக்கு உடனேயே தீர்ப்பளித்து மரணதணடனை கொடுக்க்கப்படுவதற்கு போதுமாயிருக்கிறது. இந்நாவலை நாம் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து உருவாகும் எந்தத் தலைமையிடமும், எந்த நாட்டோடும் கூட பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். நஹீப் மஹ்பஷின் கதைசொல்லும் முறையின் ஆளுமை மொழிபெயர்ப்பினூடாகவே சிலாகிக்க முடிகிறதென்றால் மூலமொழியில் இன்னும் வனப்பாகவே இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை. சிலவேளைகளில் பூதங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுத்து கொலைகளைச் செய்யத் தூண்டிவிட்டு இடைநடுவில் அவர்களைக் கைவிட்டு விடுகின்றன‌. பிறசமயங்களில் அவர்களுக்கு மறுபிறப்புக் கொடுத்து அவர்கள் வாழ்ந்த நகரங்களில் வேறு ந‌ப‌ர்க‌ளாக‌ உருமாற்றி வாழவும் விடுகின்றன. அவ்வாறான பொழுதுகளில் தமக்குத் தெரிந்த மனிதர்கள் எல்லோரும் அந்நியராகப் போகும் விந்தைகளை மஹ்பஷ் அழகாக விவரிக்கின்றார். இன்னொருவிதத்தில் பார்த்தால் இது எப்போதும் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ‘இருத்தலியச் சிக்கல்’தான் என்பதாகவும் வாசித்துக்கொள்ளலாம்.

2.
‘Veronica Guerin’ திரைப்படம் ஒரு பத்திரிகையாளரின் கதையைச் சொல்லும் படம். அயர்லாந்தின் வறுமையை தமக்குச் சாதகமாக்கி பதின்மர்களை அதிகம் குறிவைத்து இயங்கிய போதைமருந்து மன்னர்களை அம்பலப்படுத்தி எழுதிய வெரோனிக்கா என்கின்ற‌ பெண்ணே இதில் முக்கிய‌ பாத்திர‌மாக‌ வ‌ருகிறார். . எதற்கும் அஞ்சாது உண்மைகளை எழுதுவேன் என உறுதியாக இருந்த வெரோனிக்காவை அவரது 38 வயதிலேயே இந்தப் போதைமருந்துக் கும்பல் கொலை செய்தது. ஆனால் வெரோனிக்காவின் மரணம் ட்பளினையே உலுக்கி சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய வழிகோலியிருக்கிறது. Criminal Assets Bureau Act வெரோனிக்காவின் மரணத்தின் பின் அறிமுகப்படுத்தபட்டு, சட்டவிரோத செயல்களைச் செய்து வரும் பணத்தால் வாங்கும் சொத்து எதுவாயினும், அவை அனைத்தும் அரசால் சுவீகரிக்கப்படும் எனகின்ற சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் நிமித்தம் பல போதைமருந்துக் கும்பல்களின் தலைவர்களின் சொத்துக்கள் அயர்லாந்தில் பறிக்கப்பட்டிருக்கின்றது. இச்சட்டத்தின் பின்னர் பதின்மர்களிடையே இருந்த போதைமருந்துப் பயன்பாடு அடுத்தடுத்த வருடங்களில் 15% மாக அய‌ர்லாந்தில் குறைந்ததாக இப்படத்தின் முடிவில் கூறப்படுகின்றது. இச்சட்டம் அமுலாக்கப்பட்டதைப் போல வெரோனிக்காவின் கொலையோடு சம்பந்தப்பட்ட பலருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. வெரோனிக்காவின் கொலை 1996ல் நிகழ்ந்திருந்தாலும் சென்ற வருடம் கூட இதுவரை தலைமறைவாக ஓடி ஒளித்திருந்த ஒருவர் பிடிப‌ட்டுமிருக்கிறார்.

வெரோனிக்கா ஒரு மகனுக்குத் தாயாக இருந்தபோதும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உண்மையை வெளிக்கொணர்வேன் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர். கொலைப் பயமுறுத்தல்கள் மட்டுமில்லாது, அவரது வீட்டுக்கு வந்து அவரைத் தொடையில் சுட்டபோதும் அச்சமின்றி எழுதிக்கொண்டிருந்த வெரோனிக்காவை, இப்படி இனியும் எழுதுவதை நிறுத்தச் சொல்கிறார் அவரின் கணவர். அப்போது, ‘தெருக்களில் போய் அங்கே போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் பதின்மர்களைக் கண்ட என்னைப் போன்ற ஒருவராய் நீ இருந்தால் உன்னால் கூட இவற்றை எழுதாமல் சும்மா இருக்கமுடியாது’ என்று தன் கணவருக்குக் கூறுகின்றார். அதுபோல் செய்தி சேகரிப்பதற்காய் போதைமருந்துக் கும்பலின் தலைவர் ஒருவரிடம் செல்லும்போது மிகமோசமாய் தாக்கப்படுகின்றார். நிகழ்ந்ததை வெளியே சொன்னால் உனது மகனை வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலையும் செய்வோமென வெரோனிக்கா அவரால் பயமுறுத்தப்படுகின்றார். இவ்வளவு நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் இயங்கிக்கொண்டிருந்த வெரோனிக்காவை ஒரு பகல்பொழுதில் காரில் போகும்போது கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொல்கின்றனர். இத் திரைப்படம் முடிகின்றபோது Sinead O’Connor ன் ‘One more day’ ( http://www.youtube.com/watch?v=mFyiWlp13a8&feature=related ) ஒலிக்கும்போது ஒரு கணமாவது வெரோனிக்காவின் வாழ்வை மீள நினைக்காமல் இருக்கமுடியாது. ஜ‌ன‌நாய‌க‌ வ‌ழிமுறைக‌ள் கைக்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ ஒரு நாட்டில், ஒரு ப‌த்திரிகையாள‌ர் கொலைசெய்ய‌ப்ப‌டும்போது பெரும் கொந்த‌ளிப்பே நிக‌ழ்கின்ற‌து. ஆனால் எத்த‌னையோ நேர்மையான‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் கொலைசெய்ய‌ப்ப‌ட்டும், க‌ட‌த்த‌ப்ப‌ட்டும், காணாம‌ற்போகின்ற‌போதும் அதுகுறித்த‌ அச‌ம‌ந்த‌ப்போக்கும் மூடிம‌றைப்புக்க‌ளுமே இல‌ங்கை போன்ற‌ ‘ச‌ன‌நாய‌க‌ சோச‌லிச‌’ நாடுக‌ளில் நிக‌ழ்வ‌தையும் நாம் இந்த‌க் க‌ண‌த்தில் நினைவுப‌டுத்திக் கொள்ள‌லாம்.

3.
வண்ணநிலவனின் வாசிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ‘கம்பாநதி’யையும், ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வையும் அண்மையில்தான் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்பம் வாய்த்த‌து . இர‌ண்டாயிர‌த்தின் தொடக்கத்தில் வாசித்த வண்ணநிலவனின் ‘கடல்புறத்தில்’ தந்த நெருக்கமும் நெகிழ்ச்சியும் என்றைக்குமே மறக்கமுடியாது. ‘கடல்புறத்தை இப்போது மீண்டும் வாசித்தால் அதே அனுபவத்தைத் தருமா என்பதும் சந்தேகமே. ‘கடல்புரத்திலும்’ , ‘ஜே ஜே சில குறிப்புகளை’யும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வாசித்தாலும், ஜே.ஜே. சில குறிப்புகள் பின் தங்கிவிட இன்றும் கடல்புறத்தில்’ மனதில் மித‌ந்துகொண்டிருக்கிற‌து.

‘கம்பா நதி’ ஒரு வேலையைத் தேடுகின்ற இளைஞனின் கதையோடு அவனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை விபரிக்கின்றது. இக்கதையில் வேலைக்காய் நேர்முகத்திற்காய் போகின்ற இளைஞனின் அவஸ்தைகளை நம்மில் அநேகர் சந்தித்திருக்கக் கூடியவை; அனுபவித்திருக்கக் கூடியவை. வேலை தேடிக்கொண்டிருக்கும் பாப்பையாவின் இன்னமும் திருமணம் முடிக்காத அக்கா சிவகாமி, பாப்பையா விரும்புகின்ற கோமதி, பாப்பையாவையோ சிவகாமியையோ பற்றி அக்கறையில்லாது குடியும், இன்னொரு மனைவியும் வைத்துக்கொண்டு திரிகின்ற பாப்பையாவின் தகப்பன் சங்கரன்பிள்ளை…என இந்நாவலில் வரும் பாத்திரங்களை எல்லாம் நாம் சந்தித்திருக்கக் கூடியவர்கள், சிலவேளைகளில் அந்தப் பாத்திரங்களில் ஒருவராக நாமே இருக்கக்கூடியவர்களும் கூட.  நகரும் வாழ்க்கை எல்லா அவமானங்களையும் தோல்விகளையும் தின்று செரித்திருக்கக்கூடியதுதான், ஆனால் அவ்வப்போது சிறுபொறி பழைய நினைவுகளை சரசரவென்று பற்றவைத்துவிடுகின்றது. கோமதியின் திருமணத்தின்போது மிதமிஞ்சிக் குடித்து தெருவில் கிடக்கிற சங்கரன்பிள்ளை, அவளுக்கு அவரின் மகனான பாப்பையாவை மீள நினைக்கும்படி செய்துவிடுவதும் அப்படித்தான்.

‘கம்பாநதி’யில் குறிப்பிடப்படுகின்ற ரெயினீஸ் ஜயர் தெரு, டாரதி எல்லாம் வண்ணநிலவன் இரண்டு வருடங்களுக்குப் பின் எழுதுகின்ற ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வில் விரிவாக வருகின்றார்கள்/வருகின்றது. இன்னொருவிதமாக இது ‘ரெயினீஸ் ஐயர் தெருவில்’ இருக்கும் குடும்பங்களைப் பற்றிய விரிவான கதை எனச் சொல்லலாம். ‘கம்பாநதி’யில் நதி எல்லோரும் குவிகின்ற ஒரு மையமாக வருகின்றதோ அவ்வாறே ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வில் ஒரு தெரு முக்கிய பாத்திர‌மாய் வருகின்றது. வழக்கமாய் ஒரு தெருவில் இருக்கும் குடும்பங்களிடையே வரும் சண்டைகளும், சச்சரவுகளும், சமாளிப்புக்களும், கள்ளத்தனங்களும், உளவறிதல்களும் இந்நாவலில் மெல்லியதாகச் சித்தரிக்கப்படுகின்றது. ரெயினீஸ் ஐயர் தெருவில் வழமைபோல பெய்கின்ற மழையோடு நாவல் நிறைவுபெறுகிறது. மழைக்காலத்தில் மனிதர்களை நம்மால் ஒருபோதும் வெறுக்கமுடியாது என்று நாவலில் கூறப்படுவதுபோல வாசிக்கும் நம்மாலும் இந்நாவலின் பாத்திரம் எதனையும் வெறுக்கமுடியாதுதான் இருக்கிறது. ஆனால் இந்நாவலில் வரும் ‘கல்யாணி அண்ணன்’ என்கின்ற பாத்திரம் ஏன் எப்போதும் ஒரு தேவதூதரைப் போல ‘வித்தியாசமாகச்’ சித்தரிக்கப்படுகின்றது என்பதுதான் புரியவில்லை.

எல்லோருக்கும் மிகப் பிடித்தமான, எப்போதும் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கும் அலீஸ் இளவயதில் இறப்பது, எஸதர் சித்திக்கு அவரின் பெறாமகனாய் இருக்கின்ற சாம்சனோடு உடல் சார்ந்த உறவு இருப்பது, எப்போதும் குடியும், தறுதலையுமாய் இருக்கும் தியோடர், முதிர்ந்த தம்பதிகளான ஆசீர்வாதம் - ரெபேக்காளுக்கு உதவி செய்வதற்கு ஒருபோதும் தயங்காதது…. என வாழ்க்கை வித்தியாசமான மனிதர்களையும் அவர்களின் விசித்திரமான மனோநிலைகளையும் வரைந்துகொண்டே இருக்கிறது. இருதயத்து ரீச்சர் வீட்டுக்குள் குறுக்கு மறுக்குமாய் ஓடும் கோழிகளும், மழை பெய்யும் நாட்களில் நீரை ஊறச்செய்ய வாசல்களில் விரிக்கும் சாக்குப்பைகளும் ஊர்களில் வாழ்ந்திருப்பவர்க்கு இன்னும் நெருக்கத்தைத் தரும் படிமங்கள். ஆனால் பெரிய பிள்ளையாக ஆகும் ஜீனோ, ‘அம்மாவோ இன்னொரு மனுஷியாகத் தெரிந்தாள். மிக மோசமான, தாழ்ந்த குலப் பெண்ணாக அம்மா இருந்தாள்’ என நினைக்கும்போதுதான் சற்று நெருடுகின்றது. வயதுக்கு வரும் பெண்களுக்கு அம்மாவுடனான ஒரு விலகல் ஏற்படலாம். ஆனால் அது ஏன் ‘மோசமான, தாழ்ந்த குலப்பெண்ணாக’ சித்தரிக்கப்படுகின்றது என யோசிக்கும்போது இது ஜீனோவின் உள்மனக்குரலா அல்லது வண்ணநிலவனின் விருப்புச்சார்ந்த ஒலிப்பா என கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் ‘தாழ்ந்த குலம்’ பற்றிய வர்ணிப்புக்கள் வருகின்றது. நாவல் எழுதப்பட்ட 81களில்தான் இந்தப் ‘பிரக்ஞை’கள் இல்லையென்பதை ஒரு சாட்டாக முன்வைத்தாலும், நான் வாசித்த நர்மதா பதிப்பாக 2001ல் வந்த மறுபதிப்பிலாவது திருத்தி எழுதியிருக்கலாமென நினைக்கிறேன். சாதாரண நிகழ்வுகளின் விடுபட்டவைகளை நுட்பமாகச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி என மதிப்பிடப்படுகின்ற வண்ணநிலவன்…எப்போதும் மனிதர்களை அவர்களின் பலங்களோடு அன்றி அவர்களின் பலவீனங்களோடும் நேசிக்கச் சொல்லும் வண்ணநிலவன், இவ்வாறான ‘தாழ்ந்த சாதி’ என எழுதுவதும், தாழ்ந்த சாதி அல்ல தாழ்த்தப்பட்ட சாதிகளாக்கியதே ஆதிக்கசாதிகள் தான் என்பதை உணர மறுப்பதுதான் என்னளவில் வியப்பாயிருக்கிறது. வண்ணநிலவன் என்ற படைப்பாளியின் இந்தப் பலவீனங்களோடு (இவ்வாறான விடயங்களை அவர் மாற்றவேண்டுமென தெளிவாய் வலியுறுத்தியபடியும்) எனக்கு கம்பா நதியும், ரெயினீஸ் ஐயர் தெருவும் பிடித்திருந்தன என்பதையும், அவை எழுதப்பட்ட காலங்களில் அவை ஒரு பாய்ச்சல்தான் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

4.
இவ்வருடத்திற்கான ‘இயல்விருது’ எஸ்.பொன்னுத்துரைக்கு வழங்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சி தருகின்ற செய்தி. ஈழத்து இலக்கியம் சார்ந்து சில விடயங்களை விரிவாக எழுதுவதற்காய் எனக்குப் பிடித்தவர்களை பட்டியலிட்டபோது, ஒரு முக்கோணத்தின் மூன்று நுனிகளில் வருகின்றவர்களாய் மு.தளையசிங்கத்தையும், பிரமிளையும், எஸ்.பொவையுமே குறியிட்டு வைத்திருக்கிறேன். அந்த முக்கோணத்தை இன்னுமிர‌ண்டு கோடுக‌ளால் நீட்டித்து  சாய்சதுரமாய் ஆக்கினால் அதில் வரக்கூடியவர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் என்பதாய்த் தீர்மானித்திருந்தேன். அவர்களுக்குள்ளால் மேலும் விரியக்கூடியது முற்போக்கு இலக்கியக்க்காரர்களின் பட்டியல்.

1999ன் பிற்பகுதியில் என நினைக்கிறேன். முதன் முதலாக செல்வத்தின் ‘வாழும் தமிழ்’ கண்காட்சியிற்கு சென்றபோது இரண்டு நூற்களை வாங்கினேன். ஒன்று சு.ராவின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ மற்றது எஸ்.பொவின் ‘ஆண்மை’. அதுவரை பாலகுமாரனை ஒரு குருவாய் நினைத்து அவரின் படைப்புக்களுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்தவனை கை நீட்டி இன்னொரு திசையில் அழைத்துச் சென்றவர்கள் சு.ராவும், எஸ்.பொவும்தான். அதேபோன்று எஸ்.பொவை 2000ல், காலச்சுவடு ‘தமிழ் இனி’ நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் கனடாவில் சந்திக்க முடிந்திருந்தது. அப்போது எஸ்.போ புலம்பெயர் இலக்கியத்தை எவரெஸ்டின் சிகரத்தில் ஏற்றிவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு உலக நாடுகளாய் சென்று தமிழ் ஊழியம் செய்துகொண்டிருந்த காலகட்டம். ஒரு முழுநாள் நிகழ்வாய் எஸ்.பொ அந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார். கனடாவில் இருந்த பல்வேறுபட்ட படைப்பாளிகளை ஒரேயிடத்தில் சந்தித்த பொழுது அது. அப்படி ஒரு அரங்கு நிறைந்த/நிறைவான கூட்டத்தை அதன்பின்னர் எப்போதும் கண்டதுமில்லை. பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் விட எஸ்.பொவின் அன்றைய காலத்தில் வெளிவந்த படைப்புக்கள் எல்லாவற்றையும் (’தீ’, ‘சடங்கு’, ‘இனி’) போன்றவற்றையும் வாங்க முடிந்திருந்தது. எஸ்.பொவின் ‘ஆண்மை’யை வாசித்த இன்பத்தில் அவரைத் தொடர்ந்து பின் தொடர்ந்தபடியே இருந்தேன். பிறகு இன்னொரு கூட்டம் இது தமிழில் பட்டம் பெறப்படிப்பவர்கள் படிக்கும் இடத்தில் நடந்தது. எஸ்.பொ எப்படி முதல் நிகழ்வில் தன்னை கைலாசபதி,சிவத்தம்பி எப்படி புறக்கணித்தார்கள் என்று விரிவாகப் பேசினாரோ இங்கேயும் அதேயே பேசினார். படித்துக்கொண்டிருந்த சில பெண்கள் சிவத்தம்பியிடமும் படித்தவர்கள். ஆகவே அவர்கள் தம் குருவை விட்டுக்கொடுக்காது எஸ்.பொவை திரும்பிக் கேள்விகள் கேட்டு மடக்கினார்கள். எஸ்.பொவும் கோபம் வந்து ‘என்னிடம் கேள்வி கேட்பதுபோல நீங்கள் சிவத்தம்பியிடம் கேட்டிருந்தீர்களா?’ எனத் திருப்பி மடக்கினார். இரண்டு தரப்பிடமும் தீ பற்றாத குறைதான். இரண்டு கூட்டங்களின் அனுபவத்தின்படி எஸ்.பொ என்ன பேசுவார் என்ற ‘வித்தை’ கைவரப் பெற்றதால், அவரைப் பின் தொடர்வதைவிட எனக்குப் பிடித்த அவரின் படைப்புக்களைப் பின் தொடர்வதே சிறந்தது என -அவரின் கூட்ட உரைகளுக்குப் போவதை மறந்துவிட்டு- வாசிப்பில் கவனஞ்செலுத்தினேன்.

எஸ்.பொ ஒரு சிறந்த கதை சொல்லி. அதை மறுத்துக் கூறும் எவரோடும் எங்கும் உரையாடுவதற்குத் தயாரகவே இருக்கின்றேன். சமஸ்கிருத வார்த்தைகள் அளவுக்கதிகமாய் அவரது படைப்புக்களில் சிலவேளைகளில் பெருக்கெடுத்தாலும் அவர் தன் படைப்புக்கள் புதிய சொற்கள் பலதை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அதற்கு அவர் கற்றிருக்கக்கூடிய பைபிள் கைகொடுத்திருக்கலாம்தான். எனினும் அதைத் தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய நுட்பம் எஸ்.பொவுக்கு மிக எளிதாக வாய்த்திருக்கிறது. சடங்கில் மிக நுட்பமாய் பதியப்பட்ட யாழ்ப்பாணிகளின் வாழ்க்கையை நாம் மறந்துவிடக்கூடுமா என்ன? ஆனால் நான் விதந்தோத்துகிற எஸ்.பொதான் கட்டுரையாக எழுதக்கூடிய ‘மாயினியை’ ஒரு மோசமாக நாவலாகத் தந்திருக்கின்றார் என்பதையும் மறந்துவிடமுடியாது. மரபார்ந்த மார்க்சியர்களை கேள்வி கேட்டு எழுதியபோது -அவ்வப்போது சண்டைபிடிப்பதும் கட்டியணைப்ப்துமாய் - இருக்கின்ற நண்பர் ‘நீயெல்லாம் எஸ்பொ ஏற்கனவே வைத்திருக்கும் பட்டுக்குஞ்சத்தையே தலையில் போடத்தான் லாயக்கானவன்’ என்றபோது….எந்தப் பட்டமும் விரும்பாதபோதும் இந்தக் குஞ்சம் எனக்குப் பிடித்தமாய்தான் இருந்தது.  ஆக, இவ்வாறு எனக்குப்பிடித்த எஸ்.பொவுக்கு, ஒரு சிறந்த படைப்பாளியான அவருக்கு,  இயல் விருதுக்குழு இயல்விருதை வழங்கி தன்னைக் கவுரவித்திருக்கிறது எனத்தான் சொல்லவேண்டும்.

நிகழ்வு முடிந்து எஸ்.பொ போய்க்கொண்டிருக்கின்றார். ‘ஆண்மை’யில் இருக்கும் கதையில் அக்கா என்கிற கதாபாத்திரம் மிக இளவயதான ஒரு சிறுவனிடம் (உடல்) உறவு வைத்திருக்கிறார். இதையெல்லாம் கதையில் எழுதுவது நியாயமா? என ஒரு அப்பாவியாய் எஸ்.பொவிடம் கேட்கிறேன். எஸ்.பொ ஒரு முறை என்னை உற்றுப் பார்த்தார். பிறகு. ‘இதெல்லாம் யதார்த்தில் நடந்திருக்கிறது. அதைத்தான் எழுதினேன், தவறு சரியெல்லாம் கதைகளில் அடங்காது’ என்கிறார். எனக்கு அந்தக் கதையை வாசித்தபோது, அதில் பட்டும்படாமலும் கதையில் வரும் அக்காவுக்கும் சிறுவனுக்கும் உறவு இருந்தென்பது விளங்கியது, அதை உறுதிப்படுத்தத்தான் எஸ்.பொவிடம் கேட்டேன். நான் நினைத்தது சரிதான் என என் வாசிப்புப் பற்றிய நம்பிக்கையில் உற்சாகமடைந்தேன். எஸ்.பொ அடுத்த நிகழ்வொன்றுக்காய் தன் உறவினர்கள் புடைசூழ யாரோ போட்டிருந்த மாலை கழுத்தில் தொங்க நடந்துபோய்க்கொண்டிருந்தார்.
………………………….
*க‌ட‌தாசிப்பூவின் இன்னொருபெய‌ர் போக‌ன்வில்லா

February 19, 2011

ஷோபாசக்தியின் பதில்கள்: சில அவதானங்கள்

Filed under: ஷோபாசக்தி — டிசே தமிழன் @ 12:57 pm
ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பகுதி 03
ஷோபாசக்தி எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களை முன்வைத்து சில குறிப்புக்களை எழுதுகின்றேன். கேள்வி பதில்…பிறகு பதிலுக்கு மேலும் கேள்விகள் என ஒரு முடிவுறாத வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பதற்காய் சில அவதானக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.
எனது கேள்விகளுக்கும், ஷோபாசக்தி அளித்து பதில்களுக்குமாய் இங்கே செல்லவும்.
(1) ஷோபா குறிப்பிட்ட‌ மாற்ற‌ம்/மாற்ற‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ள் என்ப‌வ‌ற்றையும் நானும் ஒப்புக்கொள்கின்றேன். கால‌ச்சுவ‌டு, இந்தியா ரூடே போன்ற‌வ‌ற்றில் எழுதிக்கொண்டிருந்த‌ ர‌விக்குமார்,ராஜ்கெள‌த‌ம‌ன் போன்ற‌வ‌ர்க‌ளையும் அதே நிலைப்பாட்டிலேயே நானும் ஆத‌ரித்து வ‌ந்திருக்கின்றேன். அதை என‌து த‌ள‌த்திலும் எழுதியுமிருக்கின்றேன்.
நான் சுட்ட‌ விரும்பிய‌து, மாற்ற‌த்தைய‌ல்ல‌. புல‌ம்பெய‌ர் சூழ‌லில் இல‌க்கிய‌ச் செய‌ற்பாடுக‌ளுக்கும், ச‌ஞ்சிகைக‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கும் எவ்வ‌ள‌வு அல்லாட‌ வேண்டியிருக்கிற‌து என‌ நாமெல்லோரும் அறிவோம். ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில் என‌க்கும், ந‌ண்ப‌னொருவ‌ருக்கும் ச‌ஞ்சிகை வெளியிடும் ஆசை வ‌ந்து, அப்போது இங்கு வ‌ந்திருந்த‌ ‘உயிர்நிழ‌ல்’ க‌லைச்செல்வ‌னோடும் இது ப‌ற்றி உரையாடியிருந்தோம். அவ‌ர் தான் ‘உயிர்நிழ‌ல்’ வ‌ருவ‌த‌ற்காய், தான் வேலை செய்துவ‌ரும் ப‌ண‌ம் முழுவ‌தையுமே செல‌விட‌வேண்டியிருக்கிற‌தென‌ அது குறித்த‌ இட‌ர்க‌ளை எங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்திருந்தார். மேலும் ‘உயிர்நிழல்’ ச‌ஞ்சிகையை இல‌ங்கை/இந்தியாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விற்ப‌தில்லையென்ற‌ முடிவில் அவ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌வே அனுப்புவ‌தாய்க் குறிப்பிட்ட‌தும் நினைவு. என‌வே உயிர்நிழ‌லோ, எக்ஸிலோ பிற‌ ச‌ஞ்சிகைக‌ளோ புக‌லிட‌ சூழ‌லிருந்து மிகுந்த‌ நெருக்க‌டிகளிலிருந்தே வெளிவ‌ந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். எக்ஸில் ச‌ஞ்சிகையின் ஆசிரிய‌ர் குழுவில் இருந்த‌வ‌ர்க‌ளின்(?) அர‌சிய‌ல் என‌க்கு உட‌ன்பாடில்லாவிட்டாலும், அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகையில் பிர‌சுரிக்கும்போது, சாதி வெறிய‌ர்க‌ளிட‌மோ/ம‌த‌ வெறிய‌ர்க‌ளிட‌மோ போக‌மாட்டார்க‌ள் என்ப‌தை நிச்ச‌யமாக என்னைவிட‌ ஷோபாச‌க்தி ந‌ன்கு அறிவார். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகைக‌ளில் சேர்ப்ப‌தை விம‌ர்சித்த‌ ஷோபா, த‌ம‌து வியாபார‌ நோக்க‌ங்க‌ளுக்காய் எந்த‌ அடிப்ப‌டை அற‌முமில்லாது விள‌ம்ப‌ர‌ங்க‌ளைப் பிர‌சுரிக்கும் நிறுவ‌ன‌ங்க‌ளின் சஞ்சிகைக‌ளில் எழுத‌ப்போகும்போது, எக்ஸில் ச‌ஞ்சிகை ந‌ட‌த்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் த‌ன‌து த‌வ‌றை உண‌ர்ந்து ம‌ன்னிப்புக் கேட்டிருப்பாரா என்ப‌து கேள்விக்குரிய‌து. நாம் யாரை விம‌ர்சிக்கின்றோம் என்ப‌தையோ அல்ல‌து எப்போது நாம் மாறுகின்றோம் என்ப‌தையோ த‌வ‌றென‌ச் சொல்ல‌ வர‌வில்லை. ஆனால் கால‌நேர‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ ந‌ம‌க்கு எது சாத‌க‌மாக‌ இருக்கின்றோமே அதைச் செய்துவிட்டு ‘சும்மா சாட்டு’ பிற‌கு சொல்வ‌த‌ற்கு இன்னொரு பெய‌ர் ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம் என்ப‌தையும் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.
இந்த‌ விட‌ய‌த்துக்கு இன்னொரு உதார‌ண‌த்தையும் பார்ப்போம். புதிய‌ பார்வை என்றொரு ச‌ஞ்சிகையை எல்லோருக்கும் தெரியும். அந்த‌ ச‌ஞ்சிகையின் ப‌திப்பாசிரிய‌ர் ந‌ட‌ராஜ‌ன். அவ‌ரின் சாதி எதுவென‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதே ச‌ஞ்சிகையில் அ.மார்க்ஸ் ப‌த்திக‌ள் எழுதிவ‌ருகின்றார். முத்துராம‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளின் நூற்றாண்டுவிழாவில் அது ஒரு சிற‌ப்பித‌ழ் வெளியிடுகின்ற‌து. அ.மார்க்ஸை ஷோபாவைப் போல‌ எல்லாப்பொழுதும் ஆத‌ரிக்கும் சுகுணாதிவாக‌ரிட‌ம், இதே கால‌ப்ப‌குதியில், ‘முத்துராம‌லிங்க‌த்தை வித‌ந்தோத்தும் ஒரு இத‌ழில் அ.மார்க்ஸ் எழுதுவ‌து என்ன‌ நியாய‌ம்?’ என‌ ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அத‌ற்கு அவ‌ர், ‘ஆமாம். இனி அ.மார்க்ஸ் புதிய‌ பார்வையில் எழுத‌மாட்டார்’ என‌ப் ப‌தில் சொல்கின்றார்.
த‌லித்திய‌ அர‌சிய‌லை முன்னெடுத்த‌ அ.மார்க்ஸுக்கு ந‌ட‌ராஜ‌ன் ப‌ற்றி எதுவுமே தெரியாம‌லா அங்கே எழுத‌த் தொட‌ங்கினார் என்ப‌து முத‌ற்கேள்வி. ந‌ட‌ராஜ‌ன் த‌ன் சாதி நீக்க‌ அர‌சிய‌லை எங்கேயாவ‌து முன்வைத்து அதை ந‌ம்பித்தான் அ.மார்க்ஸ் போனார் என்ப‌த‌ற்கு ஏதாவ‌து ஆதார‌முண்டா? ஆக, அ.மார்க்ஸ் புதிய‌பார்வையில் எழுதிய‌தை எத‌ன் அடிப்ப‌டையில் புரிந்துகொள்வ‌து?
இதே ச‌ம்ப‌வ‌த்தை என‌து ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரின் கேள்வியோடும் ஒருவ‌ர் ஒப்பிட்டுப் பார்க்க‌லாம். அங்கே நான் குறிப்பிட்ட‌து ‘சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல?’ என்ப‌து. இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாய் ந‌ட‌ராஜ‌ன் இருக்கின்றார். இங்கே நாம் ந‌ட‌ராஜ‌னை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா அல்ல‌து அய்ய‌ர் என்ற‌ பெய‌ரை ம‌ட்டும் வைத்திருப்ப‌த‌ற்காய் ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா? இந்த‌ ‘வித்தியாச‌ங்க‌ளை’ நாம் க‌ண‌க்கிலெடுக்க‌ வேண்டுமென‌த்தான் திரும்ப‌த் திரும்ப‌ ஷோபாவிட‌ம் வ‌ற்புறுத்துகின்றேன்.
(2) ஒரு முக்கிய விட‌ய‌த்துக்கு அது நிக‌ழ்ந்த‌ நேர‌த்தில் ஏன் ஷோபா எதிர்வினையாற்றவில்லை என்ற‌ என‌து முக்கிய‌கேள்வியைச் ஷோபா மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோகின்றார். ஷோபா ஏன் எல்லாவ‌ற்றுக்கும் எதிர்வினை செய்ய‌வேண்டுமா என‌ ஒருவ‌ர் கேட்க‌வும் கூடும். முத‌லாவ‌து இது ஷோபா அதிக‌ம் புழ‌ங்கும் இல‌க்கிய‌வெளி. இர‌ண்டாவ‌து ஷோபா த‌லித்திய‌ச் செய‌ற்பாடுக‌ளில் அதிக‌ம் ஈடுபாடுடைய‌வ‌ராக‌க் காட்டிக்கொள்ப‌வ‌ர். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலாய் ஷோபாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் குறித்த‌ ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் இருந்த‌தோட‌ன்றி, அவ‌ர்க‌ளில் ஒருசில‌ர் மீதும் சுகிர்த‌ராணியால் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒன்றுமேயில்லாத‌ சீமானின் ‘த‌ம்பி’ ப‌ட‌த்துக்கு வ‌ரிந்து வ‌ரிந்து எழுதுகின்ற‌ ஷோபா இந்த‌ விட‌ய‌த்தில் ம‌வுன‌மாக‌ ஏன் இருந்தார் என்ப‌தும் முக்கிய‌ கேள்வி. அந்த‌ வ‌கையில் ஷோபாவினதும் சுக‌னின‌தும் ம‌வுன‌ம் ‘க‌ள்ள‌ம‌வுன‌மே’ என்ப‌தை இங்கே ம‌ன‌வ‌ருத்த‌துட‌ன் ப‌திவு செய்கின்றேன். (சுகிர்த‌ராணியின் இக்க‌ட்டுரைக்கான‌ ஒரு விவாத‌ம் என‌து பேஸ்புக்கில் நிக‌ழ்ந்த‌தையும் ஒரு குறிப்பாக‌ இங்கே விட்டுச்செல்கின்றேன்)
(3) கால‌ச்சுவ‌டு/உயிர்மை/கிழ‌க்குப் ப‌திப்ப‌க‌ங்க‌ளை நாடி புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் செல்வ‌து என‌க்கும் வ‌ருத்த‌ம‌ளிக்கும் விட‌ய‌ந்தான். ஆனால் அவ்வாறு போகும் எல்லோரும் எம்மைப் போல‌ இணைய‌க்க‌ட‌லில் எப்போதும் மூழ்கிக்கிட‌ப்ப‌வ‌ரும் அல்ல‌ர். ந‌ட‌ப்ப‌வை அனைத்தையும் அறிந்த‌வ‌ர்க‌ளும் அல்ல‌ர். என‌வே தொட‌ர்ந்து ப‌ல‌ர் இவ்வாறான‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளைத் தேடிச் செல்ல‌த்தான் போகின்றார்க‌ள். அவ்வாறு செல்கின்ற‌வ‌ர்க‌ளைப் பார்த்து வ‌ருத்த‌ங்க‌ளையும், ‘பாம்பென்றால் ம‌னித‌னைக் க‌டிக்கும்’ என்று ‘த‌த்துவ‌ங்க‌ளை’ப் பேசிக்கொண்டிருந்தால் ம‌ட்டும் போதுமா?  தொட‌ர்ந்து பாதிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் நாம் ஒரு சொல் ஆத‌ர‌வு அளித்தோ அல்ல‌து குறிப்பிட்ட‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளை அம்பல‌ப்ப‌டுத்தி எழுதுத‌லுமே நியாய‌மாகும். ஷோபா அண்மையில் ப‌ட்டிய‌லிட்ட‌ ந‌ம்பிக்கையான‌ ப‌டைப்பாளிக‌ளில் ஒருவ‌ர் மெலிஞ்சிமுத்த‌ன். அவ‌ர் ஒரு ப‌திப்ப‌க‌த்துட‌னான த‌ன் க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌த்தைக் கூறும்போது நாம் அத‌ற்குத் தார்மீக‌ ஆத‌ரவு கொடுக்க‌வேண்டிய‌து நம் அனைவ‌ரின‌தும் க‌ட‌மைய‌ல்ல‌வா?
‘மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது’ என்கின்ற‌ உதார‌ண‌ம் எவ்வ‌ள‌வு அபத்த‌மான‌து என்ப‌தைப் பாருங்க‌ள். எப்போதும் ‘க‌வ‌ன‌த்தை ஈர்க்கும்’ விட‌ய‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே குர‌ல் கொடுப்பேன் என்கின்ற‌ ம‌றைமுக‌ குர‌ல் இத‌ற்குள் ஒலிக்கிற‌தா இல்லையா ஷோபா? பாம்பு எப்போதும் பாம்புதானே? ம‌னித‌ன் பாம்பைக் க‌டித்தான் என்றால் எத‌ற்கு இவ்வ‌ள‌வு ப‌த‌ற்ற‌ப்ப‌டுகின்றீர்க‌ள்? ந‌ச்சில்லாத‌ ம‌னித‌ன் க‌டித்து பாம்புக்கு என்ன‌ பாதிப்பா வ‌ர‌ப்போகின்ற‌து என‌ நானொரு புதிய‌ வியாக்கியான‌ம் சொன்னால் அதுவும் ச‌ரியாக‌ வ‌ரும‌ல்ல‌வா? இதைத்தான் ஏற்க‌ன‌வே (1)ல் குறிப்பிட்ட‌மாதிரி த‌ன‌க்கேற்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வ‌ருகின்ற‌போது ம‌ட்டும் த‌ன்னை வெளிப்ப‌டுத்தும் ஷோபாவின் ம‌னோநிலை என்கின்றேன்.
(4) நீங்க‌ள் இந்த‌க் கேள்விக்கு நேர‌டியாக‌ப் ப‌தில் சொல்லாத‌வ‌ரை, நீங்க‌ள் அருந்த‌தி ரோயின் மீது வைக்கும் விம‌ர்ச‌ன‌ம் வேறு உள்நோக்கை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌து என்றே இப்போதும் ச‌ந்தேகிக்கின்றேன்
(5)ஆங்கில‌ம் தெரியாத‌து ஒரு குறையேய‌ல்ல‌. நீங்க‌ள் பிரெஞ்சில் இர‌ண்டுவ‌ரி கேட்டால் என‌க்கும் ப‌தில் கூற‌த் தெரியாதுதான். ஆனால் அந்த‌ மோச‌டிக் க‌ட்டுரை குறித்து நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌ அந்த‌க் கால‌ப்ப‌குதியிலேயே ம‌ன்னிப்புக்கேட்டிருக்க‌வேண்டும். எனெனில் அதை வைத்தே ‘பின் ந‌வீன‌த்துவ‌ம் பேசுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே போலிக‌ள்’ என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌தை அறிவீர்க‌ள். பின் ந‌வீன‌த்துவம் குறித்து தேட‌லும்,அறிய‌ ஆர்வ‌மும் உடைய‌ ஒருவ‌ருக்கு இத்த‌கைய‌ விட‌ய‌ங்க‌ள் எவ்வாறான‌ ஒரு மன‌ப்ப‌திவைக் கொடுக்குமென்று நினைக்கின்றீர்க‌ள்? எனெனில் அந்த‌ப்ப‌குதியிலேயே நானும் பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிய‌ ஆவ‌ல் கொண்டிருந்தேன் என்ப‌தால் அந்த‌ நிலைமைக‌ள் என‌க்குப் புரியும். இன்று கூட‌ அதேமாதிரியான‌ சில‌ பிம்ப‌ங்க‌ளைச் சும‌ந்துகொண்டு பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து கேலி செய்துகொண்டிருக்கின்ற‌ சில‌ ‘புர‌ட்சிவீர‌ர்க‌ளை’ நீங்க‌ள் அறியாத‌தும‌ல்ல‌. த‌வ‌றுக‌ள் செய்யாத‌ ம‌னித‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ளா என்ன‌? அறிந்தே எத்த‌னையோ த‌வ‌றுக‌ளைச் செய்து ம‌ன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அறியாம‌ல் செய்த‌ த‌வ‌றுக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌  நாம் ஏன் த‌ய‌ங்க‌வேண்டும்?
(6) ஷோபா உங்க‌ளுக்கு த‌மிழ் ம‌ட்டுமேய‌ல்ல‌ பிரெஞ்சும் ந‌ன்கு தெரியுமென‌ என‌க்குத் தெரியும். என‌வே அதை ஒரு விட‌ய‌மாக‌ச் சொல்ல‌த் தேவையில்லை. சாருவின் ‘உன்ன‌த‌ ச‌ங்கீத‌ம்’ ந‌ல்ல‌ க‌தை என‌ச் சான்றித‌ழும் த‌ருகின்றீர்க‌ள். ந‌ன்று. ஆனால் பெண்க‌ள் ச‌ந்திப்பு ம‌ல‌ரில் (ஆதார‌ம் காட்ட‌ என்னிட‌ம் பிர‌தி வ‌ச‌மில்லை) ப‌ல‌ பெண்க‌ள் இக்க‌தை குறித்து வைத்த‌ எதிர்வினைக‌ளுக்கு, ஒரு தொகுப்பாள‌ன் என்ற‌வ‌கையிலும், க‌தை பிடித்த‌து என்ற‌வ‌கையிலும் எங்கேயாவ‌து விரிவாக‌ எழுதியிருக்கின்றீர்க‌ளா? இன்றுவ‌ரையும் அதுகுறித்து ஒரு இறுகிய‌ ம‌வுன‌த்தைத்தானே ப‌திலாக‌த் த‌ந்திருக்கின்றீர்க‌ள்? சாரு த‌ன் உனன‌த‌ச‌ங்கீத‌த்தை நியாய‌ப்ப‌டுத்த‌ தொட‌ர்ந்து ழார் ப‌த்தாயின் ‘விழியின் க‌தை’யையும், ஷேக்ஸ்பிய‌ரின் ‘ரோமியோ ஜூலிய‌ட்டை’யும் உதார‌ண‌ம் காட்டிக்கொண்டேயிருப்பார். ஆனால் விழியின் க‌தை தொட‌ங்கும் இட‌த்தைப் பாருங்க‌ள், ‘I was nearly sixteen when I met Simone, a girl my own age, at the beach in X.’ என்றே ப‌தின்ம‌வ‌ய‌துகார‌ன் சொல்ல‌க் க‌தை தொட‌ங்கும். அதேபோன்று ரோமியோ ஜூலிய‌ட்டில், 13 வ‌ய‌தில் இருந்து 14ற்கு வ‌ய‌துக்கு மாறுகின்ற‌ ஜூலிய‌ட்டுக்கு அவ‌ள் வ‌யதைவிட‌ ஒன்றிர‌ண்டு வ‌ய‌து கூடிய‌ ரோமியோவே காத‌ல‌ன்.
18வ‌ய‌துக்கு மேற்ப‌டாத ஒரு பெண்ணோடு. 18வ‌ய‌தைத்தாண்டிய‌ ஒரு ஆண் உற‌வுகொள்வ‌தென்ப‌து ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம்; ஆனால் அதேச‌ம‌ய‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தின்ம‌வ‌ய‌து பெண்ணோடு அவ‌ள் வ‌ய‌தையொட்டிய‌ ஆண் உற‌வில் இருப்பது குறித்துப் பிர‌ச்சினையில்லை. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளையும், தான் காட்டும் உதார‌ண‌ங்க‌ளுக்குள் இருக்கும் முர‌ண்க‌ளையும் தெரியாதுதான் சாரு தன்னை நியாயப்படுத்துகிறார் என்ப‌து இன்னொரு விவாத‌த்திற்கான‌ புள்ளி. புனைவில் எதை எழுத‌லாம்/எழுத‌க்கூடாது என‌ நாம் ச‌த்த‌ம் போட‌முடியாதுதான். ஆனால் சாருவின் ‘நோநோ’ சிறுக‌தைத் தொகுப்பையெல்லாம் வாசித்துவிட்டு, ‘உன்ன‌த‌ச‌ங்கீத‌ம்’ போன்ற‌ த‌ட்டையான‌ க‌தையைச் ‘சிற‌ந்த‌ க‌தை’ என‌ப் பாராட்டும் உங்க‌ள் வாசிப்பை எப்ப‌டிப் புரிந்துகொள்வ‌தென‌ யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.
இர‌ண்டாவ‌து இந்த‌க்க‌தையை முன்வைத்து வைக்க‌ப்ப‌டும் குற்ற‌ச்சாட்டு, இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ளப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உட்ப‌டுத்துவ‌து குறித்து. இப்ப‌டியொரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உண்மையில் ந‌ட‌ந்திருக்கிற‌தா? ச‌ரி புனைவுதானே அங்கே எதையும் எப்ப‌டியும் முன்வைக்க‌லாம் என்ற‌ வாத‌த்தை நீங்க‌ள் முன்வைப்பீர்க‌ளாயின், நீங்க‌ள் எழுதிய‌ ஒரு சிறுக‌தையில் ர‌ஞ்சி(சுவிஸ்)யின் பெய‌ரையும், ஊரையும் குறிப்பிட்டு எழுதிய‌த‌ற்கு அவ‌ர் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌போது அவ‌ரின் பெய‌ரை அக‌ற்றியிருந்தீர்க‌ள். அந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ஏன் நீங்க‌ள் புனைவில் வ‌ரும் க‌தைசொல்லி அதைச் ச‌ரியாக‌வோ பிழையாக‌வோ சொல்லியிருக்க‌லாம், அதை மாற்றுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என‌க்கில்லையென‌ச் சொல்ல‌வில்லை? இந்த‌ இரு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் முன்வைத்து உங்க‌ளை எந்த‌வ‌கையில் புரிந்துகொள்வ‌து?
(7) எஞ்சியிருப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்வுக்காய் ப‌கை ம‌ற‌ப்பும், மீளிண‌க்க‌மும் முக்கிய‌ம் என்ப‌தே என‌தும் நிலைப்பாடு. ஆனால் அதேச‌ம‌ய‌ம் வெற்றிபெற்ற‌வ‌ர்க‌ள் திணிக்கின்ற‌தாய் இந்த‌ விட‌ய‌ங்க‌ள் இருக்கக்கூடாது என்ப‌தோடு, தோற்ற‌வ‌ர்க‌ள் வென்ற‌வ‌ர்க‌ள் மீது ந‌ம்பிக்கை கொள்வ‌த‌ற்கான‌ ந‌க‌ர்வுக‌ளை வென்ற‌வ‌ர்க‌ளே செய்ய‌வேண்டும் என்ப‌தையும் நாம் வ‌ற்புறுத்தியாக‌ வேண்டியிருக்கிற‌து. இந்த‌ வெற்றி எப்ப‌டிப் பெற‌ப்ப‌ட்ட‌து என்ப‌து குறித்த‌ கேள்விக‌ளையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. மேலும் வென்ற‌வ‌ர்க‌ள் எழுதும் ச‌ரித்திர‌மே ‘வ‌ர‌லாறாக‌’ப் போய்விடுவ‌து குறித்தும் அவ‌தான‌மாக‌ இருக்க‌வேண்டும்.
இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாக‌ போல‌ந்தில் போலிஷ்காரர்களுக்கு ந‌ட‌ந்த‌ Katyn ப‌டுகொலைக‌ளைக் குறிப்பிட‌ விரும்புகின்றேன். போல‌ந்தை ஆக்கிர‌மித்திருந்த‌ நாசிப்படைக‌ளை வெற்றிகொண்ட‌ சோவிய‌த் ப‌டைக‌ள் நாசிக‌ளே இதைச் செய்தார்க‌ள் என‌ நெடுங்கால‌மாக‌க் கூறிவ‌ந்திருக்கின்ற‌ன‌ர். அண்மையிலேதான் ‍ இத்த‌னை வ‌ருட‌த்துக்குப் பிற‌கு தாங்க‌ளே ப‌டுகொலைக‌ளைச் செய்த‌தாக‌ ர‌ஷ்ய‌ அர‌சு வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிற‌து. காலம் கடந்த தீர்ப்புகளுக்கு சிலவேளைகளில் அர்த்தமேயிருப்பதில்லை என்பதையும் நாமறிவோம். என‌வே ‘ப‌கை ம‌ற‌ப்பு’ ம‌ற்றும் ‘மீளிண‌க்க‌ம்’ என்ப‌வ‌ற்றை முன்வைத்து நாம் வென்ற‌வ‌ர்க‌ளின் ப‌க்க‌ம் முற்றுமுழுதாக‌ச் சாய‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என‌ச் சொல்ல‌ விரும்புகின்றேன். கால‌ம் தாண்டி வெளிவ‌ந்த‌ உண்மைக‌ளுக்கு ஒரு உதார‌ணமாய் இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இருப்ப‌துபோல‌ ஈழ‌ப்போரிலும் புதைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கும் என்ப‌தை ஷோபாவும் நினைவில் கொள்ள‌வேண்டுமென‌ விரும்புகிறேன்.
ப‌கை ம‌ற‌ப்பை முன்னிறுத்தி இல‌ங்கையில் ந‌ட‌க்கும் விட‌ய‌ங்க‌ளுக்கு ஆத‌ரவு கொடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே எப்ப‌டி இல‌ங்கை அர‌சின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இல்லையோ, அப்ப‌டியே இல‌ங்கை அர‌சின் செய‌ற்பாட்டை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌கை ம‌ற‌ப்புக்கும், மீளிண‌க்க‌த்திற்கும் எதிரான‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இல்லை என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வேண்டும்.
((8) இந்த‌க் கேள்வியின் முக்கிய‌மே, சாதிப்பெய‌ர்க‌ளை நீக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி நீக்க‌ம் செய்த‌வ‌ர்க‌ளும‌ல்ல‌, சாதிப்பெய‌ர்க‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி வெறிய‌ர்க‌ளும் அல்ல‌ என்ப‌தே. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளை அறியாது ‘பெய‌ர்க‌ளை’ ம‌ட்டும் க‌ருத்திற்கொண்டு ந‌ட்பு ச‌க்திக‌ளையும் எதிர்த்திசையில் வைத்து உரையாடுவ‌து எந்த‌ள‌வில் ச‌ரியென்ப‌தை யோசிக்க‌வேண்டும். இன்று ஹ‌ரி த‌ன‌க்குப்பின்னால் வ‌ரும் பெய‌ரை எடுத்துவிட்டார், அவ‌ர் அதை எடுக்காதுவிட்டிருந்தால், ஷோபா எவ்வாறான‌ உதார‌ண‌த்தைச் சொல்லித் த‌ப்பித்துக்கொண்டிருப்ப்பார் என‌வும் யோசிக்கின்றேன்.
(9)’தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.’
இவ்வாறான‌ பிர‌க‌ட‌ன‌ங்க‌ளும், சூளுரைப்புக்க‌ளும் ந‌ல்ல‌தே. எனினும் ஷோபா நீங்க‌ள் இந்தியாவிற்குப் போக‌ விஸா எடுக்கும்போது இவை உங்க‌ளுக்கு உத‌வி புரியாது. நீங்க‌ள் உங்க‌ளை இல‌ங்கைய‌னாக‌வோ அல்ல‌து பிரெஞ்சுக்கார‌னாக‌வோ அடையாள‌ங்காட்டினால்தான் விஸா த‌ருவார்க‌ள் அல்ல‌வா? இவ்வ‌கையான‌ தேர்வுக‌ள் தான் இல‌ங்கையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இருக்கும் என்ப‌தை எப்ப‌டி மறுத‌லிப்பீர்க‌ள்?
போர் துர‌த்திய‌ கால‌ந்தொட்டு ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை ஏன் நான் த‌மிழ‌னாய் பிற‌ந்தேன் என‌க் க‌வ‌லைப்ப‌ட்டிருக்கின்றேன். போருக்குள் அக‌ப்ப‌ட்டிற‌ந்தால் அடுத்த‌ பிற‌ப்பு என்று ஒன்றிருந்தால் த‌மிழ‌னாய் அல்லாது பிற‌க்க‌ வேண்டுமென‌வே பிரார்த்தித்துமிருக்கின்றேன். நான் என‌து அடையாள‌ங்க‌ளைத் துற‌க்க‌ விரும்பிய‌போதும் என் மீது த‌மிழ‌ன் என்ற‌ அடையாள‌ம் ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளிலும் திணிக்க‌ப்ப‌ட்ட‌து.
அவ்வாறு ஒரு அடையாள‌த்தை வைத்து ஒடுக்க‌ப்ப‌டும்போது, அந்த‌ அடையாள‌த்தை வைத்து கிள‌ர்ந்தெழுவ‌து த‌விர்க்க‌முடியாது. வ‌ர‌லாறு முழுதும் அதுவே நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. த‌லித் என்ற‌ அடையாள‌த்தை வைத்து ஒடுக்குத‌ல்க‌ள் நிக‌ழும்போது த‌லித்துக்க‌ள் அத‌ன் பெய‌ரிலே கிள‌ர்ந்தெழுவ‌து எவ்வாறு த‌விர்க்க‌முய‌லாதோ, அவ்வாறே த‌மிழ‌ர் என்ற‌ பெய‌ரில் ஒடுக்க‌ப்ப‌டும்போது த‌ங்க‌ளை ஒரு இணைந்த‌ ச‌க்தியாக‌ ஒடுக்க‌ப்ப‌டுவ‌தற்கு எதிராக‌ப் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்துவ‌தையோ நாம் ஒதுக்கிவிட‌ முடியாது. ந‌ம‌க்கு வ‌ழிகாட்டிக‌ளாக‌ இருந்த‌வ‌ர்க‌ளும், ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளும் த‌வ‌றாக‌ இருந்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ நம் மீது நட‌ந்த‌ ஒடுக்குமுறைக‌ள் இல்லை என்றாகிவிடாது.
உங்க‌ளைப் போல‌வே தேசிய‌த்தின் மீது ந‌ம்பிக்கை என‌க்கில்லையென‌ வெளிப்ப‌டையாக‌க் கூறியிருக்கின்றேன். அவை இறுதியாய் எங்கே போய் முடியுமென்ப‌தையும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் த‌ன் தேசிய‌ அடையாள‌த்தின் பெய‌ரால் ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ ஒரு இன‌ம், த‌ன் தேசிய‌த்தின் பெய‌ரால் ஒருங்கிணைவ‌தை நாம் த‌வ‌றென்றும் கூறிவிட‌முடியாது. இவ்வாறான‌ உங்க‌ள் சூளுரைப்புகளுக்கு அப்பால் இருக்கும் ய‌தார்த்தையும் புரிந்துகொள்ள வேண்டுகின்றேன். உங்க‌ளைப் போல‌வே என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியார், (இப்போது இருந்தால்) தான் வெளிநாடு செல்லும்போது த‌ன்னை இந்திய‌ன் என‌ பாஸ்போட்டில் குறிப்பிட்டிருப்பாரா அல்ல‌து தேச‌த்துரோகியென‌க் குறிப்பிட்டிருப்பாரா என‌வும் யோசித்துப் பார்க்க‌வும்.
(10) சுக‌னைப் ப‌ற்றிக் கேட்ட‌ கேள்விக்கு இப்ப‌டி விர‌லைச் சூப்புகின்ற‌ குழ‌ந்தையாய் அப்பாவித்த‌ன‌மாய் திருப்பிக் கேள்வி கேட்கின்றீர்க‌ளே ஷோபா? இணைய‌த்தில் சும்மா தேடினாலே சுக‌ன் ப‌ற்றிய‌ விமர்சனங்கள் நிறைய‌க் கிடைக்குமே? நீங்க‌ள் இப்ப‌டி ‘அப்பாவி’க்குழ‌ந்தையாய்தான் இருப்பீர்க‌ள், ஆனால் எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வ‌ள‌ர்ந்து தொலைந்துவிட்டாலும், இந்த‌விட‌ய‌த்தை அறிய‌வேண்டுமென்ப‌த‌ற்காய்தானே பானுபார‌தியின் பேஸ்புக்கையும் உதார‌ண‌ம் காட்டியிருந்தேன். ‘உயிரெழுத்தில்’ எழுதுவ‌தால் அவ‌ர்க‌ள் உங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திற்குள்ளே இருப்பார்க‌ள் என‌ ந‌ம்புகின்றேன். ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கும்போது அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள், ஏன் சுக‌னிட‌ம் உங்க‌ளுக்கு இப்படி க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌ம் இருக்கிற‌தென்று. என்னாலான‌ உத‌வி இப்போதைக்கு இவ்வ‌ள‌வுதான்.
(11)’தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு’
நான் அவ‌தானித்த‌வ‌ரை நீங்க‌ள் பேஸ்புக்கில் அக‌ற்றிய‌வ‌ர்க‌ள் எல்லாம் உங்க‌ள் மீத‌ல்ல‌வா விம‌ர்ச‌ன‌ம் வைத்திருந்தார்க‌ள். இறுதியில் நேற்றுக்கூட‌ ஒருவ‌ரை அக‌ற்றியதாக என் ஃபேஸ்புக் மூலம் அறியமுடிந்திருந்தது.
நுண‌லும் த‌ன் வாயால் கெடும் என்று சும்மாவா கூறினார்க‌ள். இப்ப‌டி நீங்க‌ள் எழுதிய‌தையே சற்று விரித்துப் பார்ப்போம். இதையே ஒரு இய‌க்க‌ம் அல்ல‌து த‌லைமை தாங்குப‌வ‌ர், நான் என் இய‌க்க‌த்தில் இருப்ப‌வரைச் சித்திர‌வ‌தை செய்வேன், விரும்பினால் போட்டுக்கூட‌த் த‌ள்ளுவேன், எனெனில் இது என் இய‌க்க‌ம், நீ வாயைப் பொத்திக்கொண்டு போ’ என்று சொல்வ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு நேர‌ம் எடுக்கும் என‌ நினைக்கின்றீர்க‌ள். அவ‌ர்க‌ளும் யாரையும் போட்டுத்த‌ள்ளிவிட்டு, ‘இந்த‌ நப‌ர் எங்க‌ள் இய‌க்க‌ம் ப‌ற்றி அவ‌தூறு ப‌ர‌ப்புகின்றார்’ என‌ச் சொல்லிவிட்டுப் போக‌லாம் அல்ல‌வா? இதுதானே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நிக‌ழ்ந்தும் இருக்கிற‌து அல்ல‌வா ஷோபா? இதைத்தான் ஏற்க‌ன‌வே சொன்னேன், எங்க‌ளிட‌ம் எத்த‌கைய‌ ச‌கிப்புத்த‌ன்மையும், பொறுப்புண‌ர்ச்சியும் இல்லாத‌போது நாம் ச‌ன‌ங்க‌ளுக்காய் பேசுவ‌து என்ப‌து சுத்த‌ ப‌ம்மாத்து என்கின்றேன். எங்க‌ளை ந‌ம்பி ச‌ன‌ம் வ‌ருகின்ற‌து என்றால், அது அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ள் கழுத்தில் தூக்குக் க‌யிற்றைப் போட்ட‌மாதிரியே என‌ இப்போதும் தெளிவாக‌ச் சொல்கின்றேன்.
(13) புலிக‌ள் எப்போதும் ஆயுத‌ப்போராட்ட‌ம் அத‌ன் மூல‌ம் த‌மிழீழ‌ம் என்ற‌வ‌கையில் மட்டுமே சிந்தித்த‌வ‌ர்க‌ள் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். அவ‌ர்க‌ள் சாதி ஒழிப்பு ம‌ட்டுமின்றி பிற‌ எந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கும் ஒருபோதும் வேலைத்திட்ட‌த்தை முன்வைத்த‌தோ ந‌டைமுறைப்ப‌டுத்திய‌தோ இல்லை என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே. இன்குலாப் போன்ற‌ புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே, புலிக‌ள் எழுச்சியுட‌ன் இருந்த‌ கால‌த்திலேயே, ‘த‌மிழீழ‌ம் கிடைத்தால்கூட‌ அத‌ன்பிற‌கும் அங்குள்ள‌ ம‌க்க‌ள் இன்னொரு போராட்ட‌த்திற்குத் த‌யாராக‌வேண்டும். அது சாதிக்கு எதிரான போராட்ட‌ம்’ என‌ எப்போதோ கூறியுமிருக்கின்றார்கள். ஆக‌ உங்க‌ளைப் போன்ற‌ ‘மாற்று’ அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமின்றி புலிக‌ளைத் தீவிர‌மாக‌ ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் கூட‌ இதைச் சொல்லியிருக்கின்றார்க‌ள்.
ஆனால் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ஏதோ புலிக‌ள் ம‌ற்ற‌ எல்லாவ‌ற்றையும் செய்துவிட்டு சாதியை ம‌ட்டும் வ‌ள‌ர்க்க‌த் துணைபோகின்றார்க‌ள் என்ற‌ ப‌ர‌ப்புரையைச் செய்துகொண்டிருந்தீர்க‌ள் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். இப்போது ‘ புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன்’ என‌ நீங்க‌ள் கீழிறங்கி வ‌ந்திருப்ப‌தே வ‌ர‌வேற்க‌க்கூடிய‌ விட‌ய‌ந்தான். எனெனில் இப்ப‌டி நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌க் முன்பு கூறி நான் வாசித்த‌ நினைவும் இல்லை.
இது ஒருவ‌கையில் புரிந்துகொள்ள‌க்கூடிய‌ ம‌னோநிலைதான் ஷோபா. எனெனில் புலி அல்லாத‌வ‌ராய் இருப்ப‌வ‌ரைவிட‌ புலிக்குள் இருந்து வெளியே வ‌ந்து, புலியை விம‌ர்சிப்ப‌வ‌ர்க்கு நிறைய‌ பிர‌ச்சினைக‌ள் உண்டு. த‌ன‌து விம‌ர்ச‌ன‌த்தைக் காட்ட‌மாய் க‌ண்மூடித்த‌ன‌மாய் வைத்தாலான‌றி அவ‌ர் த‌ன்னை நிலை நிறுத்திக்கொள்ளுத‌ல் க‌டின‌ம். இது உங்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌ நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. வேறு இய‌க்க‌ங்க‌ளில் இருந்து புலிக‌ளோடு பிற்கால‌த்தில் சேர்ந்த‌வ‌ர்க‌ளும் -சாதார‌ண‌மான‌வ‌ர்க்கு இருக்கும் புலி ஆத‌ர‌வை விட‌- க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி ஆத‌ர‌வைக் காட்டுவார்க‌ள். ஷோபா இதுவே உங்க‌ளுக்கு க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்தென‌ உறுதியென‌ ந‌ம்புகின்றேன், அதாவ‌து க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி எதிர்ப்பு. அதுவேதான், இன்று ஈழ‌த்தில் புலிக‌ள் இல்லாத‌ கால‌த்தில், உங்க‌ள் நிலைப்பாடுக‌ளைப் படுகுழிக்குள் த‌ள்ளிக்கொண்டிருக்கின்ற‌து. முறையான‌ மாற்ற‌ர‌சியல் செய்திருந்தீர்க‌ளாயின் இப்ப‌டித் த‌டுமாற்ற‌ங்க‌ளோ ச‌ரிவுக‌ளோ வ‌ந்திருக்காது.
(14) முழுப்பூச‌ணிக்காயைச் சோற்றில் கூட‌ ம‌றைக்கலாம்; ஆனால் நான் விரிவாக‌ விப‌ரித்து எழுதிய‌ கேள்விக்கு தொட‌ர்பின்றிப் ப‌தில் சொல்கின்றீர்க‌ளே ஷோபா. நேர‌டியாக‌க் கேள்வி கேட்டும் உங்க‌ள் ‘விவாத‌த் திற‌மை’யை இங்கும் செருகிவிடுத‌ல் நியாய‌மா?
இன்றைய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையில் நான் நேர‌டியாக‌க் கேட்ட‌து, நாளை புலிக‌ள் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியாகி, அங்கிருக்கும் ம‌க்க‌ளின் ஆத‌ர‌வோடு த‌னித் த‌மிழீழ‌மும் பெற்றால் ஆத‌ரிப்பீர்க‌ளா அல்ல‌து புலிக‌ள் என்ற‌ கார‌ண‌த்திற்காய் எதிர்ப்பீர்க‌ளா என்ப‌து… ஏன் இப்ப‌டிச் சுற்றிவ‌ளைத்துப் ப‌தில் கூறுகின்றீர்க‌ள்.
உங்க‌ளைப் போல‌வே நானும் ‘ தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன்’ என‌வே கூற‌விரும்புகின்றேன். உதார‌ண‌த்திற்கு க‌ன‌டாவிலிருக்கும் கியூபெக் மாகாண‌ம் த‌னி நாட்டுக்கான‌ கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிற‌தென‌ வைப்போம் (ஏற்க‌ன‌வே அருந்த‌ப்பில் த‌னிநாடாகாம‌ல் இருக்கிற‌தென்ப‌தை நீங்க‌ளும் அறிவீர்க‌ளென‌ ந‌ம்புகிறேன்). அங்கிருக்கும் மக்கள் த‌னிநாட்டுக்கு ஆத‌ர‌வ‌ளிக்கின்ற‌ன‌ர். அப்போதும் நான் ‘தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்’ என‌க் கூறிக்கொண்டிருப்ப‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மாக‌ இருக்கும்? அவ்வாறாக‌ அல்ல‌வா உங்க‌ளின் ப‌திலும் இருக்கிற‌து.
அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் நான் கேள்வி (9)ல் ‘தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.’ என‌க் கேட்க‌ ஏதோ புத்திசாலித்த‌ன‌மாக‌ப் ப‌தில‌ளிப்ப‌தாய் நினைத்து தொட‌ர்பிலாது ஏதோ ப‌தில‌ளித்துவிட்டு இப்போது ‘தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ம்’ குறித்துப் பேசுகின்றீர்க‌ளே? இதைத்தான் க‌ட‌ந்த‌ ப‌குதியில் கூறினேன் ஸ்பைட‌ர்மான் மாதிரி தாவித் தாவிப்பாயும் உத்தி.
ச‌ரி உங்க‌ளின் குயுக்தி முறைக‌ளையாவ‌து விடுவோம். நீங்க‌ள் கார்ல் மார்க்ஸையும் ஆசானாக‌ வைத்திருக்கின்றீர்க‌ள் அல்ல‌வா? உங்க‌ள் அள‌வுக்கு மார்க்ஸை லெனின் முறையாக‌க் க‌ற்றிருக்காவிட்டால் கூட‌, லெனின் ஒரு தேசிய‌ இன‌ம் அது தான் விரும்பினால் த‌னிநாடாக‌ப் பிரிந்துபோகின்ற உரிமை அத‌ற்கு உரிய‌து என‌வும் கூறியிருக்கின்றார் அல்லவா? அதைக்கூடவா ஞாபகம் வைக்காமல் இருக்கின்றீர்கள்?
‘நான் ஒரு தேசத்துரோகி, நான் எப்போதும் தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்… ‘என எப்போதும் எல்லாவற்றுக்கும் ஒன்றையே கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமென்பதைத்தான் மேலேயுள்ள கேள்விகளின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஏற்கனவே தயாரித்த விடைகளை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்த்துக்கொண்டு உங்களை ஒரு பின் நவீனத்துவத்தில் ஆர்வமுள்ள ஒருவராய் எப்படி இனங்காட்ட முயல்கின்றீர்களென  வியப்பாகவே என்னால் இப்போதும் பார்க்க முடிகின்றது.
——————-
இறுதியாய் என‌க்கிருக்கும் ச‌ந்தேக‌ம். நீங்க‌ள் ஊரில்/உல‌க‌த்தில் இருக்கும் ப‌ல‌ருக்கு சுவ‌ரொட்டிக‌ளும் எதிர்வினைக‌ளும் செய்திருக்கும்போது த‌மிழ்ச்சூழ‌லில் பெரும் பாதிப்பை ஏற்ப‌டுத்தும் ஜெய‌மோக‌ன் ப‌ற்றி எதுவுமே எழுத‌வில்லை? உங்க‌ளுக்கும் என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியாரை ம‌ட்டுமின்றி, உங்களில் அதிக‌ம் பாதிப்புச் செலுத்தும் அ.மார்க்ஸையும் அவ‌ர் நேர‌ங்கிடைக்கும்போது அடித்துத் துவைக்கிறாரே? ஏன் ஒரு சொல் அது குறித்து நீங்க‌ள் பேசுவ‌தில்லை? சில‌வேளை இத‌ற்கும் ‘மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம்’ என‌ப் பெரும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருக்கின்றீர்க‌ளோ தெரியாது? இதைவிட‌ நீங்க‌ளும் அ.மார்க்ஸும் திட்டித்தீர்க்கின்ற‌ ய‌முனா ராஜேந்திர‌ன்தான், உங்க‌ள் மார்க்ஸையும் காப்பாற்ற‌ வ‌ர‌வேண்டியிருக்கிற‌து என்ப‌து இன்னொரு முர‌ண்ந‌கை.
கடந்த இரண்டு வாரங்களாய் இந்த விடயங்களோடு ஈடுபட்டிருந்ததால் என்னால் ஃபேஸ்புக்கில் நடக்கும் பிறவற்றை தொடர்ந்து வாசிக்கமுடியவில்லை. இன்று காலை இதை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இதில் கூறப்படும் விடயங்களை ஆழமாகக் கவனிக்காததால் உள்நுழைந்து கருத்துச் சொல்ல இப்போது விருப்பம் இல்லை. ஆனால் இக்கட்டுரையில் உங்களை ஒரு தலித்தாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. அடையாளங்களை மறுதலிப்பது தவறேயல்ல, ஆனால் உயர்சாதி அடையாளங்களை மறுப்பதால் அதன் நிகர் தலித் என்றாகிவிடாது. அது மிகப்பெரும் மோசடி. இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல் நீங்கள் உங்களை ஒரு ‘தலித்’ எனக் கூறியிருப்பின் எனது கண்டனங்களைப் பதிவு செய்துகொள்கின்றேன்.
 —————–
இத்துட‌ன் ஷோபாச‌க்தியுட‌னான‌ விவாத‌த்திலிருந்தும் இத்தொடரிலிருந்தும் வில‌கிக்கொள்கின்றேன். ஷோபாச‌க்தி த‌ன‌து த‌ள‌த்தில் வ‌ள‌ர்ம‌தியின் (என‌துமான‌) 6 கேள்விக‌ளுக்குப் ப‌தில் அளித்திருக்கின்றார். அந்த‌ப் ப‌தில்க‌ளை இன்னும் ஆற‌ம‌ர‌ இருந்து வாசிக்க‌வில்லை. அவ‌ற்றைப் ப‌ற்றி ஏதேனும் எழுத‌வேண்டியிருப்பின் எப்போதாவ‌து ஒருநாள் எழுத‌ முய‌ற்சிக்கிறேன்.
(இறுதியாய் நிதான‌மாய் உரையாட‌வ‌ந்த‌ ஷோபாவிற்கும் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனெனில் என் அனுப‌வ‌ங்க‌ளின்ப‌டி ப‌ல‌ருக்கு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி சின்ன‌ விம‌ர்ச‌ன‌த்தை வைத்தாலே, தொட‌ர்பேயின்றி எதையெதையோ கோப‌த்தில் பேசிவிட்டு அதுவ‌ரைகால‌ ந‌ட்பையே முறித்துவிட்டுச் சென்றுவிடுப‌வ‌ர்க‌ளாக இருந்திருக்கின்றார்க‌ள். அந்த‌வ‌கையில் என்னைவிட‌ தெளிவாக‌வே இது த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்பின் அடிப்ப‌டையிலான‌ உரையாட‌ல் இல்லை என்ப‌தைக் கூறி தொட‌ர்ந்து உரையாடிய ஷோபாவிற்கு நன்றி. ஷோபா எப்ப‌டி எள்ள‌ல்க‌ளாய் எனக்குப் ப‌தில் அளித்தாரோ அதைவிட‌ எள்ள‌லாக‌வே நானும் ம‌றுமொழிந்திருக்கின்றேன். என‌க்கு எப்ப‌டி சில‌வேளைக‌ளில் ஷோபாவின் எள்ள‌ல் எரிச்ச‌லைத் த‌ந்திருக்குமோ அதையள‌வுக்கு அவ‌ருக்கு என‌து எள்ள‌ல்க‌ள் எரிச்ச‌ல்க‌ளைக் கொடுத்திருக்கும் என்ப‌தை என்னால் உணர‌முடிகின்ற‌து. அத‌ற்கு ம‌ன்னிப்பும், இதுவும் விவாத‌த்தின் ஒருப‌குதியே என‌ப் பெரிதுப‌டுத்தாதுவிட்ட‌ ஷோபாவிற்கு ந‌ன்றியும்.)

February 15, 2011

ஷோபாசக்தியிடம் கேட்ட இருபது கேள்விகள்

Filed under: ஷோபாசக்தி — டிசே தமிழன் @ 2:52 am

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பாகம் 02

ஷோபாசக்தி ஒரு நோட்டைத் தனது ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டு ஒரு நண்பருக்குப் பதிலளிக்கும்போது .“இதே வேண்டுகோளை முன்னர் xxxxx மும், டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன்.” எனக் கூறியதே இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கான முதற்புள்ளியாக அமைந்தது.

எனது குறிப்பான (ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்) வாசிப்பவர்கள், அங்கே நான் ஷோபாசக்தி சிலரை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் என்று குறிப்பிடவே எழுதியிருந்தேன் என்பதை விளங்கியிருப்பார்கள். At the first place, I really don’t want ask any questions to him. நிச்சயமாக அவரிடம் எனக்கு எந்தக் கேள்விகளும் எழுப்ப வேண்டியிருக்கவில்லை. எனெனில் நான் தொடர்ந்து ஷோபாசக்தியின் புனைவுகளையே வரவேற்பவனாகவும், அவரது அரசியலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் தொடர்ந்து கூறிவந்திருக்கின்றேன். எனவே அதன் அடிப்படையில் எனக்கு அவரிடம் கேள்விகள் கேட்பதற்கான   எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம் குறிப்பில் ஒரு மூன்றாம் மனிதனாய், ஷோபாசக்தியின் ஃபேஸ்புக் பித்தலாட்டங்களை அவதானித்துவிட்டு அதை ஒரு வேண்டுகோளாய் வைக்கவேண்டுமெனவே எழுதினேன்.  அவரோடு நெருங்கி உறவாடக் கூடியவர்களே ஷோபாவின் இந்த சமனிலையற்ற ஆட்டத்தை ஷோபாவிற்குச் சுட்டிக்காட்டவில்லையே என்ற ஆதங்கத்தையும் எனது குறிப்பில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதேவேளை ஷோபாவை தொடர்ந்து பல்லாண்டுகளாய் நுட்பமாய் அவதானித்து வந்தவன் என்றவகையில் ஒரு கவனக்குறிப்பையும் இவ்வாறு இறுதியில் எழுதியிருந்தேன்…

‘எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் ‘காணாமற்போய்விட்டான் / தலைமறைவாகிவிட்டான்’ என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்’.

ஆக, ஷோபாவை எவ்வாறு சரியாகக் கணிப்பிட்டேனோ, நேரம் பார்த்து அவர் எனக்கும் அடிக்கத் தொடங்கினார். அதாவது “டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். “

ஏற்கனவே நடந்தவற்றை அறியாது வாசிக்கும் ஒருவர், ஏதோ நான் ஷோபாசக்தியிடம் கேள்வி கேட்கவேண்டுமென ஒற்றைக் காலில் நின்றதாகவும், பிறகு ஷோபாவிடம் பயந்து பின்வாங்கிய‌தாக‌வுமே எண்ணிக்கொள்வார்.  என்னிடம் கேள்விகள் இருக்கின்றன என்று நான் கூறாமலே ஷோபா எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றார், பெயர்களை இணைத்துப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள் (ஷோபாவின் விவாதத்திறமையின் நளினங்கள் குறித்து,  சில உதாரணங்களை அடுத்த பதிவில் எழுதலாம் என இருக்கின்றேன்).

இது ஷோபாவிற்குப் புதிதுமல்ல. ஷோபா பிரான்சில் பலருக்குச் செய்ததுதான்.. இறுதியில் யமுனா ராஜேந்திரனுக்கு ‘காணவில்லை’ எனவும் ஒரு ‘சுவரொட்டி’ சத்தியக்கடதாசியில் ஒட்டப்பட்டதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆக இதை நினைத்து எனக்கு வருந்த எதுவுமில்லை. ஆனால்  இதை இப்படியே விட்டால், உசாத்துணை (reference)  போடுவதுபோல ஷோபா இனிவரும் காலங்களில் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் என் பெயரையும் இழுப்பார் என்றெண்ணி அவருக்கான சில கேள்விகளை இவ்வாறு எழுதத்தொடங்கினேன்.

(பார்க்க: ஆடு அறுக்க முன்னரே அடுப்பிலே சட்டி வைக்கலாமா மேன்மை தங்கிய ஷோபாசக்தி?)

“….நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. ‘டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை’ என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி… எப்படி என்றால் ஆவது அளாப்பி ‘சிங்கம் வென்றது’ என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?

இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, ‘கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை’ எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரில் ‘தமிழன்’ என்ற பெயரை வைத்துக்கொண்டு ‘கோழை’யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?

ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, ‘இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன்’ என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்’ என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்.

இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்..
(இப்போது ஷோபாவின் பதில்களையும் இணைத்திருக்கின்றேன் ~டிசே)

(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து ‘அறம்’ பாடிய நீங்கள், எந்த ‘அறத்தின்பாற்பட்டு’ பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்? (மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)

ஷோபாசக்தி: (1) 90களில் இருந்த எனது கருத்து எப்போதுமே மாறாதிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. வெகுசன ஊடகங்களிலும் நமது கருத்துகள் வரவேண்டும் என 2000களில் முடிவெடுத்தேன். ஆனால் அதற்கான அறம் என்ன தேர்வு, என்ன என்பதை எனது புதுவிசை இதழ் நேர்காணலில் காலச்சுவடு/மாலதி மைத்ரி/சுகிர்தராணி குறித்த கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 

(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட ‘தலித்தியத்தோழர்’ சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய ‘தலித்தியப் போராளியான’ நீங்கள் இதைப் பற்றி எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?

ஷோபாசக்தி: (2).அங்கு மதிவண்ணன் அவமானப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நான் அங்கே இருந்திருப்பின் பிரச்சினை கைவாறில் முடிந்திருக்கும்

(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் ‘வேருலகு’ விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் ________ கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?

ஷோபாசக்தி: (3.4).பாருங்கள் நண்பரே புத்தகங்களை வெளியிடுவதற்காக காலச்சுவடு உயிர்மை போன்ற நிறுவனங்களிடம் நமது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் செல்வது எனக்கு உள்ளபடியே வருத்தத்தைத் தருவது. மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது

(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது ‘நேர்மையற்றது’ என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடமும் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே 60, 000 ரூபாய்  வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது ‘வளர்ப்புத் தந்தை’ போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்…, இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்).  ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை?

*டிசே யின் குறிப்பு :மேலும் 3/4 ற்குப் பதில் சொல்வதாய் ஷோபா எழுதியிருக்கின்றார். இது நேரடியாக ஷோபாவின் மீது நான் முன்வைக்கும் கேள்விக்கு அவர் தன் நிலையில் இருந்து பதிலளிக்கவில்லை என்பதைச் சுட்ட விரும்புகின்றேன்)

(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? ‘கறுப்பு’ வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் ‘காலச்சுவடு’ கண்ணன் முழுத்தொகுப்பையே நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி நான் உட்பட  உங்களுக்கு ஆதரவாகவே ‘பதிவுகள்’ தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)

ஷோபாசக்தி: (5) அது நாங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம். எனக்கோ சுகனுக்கோ ஆங்கிலம் தெரியாததால் நடந்த சம்பவம். தெரிந்து செய்த பிழையன்று..அறியாமையால் செய்த தவறு. அறியாமையை அறிக்கையிட அப்போது கொஞ்சம் வெட்கப்பட்டோம். அவ்வளவே.

(6) சனதருமபோதினியில் சாருவின் ‘உன்னதசங்கீதம்’ எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?

ஷோபாசக்தி: (6).அது ஒரு சிறந்த கதை என்பதே எனது கருத்து. அல்லாத பட்சத்தில் பிரசுரித்திருக்க மாட்டோம். எனக்கு ஆங்கிலம்தான் தெரியாதே தவிர தமிழ் நன்றாகவே தெரியும்.

(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் ‘நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்’ என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் ‘ஆதரவுத்தளம்’ செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து -பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும்- அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?

ஷோபாசக்தி: (7).ஆம்…யார் வென்றிருந்தாலும் பகை மறப்பும் சமாதானமுமே முதன்மையானவை என்றே வலியுறுத்துவேன். புலிகள் போரியல் வெற்றியின் உச்சங்களில் இருந்து ஒரு அரசுமாதிரியையே கட்டமைத்திருந்த காலத்திலும் இதையே கூறினேன்

(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் ‘அய்யர்’ இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர், தான் பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?

ஷோபாசக்தி: (8.)ஹரி போன்ற யாழ்ப்பாணத்திலிருந்த பதின்ம வயது இளையவரையும் பழுத்த இலக்கிய இயல் வாழ்நாள் சாதனையாளரான பத்மநாபரையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு. ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை ‘தனகுவதை’த் தவிர வேறு வழியில்லை.

(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.

ஷோபாசக்தி: (9)  மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன்: தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.


(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை ‘அம்பலத்தியிருக்கின்றீர்கள்’. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?

ஷோபாசக்தி:  (10) சுகனின் கோட்பாடு அரசியல் சரிவுகள் என நீங்கள் குறிப்பிடுவது எதையோ?

(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறு இருக்காத‌தால்தான் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். ‘சனநாயக வெளி’ பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார்.  ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து ‘ஷோபாசக்தி டொட் கொம்’ ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ, எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.

ஷோபாசக்தி: (11).தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. என்னுடைய தியேட்டரில் உங்களுடைய ஆபாசப் படத்தை ஓட்டவிடாமல் நான் தடுத்தால் அதன் பெயர் பொறுப்புணர்வு.

(12) இந்தக் கேள்வி குழந்தைப் போராளி சம்பந்தமானது. கேட்கும்போதே தயக்கங்கள் இருந்தன. இப்போது அது  Too personal போன்று தோன்றுவதால் அதை பொதுவெளியில் வைக்க விரும்பவில்லை. அதேசமயம் ஷோபா இதற்குப் பதில் அளித்திருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதற்கு நன்றி (~டிசே)

(13) சாதியம் குறித்து… நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.

அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை, தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்த தலித்துக்களை பொலிஸ் கைது செய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?


ஷோபாசக்தி: (13).புலிகள் காலத்தில் துப்பாக்கி நிழலில் சாதியம் மறைந்திருந்தது. அது இப்போது வெளிவருகிறது என்ற கருத்துத்தான் எனது கருத்தும். புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன். இன்றைக்கு உகந்த போராட்ட வடிவம் எது என்ற எனது கருத்தை அறிய எனது ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்ற கட்டுரையைப் படிக்கவும்.



(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பை ந‌ட‌த்த‌க் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றன‌ர் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் மாதிரி அர‌சு இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக் காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்…மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது,  அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)


ஷோபாசக்தி: (14). நான் எப்போதுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன். தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்

இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது…

(நினைவூட்டல்…
Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.
November 13, 2010 at 9:31pm )

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?

6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

(இறுதி 1-6 வரையான கேள்விகளுக்கு ஷோபா விரிவாகவே தனது தளத்தில் பதிலளித்திருப்பதால், அவற்றின் விடைகளே இங்கே பதியவில்லை)
—————–

எனது அசல் கேள்விகளான 14ற்கும் பதிலளித்து ஷோபா, இவ்வாறு கேட்டிருந்தார்….

Shoba Sakthi வளர்மதியின் கேள்விகள் அபத்தமானவை என்றும் பொருட்படுத்த்தக்கவையல்ல என்றும் எத்தனை தடவைதான் சொல்வது. மறுபடியும் நான் டிசேயிடம் கேட்பது நீங்கள் தொகுத்த அவரின் கேள்விகள் வலுவானவையெனவும் சரியானவையெனவும் நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில அவை உங்களுடைய கேள்விகளாயும் மாறிவிடும். மகிழ்ச்சியாகப் பதில் தருகிறேன். தனிக் கட்டுரையாகவே எழுதிவிடலாம். வளர்மதியின் கேள்விகளை உங்களது கேள்விகளாக முன்வைக்கிறீர்களா என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்தினீர்கள் எனில் வேலையைத் தொடங்கிவிடுவேன்.

நான் அதற்கு இவ்வாறு பதிலளித்திருந்தேன்:
ஷோபா, வளர்மதியின் கேள்விகளுக்கான பதில்களை நானும் எதிர்பார்க்கின்றேன் (அவை என் கேள்விகளுமென நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சினையில்லை). வேண்டுமெனில் கேள்வி இல.5 ஐத் தவிர்த்துவிட்டு பதில் எழுத வேண்டுகிறேன்

வளர்மதியின் 6 கேள்விகளுக்கு ஷோபா இப்போது பதிலளித்திருக்கின்றார். ஆனால் அவற்றை டிசே தமிழனின் கேள்விகளாக்கிவிட்டார். ஆகக்குறைந்து, வளர்மதி தொடக்கத்தில் கேட்டு,  அதையே டிசேயும் கேட்டிருந்தார் என்றாவது வளர்மதிக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிடாதது மட்டுமின்றி பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தை இடைநடுவில் இருந்து பொதுத்தளத்தில் எடுத்துப்போட்டு அதற்குப் பதிலளிக்கிறேன் என ஷோபாசக்தி தொடங்கியதை எந்தவகையான அறம் என்பதை ஷோபாவிடம் அல்ல, வாசிக்கும் உங்களிடம் முன்வைக்கின்றேன்.

மேலும், வளர்மதியின் கேள்விகள் (மூன்றாம் கையால் வைக்கப்படுவது என்றும் ஷோபா இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறார்; இதுகுறித்து வரும் பகுதிகளில் எழுதுவேன்). உண்மையில் வளர்மதி என்னிடம் எந்தப்பொழுதிலும் தனது கேள்விகளை ஷோபாசக்தியிடம் கேட்கச் சொல்லிக் கேட்டதில்லை என வெளிப்படையாக முன்வைக்கின்றேன். ஷோபா புலிகளிடம் இருந்தபோது உளவுத்துறைக்குள் இருந்து வேலை செய்திருக்கலாம்; பல திடுக்கிடும் உண்மைகளைக் கூடக் கண்டும் பிடித்திருக்கலாம். ஆனால் இங்கே நடக்காத ஒரு விடயத்தை நடந்த்தாய் ‘பாவனை’ செய்வது மிக அநியாயமானது.

நான், ஏன் எனது கேள்விகளோடு இப்போது வளர்மதியின் கேள்விகளையும் இணைத்தேன் என்றால், நான் ஷோபாவோடு முரண்பட்டு எழுதிய முதலாவது நோட்டிலேயே ஷோபாவிற்கு இது பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றேன்.

வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். ‘மாற்று அரசியலை’ ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் ‘ஆற்றைப் பார்த்துக் கோபம்’ என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

இளங்கோவன் அன்பனின் ஃபேஸ்புக்கில்,  வளர்மதி இதே 7 கேள்விகளை முன்வைத்து ஆகக்குறைந்து 4-5 மாதங்களாகி இருக்கும். எத்தனையோ அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் தனது ‘24மணிநேர சேவை’ (இது அவரே குறிப்பிட்டதுதான்) மூலம்  பதிலளித்து வந்த ஷோபா இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து ஏன் புறக்கணித்து வந்தார் என்பதையும் வாசிப்பவர்க‌ள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், டிசே தமிழனின் ஆறு கேள்விகள் என்று எழுதிய பதிவில் எவ்வாறு
வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனக்கூறி ‘வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்’  என‌க்கூறி என்னமாதிரி பில்ட் அப் (build-up) கொடுக்கின்றார் எனப் பாருங்கள். அதேபோன்று எனது அசல் 14 கேள்விகளும் தவிர்க்கப்பட்டு மிக நுட்பமாக இந்த 6 கேள்விகள் மட்டுமே அவ‌ர‌து த‌ள‌த்தில் முன்வைக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது சற்று காலச்சக்கரத்தைச் சுழற்றுவோம். ‘என்னிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை?’ என்றும் ‘கேள்வி கேட்காமல் டிசே தமிழன் ஓடிவிட்டார்’ எனவும் எழுதவும் துணிகிற ஷோபாசக்தி இந்த முன்னுரை/முக்குகின்ற உரையைத் தவிர்த்து- நேரடியாக -கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டியதுதானே?  முதலிலே ஒரு அறிமுகம் கொடுத்து கேள்வி/பதில்களை வாசிக்கமுன்னரே வாசகருக்கு தானொரு அறிவுஜீவி என்கின்ற தோரணையைக் கொடுப்பது.   இந்த ‘முன்னுரையின்’ பின்பு ஒரு வாசகர் முன் அனுமானமின்றி உள்ளே போகமுடியுமா?

மேலும், கேள்விகள் கேட்பவன் ஒரு முட்டாளாக இருக்கிறான் ஆகவே வாசகத் தோழர்களே பொறுத்தருள்க எனத் ‘தெளிவாக’ ச் சொல்லி, ஆனாலும் பாருங்கள் ‘நான் எப்போதும் நல்லவனப்பு, எவன் என்றாலும் பதில் சொல்லாமல் தப்பியோடுபவன் அல்ல’ என்கின்ற தோரணையை ‘என் கடமையைச் செய்ய அனுமதியுங்கள்’ மூலம் கட்டமைப்பது….

ஆம் நண்பர்களே. இதுதான் ஷோபாசக்தி. நீங்கள் இந்தச் சுழலிருந்தும், அவரது நளினமான விவாதத் திறமைகளிலிருந்தும் (ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு spider man மாதிரித் தாவுவது வரை)  உங்களைக் காப்பாறிக்கொள்ளாமல் விட்டால் ஷோபாவுடன் உரையாடுவது என்பது ‘சொந்தச் செலவிலே சூனியம் வைப்பது’ போன்றதுதான்.

(இன்னும் வரும்)

February 12, 2011

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது

Filed under: ஷோபாசக்தி — டிசே தமிழன் @ 11:22 am

- பகுதி 01
1.
ஷோபாசக்தி இப்போது டிசே தமிழன் கேட்ட 6 கேள்விகள் என ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருக்கின்றார்.  ஆனால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னணிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.  ஃபேஸ்புக்கினுள் ஷோபாவும் நானும் தொடர்ச்சியான ஒரு உரையாடலை அண்மைக்காலமாய்ச் செய்து வந்திருக்கின்றோம். எனது தனிப்பட்ட விருப்பு சார்ந்து ‘டிசே தமிழன்’ என்ற பெயரில் இருக்கும் ஃபேஸ்புக்கில் 45 நண்பர்களை மட்டுமே இணைத்து private access கொடுத்து ஒரு மூடிய தளமாகவே வைத்திருக்கிறேன்.  ஆனால், இப்போது ஷோபா என்னை முன்னிறுத்தி ஒரு பதிவை அனைவரும் பார்க்கக்கூடிய பொதுத்தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இது ஃபேஸ்புக்கினுள் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியே. உண்மையில் ஷோபாவின் இப்பதிவு தலையுமின்றி வாலுமின்றி இடைநடுவில் நின்று அந்தரத்தில் ஆடுகின்றது.

‘நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றேன்’ என ஷோபா குறிப்பிட்டிருந்தார் என்றால் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் நான் நடந்தவற்றை ஆதியிலிருந்து அந்தமாகப் பொதுத்தளத்தில் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஷோபா எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.  ஷோபா என்னிடம் அனுமதி கேட்காமல் எங்களுக்குள் நடந்த உரையாடலை பொதுத்தளத்தில் வைத்தது  என்னளவில் சோர்வையே ஏற்படுத்தியிருந்தது.  ஆனால் அவரைப் போலின்றி, அவருக்கு நான் இப்படி ஃபேஸ்புக்கில் நடந்த அனைத்தையும் பொதுத்தளத்தில் வைக்கப்போகின்றேன் எனக் கூறியே இங்கே இவற்றை எழுதத் தொடங்குகின்றேன் என்பதையும் குறிப்பிட விழைகிறேன்.

அத்துடன், ஷோபா டிசே தமிழன் கேட்ட கேள்விகள் எனக் கூறுபவை முதலில் வளர்மதியிடம் இருந்து வந்தவை. அதற்கான எந்த கிரடிட்டும் வளர்மதிக்கு ஷோபா கொடுக்கவில்லை என்பது எரிச்சலையே ஊட்டுகின்றது. ஆகவே அந்தக் கேள்விகளின் மூலம் வளர்மதி என முதலில் தெளிவுபடுத்தி விடுகின்றேன். அத்துடன் நான் ஷோபாவிடம் கேட்ட மிகுதி அசல் 14 கேள்விகள் இருக்கின்றன. அதை இப்போது தனது தளத்தில் நுட்பமாக மறைத்திருக்கின்றார். அந்தக் கேள்விகளையும் -ஷோபாவைப் போல மறைக்காது-   இங்கே முன்வைத்து ஷோபாவின் பதில்களையும் தரப்போகின்றேன். அத்துடன் ஷோபாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களை வைத்து ஒரு ‘பொழிப்புரை’ எழுதுவதாகக் கூறியிருக்கின்றேன். அதையும் இனிவரும் நாட்களில் செய்வேன்.

இனி நடந்தவை….!

இலங்கைச் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு அண்மையில் நடந்தது நாமனைவரும் அறிந்ததே. அதை முன்னிட்டு சில மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு, ஆதரவு என்ன எல்லாத்தளங்களிலும் அறிக்கைகள் மாறி மாறி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. அறிக்கைகளில் அரசியலில் எரிச்சலுற்று, நான் பேஸ்புக்கில் -அறிக்கை எத்தனை ‘அரி’க்’கை’ யடா…!- என நிலைத்தகவல் எழுத, ஒருசாராரின் அறிக்கையைப் பிரதிநிதிப்படுத்திய ஷோபா, நான் அவரது அறிக்கையையும் கேலி செய்வதாக நினைத்து, எனது நிலைச்செய்தியின் கீழ் சில பின்னூட்டங்களை எழுதினார்.

அவரோடு அதற்கு முன் ஃபேஸ்புக்கில் எந்த விரிவான உரையாடலையும் செய்திராத நான் இவ்வாறு ஒரு நோட்டை அதன் நீட்சியில் அவருக்கு எழுதினேன். (பார்க்க: ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்’ ). அந்தப் பதிவுக்கு ஷோபாசக்தி எழுதிய முதற்பின்னூட்டம் இப்படியாக அமைந்தது: Shoba Sakthi சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்.

ஷோபாவின் இக்கேள்வியைச் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வாசிப்பதற்கான ஒரு அறிக்கையை நான் எழுதினேன். (பார்க்க ‘மாற்றை முன்வைத்தல்’)

அதற்கு ஷோபாசக்தி, இந்த அறிக்கைக்கு தான் முதல் ஆளாக கையெழுத்து வைக்கிறேன். பிற நண்பர்களுக்கும் அனுப்பி கையெழுத்து வைக்கச் சொல்வோம் என எழுதியிருந்தார். ஆனால் இந்த அறிக்கைகளையே ‘அரிக்கைக’ளாக நினைத்த நான் ஷோபாவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காது, ‘ஷோபா இது அறிக்கையில்லை. இது உங்களுக்கு மறுமொழியாக - நான் சொல்லவிரும்பியதை- அறிக்கை வடிவத்தில் எழுதியிருந்தேன். அறிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததும், கீழே பெயர்களைப் பட்டியலிட்டதும் கூட இந்த அறிக்கை அரசியலை நக்கலடிக்கவே தவிர உண்.மையான அறிக்கைக்காய் இல்லை. ஏற்கனவே -அறிக்கை எத்தனை ‘அரி’க்’கை’ யடா- எழுதியவன்/நக்கலடித்தவன் அதேபோக்கில் ஓர் அறிக்கை எழுதுவான் என நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் எனவே நான் நினைக்கின்றேன்.’ என நான் ஒதுங்கிப்போய்விட்டேன். ஷோபாவும் நானும் அதன்பிறகு எவ்வித உரையாடல்களைச் செய்யவுமில்லை. இதை ஒரு ‘பகை’ மறப்பெனவும் எடுத்துக்கொள்ளவும்.

ஆமாம், அதுவே உண்மை. ஆனால் சில தினங்களுக்கு முன் ஷோபா ஒரு பதிவை எழுதி என்னையும் ரக் (tag) செய்திருந்தார்.  அங்கிருந்து தொடங்கியது இரண்டாம் ஆட்டம்.

(தொடர்ந்து வரும்…)

February 6, 2011

பொன்னொச்சிக் குறிப்புகள்

Filed under: குறிப்புகள் — டிசே தமிழன் @ 1:08 pm

 1.0 வாசிப்பு/திரை

எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘உறுப‌சி’ இற‌ந்த‌ ந‌ண்ப‌னின் ஒருவ‌னை முன்னிட்டு ம‌ற்ற‌ மூன்று ந‌ண்ப‌ர்க‌ளின் நினைவுக‌ள் கிளைக்கும் ஒரு நாவ‌ல். அத்தியாய‌ங்க‌ள் எதுவுமே பிரிக்க‌ப்ப‌டாது இருப்ப‌துபோல‌ ஒரே தொட‌ர்ச்சியில் வாசிக்க‌ வைக்கக்கூடிய‌ நாவ‌ல். க‌தை மூன்று வெவ்வேறு த‌ள‌ங்க‌ளில் ந‌க‌ர்கின்ற‌து; ந‌ண்ப‌னின் இற‌ப்பின்போது நிக‌ழ்வ‌து ஒன்று. ம‌ர‌ண‌ச்ச‌ட‌ங்கு முடிந்த‌பின் இம்மூன்று ந‌ண்ப‌ர்க‌ளும் காட்டுக்குச் சென்று இழ‌ப்பை ஆற்றிக்கொள்வ‌து ம‌ற்றொன்று. மூன்றாவ‌து இம்மூன்று ந‌ண்ப‌ர்க‌ளும், த‌ம‌க்கும் கால‌மான‌ ந‌ண்ப‌னுக்குமான‌ க‌ட‌ந்த‌கால‌ நினைவுக‌ளை மீள‌ அசைபோடுவ‌து. எவ்வாறு இந்நாவ‌ல் ஒருவித‌ வெறுமையுட‌னும் தொட‌ங்குகின்ற‌தோ அவ்வாறே முடிகின்ற‌து. க‌ச‌ப்பின் நிழ‌லும் வாழ்வின் மீதான‌ அப‌த்த‌த்தின் வெளியும் தொட‌ர்ந்து பின் தொட‌ர்ந்து வ‌ந்த‌ப‌டியே இருக்கின்ற‌து. உண்மையில் இம்மூன்று ந‌ண்ப‌ர்க‌ளும் இற‌ந்த‌ ந‌ண்ப‌னை நினைவுகொள்வ‌த‌ன் மூல‌ம் த‌ம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கின்ற‌ன‌ர். தான் தோன்றித்த‌ன‌மான‌, கிறுக்குத்த‌ன‌மான‌ வாழ்வை வாழ்ந்து சொற்ப‌ வ‌ய‌தில் இற‌ந்துபோயிருந்த‌ ந‌ண்ப‌ன் அவ‌ன‌ளவில் அவ‌ன் விரும்பிய‌ வாழ்வை வாழ்ந்திருக்கின்றான் என்ப‌த‌ற்கு அண்மையான‌ முடிவுக‌ளை எட்டுகின்ற‌ன‌ர். ‘உறுப‌சி’யை வாசிக்கும் ந‌ம‌க்கும், த‌க‌ப்ப‌னை அடிக்க‌ விற‌குக்க‌ட்டை கொண்டோடும்…, லொற்ற‌ரி ரிக்கெட் வாங்கி அதிஷ்ட‌த்தை ப‌ரிசோதிப்ப‌தை ஒரு முழுநேர‌த் தொழிலாக‌க்வே கொள்ளும்… த‌ன் துணை மீது நேச‌மும் உக்கிர‌மான‌ காம‌மும் கொண்டிருக்கும்… த‌ன் க‌ல்லூரிக் கால‌த்தில் க‌ம்ப‌ராமாய‌ண‌த்தை எரித்து க‌ல்லூரியில் இருந்து நீக்க‌ப்ப‌டுபவ‌னை… ஒரு புல‌னாய்வுப்ப‌த்திரிகைக்கு பிழை திருத்த‌ வேலை செய்ய‌போய் செய்திக‌ளில் வ‌ரும் கொலைக‌ளையும் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ச்சிக‌ளையும் தானே செய்வ‌தாய் ம‌ன‌ப்பிற‌ழ்வு அடையும் இற‌ந்த‌போன‌ ச‌ம்ப‌த்தை எப்ப‌டி எடுத்துக்கொள்வ‌து என்ற‌ குழ‌ப்பமே ஏற்ப‌டுத்துகின்ற‌து. அந்த‌ச் சிக்க‌லே ந‌ம்மை இன்னும் கேள்விக‌ளைத் தொடுக்க‌வைத்து ஓர் எளிதான முடிவை சம்பத்தின் முன்வைத்து எடுக்க வைக்க ‌முடியாது செய்துவிடுகின்றது. அதேச‌ம‌ய‌ம் நாம் கூட‌ ச‌ம்ப‌த்தைப்போல‌ ஆகிவிட‌க்கூடுமோ என்ற‌ அச்ச‌த்தையும், பதற்றத்தையும் ஒருசேர‌த் த‌ருகின்ற‌து. எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘யாம‌ம்’ நாவ‌ல் குறித்து எழுதிய‌போது அதில காம‌த்தை எஸ்.ரா மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துவிடுகின்றார் என்ற‌ விம‌ர்ச‌ன‌த்தை வைத்திருந்தேன். ஆனால் இந்த‌ நாவ‌லில் காம‌ம் மிக‌ அற்புத‌மாக‌வும், மிகைப்ப‌டாம‌லும் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறித்தாக‌ வேண்டும்.
…………………………………………….

Wes Anderson இயக்கிய ‘Darjeeling Limited’ முழுத் திரைப்ப‌ட‌முமே இந்தியாவிலேயே எடுக்க‌‌ப்பட்டிருக்கின்ற‌து. நெறியாள்கையாள‌ர் Wes Andersonற்கு ச‌த்திய‌த் ரேய் மீது மிகுந்த‌ மதிப்பு இருக்க்கின்ற‌து. இப்ப‌டத்தை ரேயிற்கு காணிக்கை செய்த்தை ம‌ட்டுமின்றி ரேயின் ப‌ட‌ங்க‌ளில் வ‌ரும் சில‌ க‌ம‌ராக் கோண‌ங்க‌ளும் வ‌ருகின்ற‌ன. மூன்று ச‌கோத‌ர‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌தை இது. இந்தியாவில் அனைவ‌ரும் ச‌ந்திப்ப‌தாய் ஒரு ச‌கோத‌ர‌ர் முடிவு செய்து ம‌ற்ற‌ இருவ‌ரையும் அழைக்கின்றார். இவ‌ர்க‌ள் மூவ‌ரும் த‌ம‌து த‌க‌ப்ப‌ன் இற‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குப் பிற‌கு இப்போதுதான் முதன்முதலில் ச‌ந்திக்கின்றனர். டார்ஜிலிங்குப் போகும் புகைவண்டியிலேயே க‌தை நிக‌ழ்கின்ற‌து. இப்ப‌ய‌ண‌ம் ஒரு ஆன்மீக‌ப் ப‌ய‌ண‌ம் என்று இத்திட்ட‌த்தை வ‌குக்கும் ச‌கோத‌ர‌ர் கூறிக்கொண்டாலும், அவ‌ர் இந்தியாவில் யேசுவிற்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்திருக்கும் தாயைத் க‌ண்டுபிடிக்க‌வவே இப்ப‌ய‌ண‌த்தை ஒழுங்கு செய்திருக்கின்றார் என்ப‌தை ம‌ற்ற‌ச் சகோத‌ர‌ர்க‌ள் பின்ன‌ர் க‌ண்டுபிடிக்கின்றன‌ர். தாய், அமெரிக்காவில் த‌க‌ப்ப‌ன் இற‌ந்த‌போதுகூட‌ ம‌ர‌ண‌நிக‌ழ்வுக்குப் போன‌தில்லை என்ப‌தோடு இவ‌ர்க‌ள் அவ‌ரைக் க‌ண்டுபிடிக்கும்போதுகூட‌ சாம‌ர்த்திய‌மாக‌ இவ‌ர்க‌ளை வில‌த்திவிட்டுப் போய்விடுகின்றார். அத‌ன் பிற‌கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து சுவார‌சிய‌மான‌து. ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில் புகைவ‌ண்டியில் வேலை செய்யும் ஒரு பெண்ணோடு ஒரு ச‌கோத‌ருக்கு காத‌ல் வ‌ருகின்ற‌து. Sweet Lime பெண் என‌ அழைத்து உறவும் வைத்துக்கொள்கின்றார். இக்காட்சியை ஜெய‌மோக‌னின் க‌ண்ணாடி கொண்டு பார்த்தால், நாம் உட‌னேயே இது ஒரு ‘ஐ‌ரோப்பிய சிந்த‌னைவாத‌ம்’ என‌ உட‌னேயே ஒரு அடி பிட‌றியில் போட்டுவிட்டு ந‌க‌ர்ந்துவிட‌லாம். இல்லை, ஏற்க‌ன‌வே காத‌ல‌ன் இருக்கும் பெண் விரும்பித்தான் உற‌வு கொண்டார் என‌ இய‌ல்பாய் எடுத்து த‌லையைப் பிய்க்காம‌லும் இர‌சிக்க‌லாம். அது அவ‌ர‌வ‌ர் விருப்பைப் பொறுத்த‌து.

இந்த‌ப்படத்தில் புகைவண்டியில் வேலைசெய்பவராக ந‌டிக்கும் பெண்ணில் ஈர்ப்பு ஏற்ப‌ட்டு தேடிப்பார்த்த‌போது அவ‌ர் ஒரு இல‌ங்கைத் த‌மிழ்ப்பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. அம‌ரா க‌ருணாக‌ர‌ன் என்ப‌து முழுப்பெய‌ர். அம‌ரா க‌ர‌ண் என‌ சுருக்கி வைத்திருக்கின்றார். மாயா, அசினைப் போல‌ நான் அம‌ராவிற்கு இனிவருங்காலங்களில் அடிமையானாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ எதுவுமில்லை. இப்படத்தைப் பார்ப்ப‌த‌ற்கு பொறுமை வேண்டும். மிக‌ ஆறுத‌லாக‌வே காட்சிக‌ள் ந‌க‌ர்கின்ற‌ன. பெரிய‌ ஆச்ச‌ரிய‌ங்க‌க‌ளையும், ச‌டுதியான‌ திருப்ப‌ங்க‌ளையும்,நெஞ்சை உலுக்கும் முடிவுக‌ளையும் எதிர்பார்க்கும் ஒருவ‌ருக்கு இப்ப‌ட‌ம் நிச்ச‌ய‌மாக‌ப் பிடிக்காது என்ப‌தையும் முன்ன‌ராக‌வே கூறிவிடுகின்றேன். இப்படத்திற்கு முன்னராக அண்டர்சன், Hotel Chevalier  என்கின்ற 13 நிமிடக்குறும்படம் எடுத்திருந்தார். அக்குறும்படமே பின்னர் Darjeeling Limit ஐ முழுநீளப்படமாக எடுக்க ஒரு உந்துதலாக இருந்திருக்கிறது. இப்படம் தொடங்குவதன் முன் Hotel Chevalier குறும்படமும் காண்பிக்கப்படுகின்றது.
…………………………………………….

நோரா ஜோன்ஸ் முத‌ன்முத‌லாக‌ நடிகையாக‌ ந‌டித்த‌ ‘My Blueberry Nights‘ ப‌ட‌ம் Wong Kar-wai ஆல் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. யார் இந்த‌ சீன‌ நெறியாள்கையாள‌ர் என்ப‌தை… த‌மிழ்வ‌லைப்ப‌திவுக‌ளில் நிறைய‌ப் ப‌திவுக‌ள் எழுத‌ப்ப‌ட்ட‌ In the mood for love படத்தை எடுத்த‌வ‌ர் என்றால் எல்லோருக்கும் எளிதாக‌ விள‌ங்கும். க‌தையை எளிதாக‌ச் சொல்வ‌த‌னால் காத‌லில் தோல்வியுற்ற‌ பெண் த‌ன‌க்குப் பொருத்த‌மான‌ துணையை க‌ண்ட‌டைத‌ல் என‌க் கூற‌லாம். ப‌ட‌த்தின் பெரும்ப‌குதி உண‌வ‌ங்க‌ளிலும் இர‌வுக‌ளிலும் நிக‌ழ்கிற‌து. த‌ன் காத‌ல‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ எலிச‌பெத் (நோரா ஜோன்ஸ்) த‌ன் துய‌ரைப் போக்க‌ ஜெரோமி (ஜூட் லோ) ந‌ட‌த்த‌ உண‌வ‌க‌த்திற்குப் போக‌த் தொட‌ங்குகின்றார். வாடிக்கையாள‌ரால் ஒருபோதும் வேண்ட‌ப்ப‌டாத‌ ப்ளுபெர்ரி பை (blueberry pie)யைச் சாப்பிட்டுக் கொண்டு க‌டை மூடும் பின்னிர‌வுவ‌ரை எலிச‌பெத் உரையாடிக்கொண்டிருப்பார். பிற‌கு த‌ன் காத‌லின் நினைவுக‌ளை ம‌ற‌ப்ப‌த‌ற்காய் வெவ்வேறு ந‌க‌ர‌ங்க‌ளுக்குச் சென்று ப‌க‌லும் இர‌வுமென‌ உண‌வ‌ங்க‌ளில் உண‌வு ப‌ரிமாறுப‌வ‌ர்க‌ளாய் வேலை செய்ய‌த்தொடங்குகின்றார். த‌ன‌து வருமான‌த்தின் மூல‌ம் ஒரு காரை வாங்கி ப‌ய‌ண‌ம் செய்ய‌வேண்டும் என்ப‌து எலிச‌பெத்தின் க‌ன‌வாக‌ இருக்கிற‌து. வெவ்வேறு ந‌க‌ர‌ங்க‌ளில் வெவ்வேறு உண‌வ‌ங்க‌ளில் வேலை செய்துகொண்டு அங்கு ந‌ட‌ப்ப‌வ‌ற்றை ஜெரோமிக்கு க‌டித‌ங்க‌ளாய் எழுதுகின்றார். ஆனால் ஒருபோதும் தான் இருக்கும் முக‌வ‌ரியை எலிச‌பெத் எழுதுவ‌தேயில்லை. எலிச‌பெத் எங்கேயிருக்கிறார் என‌ ஜெரோமி அறிய‌ முய‌லும் முய‌ற்சிக‌ளும் தோல்விக‌ளிலேயே முடிகின்ற‌ன‌. இத‌ன் ந‌டுவில் எலிச‌பெத் ச‌ந்திக்கும் இருவ‌ர் (அதிலொருவ‌ர் Natalie Portman) எலிச‌பெத்தை மிக‌வும் பாதிக்கின்றன‌ர். எலிச‌பெத் கார் வாங்கினாரா, அவ‌ர‌து முன்னால் காத‌ல‌னுட‌ன் சேர்ந்தாரா, எலிச‌பெத்தைத் தேடிய‌ ஜெரோமிக்கு என்ன‌ ஆன‌து போன்ற‌ கேள்விக‌ளுக்கான‌ ப‌தில்க‌ளை இப்ப‌ட‌த்தைப் பார்ப்ப‌வ‌ர்க்கு விட்டுவிடுவோம். எளிமையான‌ க‌தை, ஒரு சில‌ முக்கிய‌ பாத்திர‌ங்க‌ள் ம‌ற்றும் நோரா ஜோன்ஸின் இய‌ல்பான‌ ந‌டிப்புட‌ன் அலுப்ப‌டையாது ப‌ட‌ம் ந‌க‌ர்வ‌துதான் முக்கிய‌மான‌து.
 …………………………………………….
2.0 சில கேள்விகள்

ஜெய‌மோக‌ன் ‘அற‌ம்’ ம‌ற்றும் ‘சோற்றுக்க‌ண‌க்கு’ ஆகிய இரண்டு நல்ல யதார்த்தவாதக் கதைகளை அண்மையில் எழுதியிருக்கின்றார். தொட‌க்க‌த்தில் இருந்தே என‌க்கு ஜெய‌மோக‌னின் சிறுக‌தைக‌ள் பிடிக்கும் என‌ச் சொல்லிக்கொண்டே வ‌ந்திருக்கின்றேன். முக்கிய‌மாய் ஜெய‌மோக‌ன் த‌ன‌து க‌தை ந‌க‌ரும் சூழ‌லுக்குள்ளும், பாத்திர‌ங்க‌ளுக்குள்ளும் ந‌ம்மை எளிதாக‌ப் பொருத்திக்கொள்ள‌க்கூடிய‌தாக‌ செய்துவிடுவார். ‘அற‌ம்’ க‌தையில் பெரிய‌வ‌ர் பாக்கைச் சீவ‌ல்க‌ளாக‌ ஆக்குவ‌தும்…, ‘சோற்றுக்க‌ண‌க்கில்’ கெத்தேல் சாகிப் உண‌வு ப‌ரிமாறுவ‌தும்… விரிவாக‌ப் பேச‌ப்ப‌டுவ‌து ந‌ம்மை அத‌ற்குள் உள்ளிழுத்துக் கொள்ளும் உத்திதான். பிற‌கு க‌தையோடு நாமும் ஒரு ம‌றைமுக‌மான‌ பாத்திர‌மாக‌ ந‌க‌ர்ந்துகொண்டிருப்போம். இந்த‌ இரு க‌தைக‌ளுமே உயிரோடு வாழ்ந்த இருவ‌ரைப் ப‌ற்றி புனைவின் மொழியில் பேசுவ‌தால் ந‌ம்மை இன்னும் வ‌சீக‌ரிக்கின்ற‌து. இதில் எவையெவை ய‌தார்த்த‌தில் ந‌ட‌ந்திருக்கும் என‌ ம‌ன‌ம் அறிய விரும்புவ‌தால் தொட‌ர்ந்து எம்மை அசைபோடச் செய்கின்ரன. ம‌ற்ற‌து த‌மிழ‌ர்க்கும் த‌மிழ்ச்சூழ‌லுக்கு என்றுமே விருப்ப‌மான‌ மிகை உண‌ர்ச்சிச் சூழ‌லில் க‌தை ந‌க‌ர்த்த‌ப‌டுவ‌தால் பொதுவாக‌ அனைவ‌ர்க்கும் வாசித்த‌வுட‌னேயே இவ்விரு கதைகளும் பிடித்தும் போய்ப்விடுகின்றது. இன்னுமொரு விடயம், மிக‌ எளிமையான‌ சொற்க‌ளால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ எவ்வித‌ சிக்க‌ல்க‌ளுமில்லாத‌ வாக்கிய‌ அமைப்புக்க‌ள். ஆக‌ இவ‌ற்றின் அடிப்ப‌டையில் என‌க்கும் இவை நல்ல சிறுக‌தைக‌ள் என‌ச் சொல்வ‌தில் த‌ய‌க்க‌ங்க‌ளில்லை.

இப்போது இந்த‌ இர‌ண்டு க‌தைக‌ளையும் ச‌ற்று இழையிழையாக‌ப் பிரித்துப் பார்ப்போம். அதாவ‌து சில‌ பொதுப்ப‌ண்புகளை அடையாள‌ங் காண‌முய‌ல்வோம். ஜெமோவின் புனைவுக‌ளில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ளுக்கு குறி இருக்கிற‌தோ இல்லையோ நிச்ச‌ய‌ம் சாதிய‌ அடையாள‌ங்க‌ள் துருத்திக்கொண்டேயிருக்கும். ‘அற‌த்தில்’ வ‌ருவ‌து பெரிய‌வ‌ர்தான். ஆனால் அவ‌ரின் பேச்சு மொழி பிராம‌ண‌ப் பேசுமொழியாக‌ இருக்கிற‌து. அதேபோல‌ ‘சோற்றுக்க‌ண‌க்கு’ க‌தையைச் சொல்ப‌வர் ஒரு ‘வேளாள‌ன்’ என‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. ச‌ரி, அற‌த்திலாவ‌து பெரிய‌வ‌ர் செளஷ்டிரா சாதியின‌ராக‌ இருப்ப‌தை இப்போதைக்கு விடுவோம். ஆனால் சோற்றுக்க‌ண‌க்கில் ஏன் க‌தைசொல்லி ஒரு வெள்ளாள‌ன் என‌ தேவையில்லாது புகுத்த‌ப்ப‌டுகின்ற‌து என‌ யோசித்துப் பார்க்க‌வேண்டும் (‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன்). இக்கதையில் சாதி அடையாளம் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ப் புகுத்த‌ப்ப‌டுகின்ற‌து ஏன் என‌க் கூறுகின்றேன் என்றால், க‌தையில் உண‌வுக்க‌டை வைத்திருக்கும் முஸ்லிம் பாத்திர‌ம் எல்லோருக்கும் க‌ண‌க்குப் பார்க்காது உண‌வு ப‌ரிமாறும் ஒரு அற்புத‌மான‌ ம‌னித‌ர். சாப்பிட‌ விரும்பும் எவ‌ரும் சாப்பிட‌லாம்; காசு கொடுக்க விரும்பும் எவ‌ரும் பெட்டிக்குள் விரும்பிய‌ காசைப் போட்டுவிட்டுப் போகலாம் என‌ உய‌ர்வாக‌ நினைக்கும் ஒரு ம‌னிதாபிமானி, வ‌ரும் ஒவ்வொருவ‌ரையும் பார்த்து இவ‌ரின்ன‌ சாதியென‌ பார்த்துக்கொண்டிருக்க‌ப்போவ‌தில்லை. க‌தையிலேயே அந்த‌ முஸ்லிம் பாத்திர‌ம் மிக‌க் கொஞ்ச‌மாக‌வே க‌தைப்பார் என‌வும் சொல்லப்படுகிறது. என‌வே இங்கேதான் ஜெமோ த‌ன் விருப்பை நாசுக்காய் செருகிவிடுகின்றார். அதுவும் சும்மா அல்ல‌, ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்களை அல்ல‌வா விழுத்திவிடுகின்றார். ஒன்று அந்த‌க் க‌தை சொல்லிப் பாத்திர‌த்தை தெளிவாக‌ ‘வெள்ளாள‌ன்’ என‌ வாச‌க‌ருக்குச் சொல்லிவிடுகின்றார். க‌தைக்கு அவ‌சிய‌மில்லாத‌ அச்சாதி அடையாள‌ம் இல்லாவிட்டால் நாம் விரும்பினால் வெள்ளாள‌ன் என்றோ த‌லித் என்றோ அல்லது சாதாரண ஒரு மனிதன் என்றோ…எவ‌ராக‌வோ அடையாள‌ங்க‌ண்டுகொண்டிருப்போம். இர‌ண்டாவ‌து விட‌ய‌ந்தான் இன்னும் முக்கிய‌மான‌து…க‌தைசொல்லி ஒரு வெள்ளாள‌ன் என‌ச் சொல்லிக் காட்டுவ‌து முஸ்லிம் பாத்திர‌த்தால். ஆக‌, கவனித்தீர்களா, முஸ்லிம்க‌ளும் நுட்ப‌மாக‌ சாதி பார்ப்ப‌வ‌ர்க‌ள்தான் என‌க் க‌த்தியைச் சொருகிவிட்டு ந‌க‌ர்வ‌துதான் ஜெயமோகனுக்குள் ஒளிந்திருக்கும் ‘அறம்’.

ப‌சிக்கும் எவ‌ரும் விரும்பிய‌வாறு சாப்பிட‌லாம் என‌ மிகுந்த‌ ம‌னிதாபிமான‌த்தோடு நினைக்கும் அந்த‌ முஸ்லிம் பாத்திர‌ம், ஒரு வெள்ளாள‌னுக்கு அவ‌ன் வெள்ளாள‌ன் என்று சொன்னால் சாதார‌ண‌மாக‌வோ அல்ல‌து பெருமையாக‌ நினைக்கும் வெள்ளாள‌னைப் போல‌, ஒரு ப‌ள்ள‌னிட‌மோ ப‌றைய‌னிட‌மோ நீ ஒரு ப‌ள்ள‌னோ/ப‌றைய‌னோ என‌ச் சொல்லும்போது எவ்வ‌ள‌வு அசிர‌த்தையாக‌ உண‌ரும் என்கின்ற‌ எளிய‌ உண்மையை அறியாத‌வராக இருப்பாரா என்ன‌? அன்னமிடுகின்றபோது எதையும் அளந்து போடாத மனம், சாதியை மட்டும் உற்றுப்பார்ப்பது என்பது இயல்பாய் இருக்ககூடுமா என்ன?

க‌தையில் இது ஒரு சிறுப‌குதி இத‌ற்குள் முட்டையில் ம‌யிரைப் புடுங்கும் ம‌டையா என‌த் திட்டுப‌வ‌ர்க‌ளை இப்போது நான் உங்க‌ளை ‘கூகை’ நாவ‌லுக்குள் அழைத்துப் போகின்றேன். நீங்க‌ள் முழு நாவ‌லையும் வாசிக்க‌வேண்டும் என்கின்ற அவசியமுமில்லை. முத‌லாவ‌து அத்தியாயத்தை ம‌ட்டும் வாசியுங்க‌ள். இர‌ண்டு த‌லித்துக்க‌ள், த‌ம் கிராம‌த்திலிருந்து ந‌க‌ர‌ம் ஒன்றுக்குச் செல்கின்றார்க‌ள். அவ‌ருக்கு அங்கே ஒரு உண‌வுக்க‌டையில் தோசை/இட்லி சாப்பிட‌ பெரு விருப்ப‌மாய் இருக்கின்ற‌து. நீண்டகாலக் கனவும் கூட. கையில் போதிய‌ள‌வு காசிருக்கிற‌து. ஆனால் இவ‌ர்க‌ள் த‌லித்துக்க‌ள் என்றால் சாப்பிட‌ இலை விரிக்க‌ மாட்டார்க‌ள். சுற்று முற்றும் பார்த்துவிட்டு உண‌வ‌க‌த்திற்குள் நுழைகின்றார்க‌ள். க‌டைக்கார‌ர் உற்று உற்றுப் பார்க்கின்றார். இவ‌ர்க‌ள் புதிய‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தால் எந்த‌ச் சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் என‌ அவரால் அடையாள‌ங்காண‌ முடிய‌வில்லை (ஜெய‌மோக‌ன் ப‌டைத்திருந்தால் சும்மா ச‌ட்டென‌ச் சாதியை கடைக்காரர் நுக‌ர்ந்து பிடித்திருப்பார்). என‌வே அவ‌ர் ப‌ரிமாறுகின்றார். அவ‌ர்க‌ள் ச‌ந்தோச‌த்துட‌ன் சாப்பிட‌த்தொடங்குகின்றார்க‌ள். ஆனால் என்ன‌ ப‌ரிதாப‌ம்…சாப்பாட்டின் இடைந‌டுவில் இவ‌ர்க‌ளின் ஊர்க்கார‌ர் ஒருவ‌ர் அங்கே வ‌ந்துவிடுகின்றார். அவ‌ர் ஆதிக்க‌ச் சாதிக்கார‌ர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அடி உதை இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் விழுகின்ற‌து. ஊரில் கையைக் க‌ட்டி வாயைப் பொத்தி நிற்கும் சாதிக்கு எங்க‌ளோடு நிக‌ராக‌ மேசையில் சாப்பிட‌க் கேட்கிற‌தா? என‌ ஊர் வ‌ரை துர‌த்தி துர‌த்தி அடிவிழுகிறது. பிற‌கு இப்ப‌டியொரு மாபெரும் குற்ற‌த்தைச் செய்த‌ற்கான‌ த‌ண்ட‌னை ஊருக்குள் வைத்துக் கொடுக்கப்படும்வரை கதை நீளுமென‌ நினைக்கின்றேன்.

இப்போது மீண்டும் அந்த‌ச் சோற்றுக்க‌ண‌க்குக் க‌தை வாருங்க‌ள்… இங்கேதான் நாம் எழுத்தின் அற‌ம் குறித்துப் பேச‌வேண்டும். அற‌ம் என்ப‌து சாதியை வைத்து எத்த‌னையோ பேர் எத்த‌னை இட‌ங்க‌ளில் ஒடுக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கும்போது நாம் சாதியை எழுத்தில் முன் வைப்ப‌தென்ப‌து கூட‌ மிகுந்த‌ க‌வ‌ன‌த்துட‌னும் அக்க‌றையுட‌னும் வைக்க‌வேண்டும். அதுவும் கூகையை எழுதிய‌து வேறு ஒருவ‌ரும‌ல்ல‌. ஜெமோவிற்குப் பிடித்த‌ சோ.த‌ர்ம‌ன். இந்த‌க் க‌தையை எழுதும்போது ஜெமோ என்ற‌ப‌டைப்பாளிக்கு ஒருக‌ண‌ம் ஒருவிட‌ய‌ம் மின்ன‌ல் வெட்டியிருக்க‌வேண்டும். இதை வெள்ளாள‌ன் என‌ அந்த‌ முஸ்லிம் பாத்திர‌த்தினூடாக‌ சொல்ல‌வைத்த‌தைப் போல‌ ஒரு த‌லித் பாத்திர‌த்தை அமைத்திருந்தால் அத‌ன் ம‌ன‌ம் எவ்வ‌ளவு ப‌தைப‌தைத்திருக்கும்…அது நியாய‌மில்லை அல்ல‌வா என‌ உணர்ந்திருக்கும்.  ‘உன்னைப் பார்த்தால் வெள்ளாள‌ன்’ போல‌ இருக்கிற‌து என்று வருவதைத் த‌விர்த்திருக்க‌ச் செய்திருக்கும்.

இதைத் தீவிரமாக‌ முன்வைப்ப‌த‌ற்கு என்ன‌ காரண‌ம் என்ன‌வென்றால், நான் ‘சோற்றுக்கணக்கு’க்க‌தையோடு மிக‌ ஒன்றி வாசித்துக் கொண்டிருக்கும்போது….முக்கிய‌மாக‌ ஜெமோ அங்கே கோழிக்க‌றி/மீன் குழ‌ம்பு ப‌ரிமாற‌ப்ப‌டுவ‌தை எழுதியதை வாசிக்கும்போது நாவில் ருசி வ‌ந்த‌மாதிரியே இருந்த‌து (சில‌வேளை இக்க‌தையை ம‌திய‌ உண‌வுக்கு முன் வாசித்த‌தாலோ தெரிய‌வில்லை). ஆனால் ச‌ட்டென்று அந்த‌ முஸ்லிம் பாத்திர‌ம் தொட‌ர்பேயில்லாது ‘நீ வெள்ளாள‌ன்’ என்ற‌போது ‘ஆகா க‌டைசியில் “ஜெமோவின் “நான்” இங்கேயும் ப‌ல்லிளிக்கிற‌தே’ என‌ எரிச்சல் வந்ததே இதற்குக் காரணம். ஜெமோ ய‌தார்த்தத்தைத்தானே எழுதியிருக்கின்றார்…இப்ப‌டியெல்லாம் க‌தையை அறுவைச் சிகிச்சை செய்யவேண்டுமா என‌ ச‌பித்த‌ப‌டி போகின்ற‌வ‌ர்க்கு… ‘அற‌ம்’ க‌தையில் தெருவில் இருந்த‌ ஆச்சியில் குண்டித்த‌சை தெருவோடு ஒட்டிக்கிடந்தது என்பதை யதார்த்த‌ம் என‌ ஏற்றுக்கொள்கின்றீர்க‌ளா என‌வும் உங்க‌ளை நீங்க‌ளே கேட்டுக்கொள்ள‌வேண்டும். அங்கே ‘யதார்த்தத்தை’ கொஞ்சம் உயர்வுநவிற்சியாக்க முடியுமென்றால், ‘சோற்றுக்கணக்கில்’ யதார்த்ததில் நடந்திருந்தாலும் தேவையில்லாததைத் தவிர்த்திருக்கலாம் என்பதையே சொல்லவருகின்றேன். அவ்வாறு தவிர்ப்பதால் அந்தக் கதை எந்தக் ‘கீறலை’க் கூட அடைந்திருக்கப் போவதில்லை. இங்கேதான் நாம் ஜெமோ என்ற படைப்பாளியில் ‘அறம்’ குறித்தும், அவர் யாருக்கு ‘சோற்றுக்கணக்கு’ காட்டவிரும்புகின்றார் என்பதையும் இந்தக்கதைகளைச் சிலாகிப்பது போலவே நாம் நேர்மையாகப் பேசவேண்டும்.
…………………………………………….
3.0 குறும்படம்

 ‘Hotel Chevalier’

January 29, 2011

எக்ஸோராக் குறிப்புகள்

Filed under: குறிப்புகள் — டிசே தமிழன் @ 12:53 am
 1.0 வாசிப்பு/திரை
ஜே.எம்.கூட்ஸியின் ‘The Master of Petersburg’  நாவ‌ல் Dostoyevsky யை முக்கிய‌ பாத்திர‌மாக‌க் கொண்ட‌ க‌தை.  அவ‌ரின் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவ‌ல், ஒரு கிள‌ர்ச்சி இய‌க்க‌த்தில் இருந்து கொல்ல‌ப்ப‌ட‌,  இற‌ந்த‌ த‌ன‌ய‌னின் நினைவுத்த‌ட‌ங்க‌ளைப் பின் தொட‌ரும் த‌ந்தையொருவ‌ரின் க‌தை.  இந்த‌க் க‌தை ம‌காஸ்வேதா தேவியின் ‘1084ன் அம்மா’ (Mother of 1084) ஐ சில‌வேளைக‌ளில் எம‌க்கு நினைவுப‌டுத்த‌லாம். ம‌காஸ்வேதா தேவியின்  க‌தையில் ந‌க்ச‌லைட்டில் இருந்த‌ ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ அவ‌னைத் தேடும் தாயிற்குப் ப‌திலாக‌ இங்கே ஓர் த‌ந்தை. ‌ம‌கா ஸ்வேதாதேவியின் க‌தையில் வ‌ரும் அன்னை, த‌ன‌து ம‌க‌ன் இற‌க்க‌முன்ன‌ர் இன்னும் ந‌ன்கு அறிந்துகொண்டிருக்க‌லாமே என்று த‌விப்ப‌தைப் போல இங்கே பியோடோரும் த‌ன‌து வ‌ள‌ர்ப்பு ம‌க‌னிற்கு ந‌ல்ல‌தொரு த‌ந்தையாக‌ இருந்திருக்கலாமே என்று ஆத‌ங்க‌ப்படுகின்றார். உண்மையில் இந்த‌க்க‌தையில் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவெலின் பாத்திர‌த்தினூடாக‌ Dostoyevsky யின் இள‌மைப் ப‌ருவ‌த்தையே கூட்ஸி மீள்வுருவாக்க‌ம் செய்கின்றார்.
த‌ம் வாழ்க்கைக்கால‌த்தில் த‌ம்மை விட‌ இள‌மையான‌வ‌ர்கள் இற‌ந்துபோவ‌தைப் பார்ப்ப‌து என்ப‌து மிகுந்த‌ கவ‌லைக்குரிய‌து; அதுவே பிள்ளைக‌ளாக‌ அமைந்துவிட்டால் இன்னும் கொடுமையான‌து.  நிகிலிஸ்டுக்க‌ளோடு இணைந்து போராடிய‌ Dostoyevsky  பின்னாளில் எப்ப‌டியொரு ‘கொன்ச‌ர்வேடிவ்’ ஆகின்றார் என்ப‌து சுவார‌சிய‌ம். அது போராட்ட‌ங்க‌ளின் வீழ்ச்சியா அல்ல‌து த‌னிம‌னித‌ர்க‌ளின் மாற்றமா என‌ உள்ளோடிப் பார்ப்ப‌து சில‌ புதிய‌ வெளிச்ச‌ங்க‌ளை ந‌ம‌க்குத் த‌ர‌க்கூடும்.  ‘The Master of Petersburg’ மற்றும் Mother of 1084 கதைகளோடு நீட்சித்துப் பார்க்க ‘வார்சோவில் ஒரு கடவுளிலும்’ ஒரு பகுதி வருகிறது. அங்கே இப்படி ஒரு தலைமறைவு இயக்கத்தில் இருந்து கொல்லப்படுகின்ற ஓர் இளம்பெண் வருகின்றார் என நினைவு.
இந்த‌ நூலை சா.தேவ‌தாஸ் ‘பீட்ட‌ர்ஸ்பர்க் நாய‌க‌ன்’  என‌த் த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார். அதையே நானும் வாசித்தேன்.  சா.தேவ‌தாஸ் நிறைய‌ நூல்க‌ளை த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார், அந்தவகையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் இந்நூலைத் தமிழில் வாசித்தபோது நெருடிய ஒரு சிறுவிடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.  உதார‌ண‌த்திற்கு He came and left என்ப‌தை ‘அவ‌ன் வ‌ந்து(விட்டு) போனான்’ என‌ச் சொல்ல‌லாம். ‘அவ‌ன் வ‌ந்தான் ம‌ற்றும் போனான்’ என‌ எழுதினால் கூட‌ த‌வ‌றில்லை என்றால்கூட‌ எளிதான‌தை நாம் தேர்ந்தெடுக்க‌லாம். இவ்வாறு ப‌ல‌ இட‌ங்க‌ளில் ‘ம‌ற்றும்’ பாவிக்க‌ப்ப‌டுவ‌து ச‌ற்று உறுத்துகின்ற‌து.  ‘AND’ என்ப‌த‌ற்கு ‘ம‌ற்றும்’ என்ப‌தை எல்லா இட‌ங்க‌ளிலும் பாவிக்க‌ வேண்டுமா என்ப‌தை தேவ‌தாஸ் ம‌றுப‌ரிசீலிக்க‌ வேண்டுமென்ப‌து என் விருப்பு.
 …………………
Australia’ திரைப்ப‌ட‌த்தின் க‌தை ராணி கொமிக்ஸ் மாதிரியான‌ க‌தைப்புத்த‌க‌த்தில் அட‌க்கிவிட‌க்கூடிய‌து. மந்தைக‌ளை நெடுந்தூர‌ம் ஓட்டிச்சென்று குறிக்க‌ப்ப‌ட்ட‌ கால அவ‌காச‌த்திற்குள் இறைச்சிக்காய் விற்ப‌தே க‌தைக்க‌ரு. வ‌ழ‌மை போல‌ வில்ல‌ன்/ காத‌ல்/ நாய‌க‌ன்/நாய‌கி இங்கும் இருக்கின்றார்க‌ள். ஆனால் இப்ப‌ட‌த்தை க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு இன்னொரு கிளைக்க‌தையாக‌ வ‌ரும் ஆஸ்ரேலியாவின் பூர்வீக‌க்குடிக‌ள்.  ஒருவித‌ மாந்தீரிக‌த்த‌ன்மையுட‌ன் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌ன் ஒருவ‌ன் திரைப்ப‌ட‌ம் முழுதும் தொட‌ர்ந்து வ‌ருகின்றான். ப‌ட‌த்தின் எந்த‌ இட‌த்திலும் அந்த‌ப் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌னின் பாத்திர‌ம் சிதைக்க‌ப்ப‌டாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் இய‌ல்பின்படி விட‌ப்ப‌டுத‌ல் மிக‌ முக்கிய‌ம் என்ப‌தை மென்மையாக‌ வ‌லியுறுத்தி இத்திரைப்ப‌ட‌ம் முடிகின்ற‌ காட்சி அருமையான‌து.
 …………………
Tin Drum (த‌க‌ர‌ மேள‌ம்) என்கின்ற‌ குந்த‌ர் கிராஸின் நாவ‌லை அதேபெயரிலேயே ப‌ட‌மாக்கியிருக்கின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌த்தோடு திரியும் வ‌ள‌ராத‌ ஒஸ்கார் உண்மையில் ஒரு ப‌டிம‌மே. போரின் நினைவுக‌ளுக்கான‌ ப‌டிம‌ம் என‌க் குறிப்பிட்டுச் சொல்ல‌லாம். ஒருவ‌ர் எவ்வ‌ள‌வுதான் வ‌ள‌ர்ந்தாலும் போரின் நினைவுக‌ளிலிருந்து என்றுமே த‌ப்பியோட‌முடியாது; அதைக் க‌ட‌ந்துபோவ‌து என்ப‌தும் மிக‌க் க‌டின‌மான‌து.  அத்துய‌ர‌மே என்றுமே வ‌ள‌ராத‌ ஒஸ்காராக‌ இங்கே ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து. 2ம் உல‌க‌ப்போருக்கு முன், இந்நாவ‌லின் பின்புல‌மாக‌க் காட்ட‌ப்ப‌டும் ந‌க‌ரான‌ டான்ஸிக் ஒரு சுத‌ந்திர‌ம் உள்ள‌ பிர‌தேச‌மாக‌வே  இருந்திருக்கிற‌து. போரின் பின்ன‌ர் போல‌ந்தின் ஒரு ப‌குதியாக‌ப் போய்விட்ட‌து (இந்ந‌க‌ரிலேயே குந்த‌ர்கிராஸ் பிற‌ந்தார் என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து) டென்ஸிக்கில் இருப்பவ‌ர்க்கு போர் ந‌ட‌க்கும்போது எந்த‌ப் ப‌க்க‌ம் சேர்வ‌து என்ற‌ சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌து. ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌(?) த‌க‌ப்ப‌ன் (அல்பிர‌ட்) நாஸிக‌ளின் ப‌க்க‌ம் சேர்கிறார். ஒஸ்காரின் அம்மா உற‌வு வைத்துக்கொள்ளும் ‍-ஒஸ்காருக்கு நெருக்க‌மான‌- ஜான் போலிஷ்கார‌ர்க‌ள் ப‌க்க‌ம் இணைந்துகொள்கிறார். ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌ த‌ந்தை யார் என்ப‌தே ஒருவித‌ப் புதிருட‌ன் தான் இத்திரைப்ப‌ட‌த்தில் இருக்கும். அல்பிர‌ட்டும், ஜானும் வெவ்வேறுகால‌க‌ட்ட‌த்தில் போரால் இற‌ந்தும் விடுகின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌ம் ஒரு நெடும்க‌தை. ஒஸ்காரின் பாட்டியில் இருந்து ஆர‌ம்பித்து ஒஸ்காரின் பிள்ளை(?)வரை நீளும் பெரும் குடும்ப‌த்தின் க‌தை.  போரின் அழியா வ‌டுக்க‌ளையும், போருக்குள் ந‌க‌ரும் வாழ்வையும், அத‌ன் பிற‌ழ்வுக‌ளையும் மிக‌த் த‌த்ரூப‌மாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌து.
 …………………
தேவ‌தாசிக‌ள் ப‌ற்றி அருமையான‌ க‌ட்டுரை ஒன்றை ‘வெளி’ ர‌ங்க‌ராஜ‌ன் எழுதியிருக்கின்றார். ‘பாஸிச‌ம்’ போல‌,’ஆணாதிக்க‌ம்’ என்ற‌ சொற்பிர‌யோக‌ம் பாவித்து பாவித்து அத‌ன் அர்த்த‌ம் நொய்மைய‌டைந்துவிட்ட‌து என்ற‌ எண்ண‌ம் என‌க்குண்டு. ஆண்ம‌ன‌ம் இய‌ங்கும் வித‌மே மிக‌ அலாதியான‌து. கோரைப்புற்க‌ளைப் போல‌ எங்கு வேண்டுமானாலும் ப‌ட‌ர்ந்து த‌ன‌க்கு வேண்டிய‌தை உறிஞ்சிவிட்டு, தான் பாவிக்கும் வ‌ள‌ங்க‌ளை ச‌க்கைக‌ளாக‌ தூர‌ எறிந்துவிட்டு ந‌க‌ர‌க்கூடிய‌து. இதை இன்னும் கொஞ்ச‌ம் நீட்சித்தால் ‘ப‌ய‌முறுத்தும்’ அள‌வில் ஏகாதிப‌த்திய‌த்திற்கும் ஏற்றிச் செல்ல‌லாம்.  ஆண் ம‌ன‌தை இழை இழையாக‌ பிரித்துப் பார்த்தால‌ன்றி ஒரு சிறுமாற்ற‌த்தையும் ஆண்க‌ளிடையே ஏற்படுத்திவிட‌முடியாது.  ஆக‌வேதான் ‘ஆணாதிக்க‌ம்’ என்ற‌ எந்த‌ அதிர்ச்சியையும் த‌ராத‌ நொய்ந்த‌ சொல்லை வைத்து பொதுத்த‌ள‌த்தில்  நாம் எதுவும் செய்துவிட‌முடியாது என‌க்கூறுகின்றேன். இனி உள்நுழைந்து இழைக‌ளை அறுத்து அறுத்துப் பார்த்தாலே ந‌ம்மை நாமே விம‌ர்சிக்கும் சிறுவெளியையாவ‌து அடைய‌முடியும்.
2.0 சுய பிரகடனம்
இந்த‌ப் புதுவ‌ருட‌த்தில் நிறைய‌ {வாசிக்க‌வேண்டும், திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்க‌வேண்டும்} என‌ உறுதிசெய்துகொண்டிருக்கின்றேன். ஏற்க‌ன‌வே ருவீற்ற‌ரைத் தூர‌ வில‌த்தி வைத்த‌துபோல‌ ஃபேஸ்புக்கையும் அவ்வ‌ப்போதும‌ட்டும் அவ‌சிய‌ம் இருந்தால் ம‌ட்டும் எட்டிப்பார்ப்ப‌தாய் முடிவு செய்திருக்கின்றேன். இவை எல்லாம் எளிது. ஆனால் இனிக் கூற‌ப்போகின்ற‌ விட‌ய‌த்தை எவ்வாறு காப்பற்ற‌ப் போகின்றேன் என‌த்தெரிய‌வில்லை.
ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே…! ஜெய‌மோக‌னுட‌னான‌ என‌து ப‌த்தாண்டுப் ‘ப‌கை’யை முடித்து வைக்க‌லாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்ல‌து 20002ல் ‘டிசே த‌மிழ‌னுக்கு’ என‌ ஜெய‌மோக‌ன் ப‌திவுக‌ள் விவாத‌க்க‌ள‌த்தில் எழுதிய‌தை ந‌ன்றியுட‌ன் நினைவுகூர்ந்து ஒரு ப‌கைம‌ற‌ப்புக் க‌டித‌ம் கூட‌ அவ‌ருக்கு எழுத‌லாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன். ‘ப‌கைம‌ற‌ப்பு’, ‘மீள் ந‌ல்லிண‌க்க‌ம்’ என‌ எல்லாத் திசைக‌ளிலிருந்தும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். அத‌ற்கு நான் என்ன‌ செய்ய‌லாம் என்று யோசித்துப் பார்த்த‌தில் நான் யாரோடு க‌ட‌ந்த‌ கால‌த்தில் அதிக‌ ‘ப‌கை’ கொண்டேனோ அவ‌ரோடு ப‌கை ம‌ற‌ப்புக் கொள்வ‌து ந‌ல‌மென்று நினைத்தே இதை முடிவுசெய்திருக்கின்றேன். ப‌த்தாண்டு கால‌ப் ப‌கையை ச‌ட்டென்று முறிக்க‌ ம‌ன‌சுக்கு க‌ஷ்ட‌மாக‌த்தான் இருக்கின்ற‌து, என்ன‌ செய்ய‌ வ‌ய‌தும் போகின்ற‌து அல்ல‌வா? 
ஈழ‌த்து அர‌சிய‌ல் போல‌ இர‌ண்டு த‌ர‌ப்புக்குமான‌ ‘ப‌கை ம‌ற‌ப்பு’, ‘மீள் ந‌ல்லிண‌க்க‌ம்’ போன்ற‌வ‌ற்றை ஒருத‌ர‌ப்பே முடிவு செய்வ‌துபோல‌ என்னால் ஜெய‌மோக‌ன் விட‌ய‌த்தில் செய்வ‌த‌ற்கான் அதிகார‌ம் இருக்கா என்று தெரிய‌வில்லை. ஆக‌வே நான் ஜெமோவோடு ‘ப‌கை ம‌ற‌ப்பு’ ம‌ட்டும் செய்கின்றேன். ‘மீள்ந‌ல்லிண‌க்க‌ம்’ சாத்திய‌மா என்ப‌தை ஜெமோவோடு இணைந்துதான் முடிவு எடுக்க‌வேண்டும். ஆனால் இத‌ற்கான‌ ந‌ல்லெண்ண‌ச் சமிக்ஞையாக‌ க‌ன‌டாவில் ‘ஜெயமோகன் வாசக‌ர் வ‌ட்ட‌ம்’  ஒன்றைத் தொட‌ங்க‌லாம் என‌வும் இருக்கின்றேன். இத‌ற்கு ‘கால‌ம்’ செல்வ‌மோ, அ.முத்துலிங்க‌மோ நான் த‌ம‌து இலக்கிய உரிமையைப் ப‌றிப்ப‌தாய் ஆட்சேபிக்க‌மாட்டார்க‌ள் என‌வும் ந‌ம்புகிறேன். 
ஜெமோவோடு பகை மறப்புச் செய்வதற்கு அடிப்படையான 3 காரணங்கள்
(1) எனது வாசிப்புக்களின் அடிப்படையில் நான் நம்பியவர்கள்/ வழிகாட்டுவார்கள் என நினைத்தவர்கள் எதிர்வேகூறமுடியாச் சறுக்கல்களை சந்தித்தமை; தாம் கூறியவைக்கு மாறாக தம் போலியான முகங்களைக் காட்டியமை
(2) ஜெமோவை எப்படி 2000 வாசிப்பு/விவாதங்களினூடாக அறிந்தேனோ …அதேபோல அவர் இன்றும் இருக்கின்றார். அன்று அவரை எதிர்க்க என்ன என்ன காரணங்கள் இருந்தனவோ அதே  இன்றும் அதே விடயங்கள் மாறாது இருக்கின்றன…ஆகவே அவர் அந்தவகையில் தான் சொன்னவற்றுக்கு எதிராக எந்த வேசமும் போடாமல் இருக்கின்றார் என்பது நிரூபணமாகிறது. இந்த பத்து வருடத்தில் அவரும் மாறவில்லை, அவரோடு சமரசமாகின்ற அளவுக்கு எந்தப் புள்ளியும் எனக்கும் தெரியவில்லை. பிறகும் ஏன் வீணாகப் பகையை வளர்ப்பான் என்றே ‘பகை மறப்பு’ எனும் முடிவுக்கு வந்திருக்கின்றேன்.
(3) நமக்கு ஏற்புடையதோ இல்லையோ தமிழ்ச்சூழலில் அருகிப்போய்விட்ட ஒரு விவாதச் சூழலை அவர் உருவாக்கிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லா விவாதத்தின் முடிவிலும் தனது ‘நான்’ ஐ முன்னிறுத்தினாலும் என்னைப் பொறுத்தவரை அவற்றுக்கிடையில் இருந்து ஏதோ ஒன்றிரண்டு நல்ல விடயங்களையாவது பொறுக்கவோ புதிதாக அறிந்துகொள்ளவோ முடிகிறது என்பதும் உண்மை.
 
இறுதியாய்…
ந‌ண்ப‌ரிட‌ம் கேட்டேன்…. நான் என் ‘ப‌கை ம‌ற‌ப்பு’ விட‌ய‌த்தில் உங்க‌ளுக்குப் பிடித்த‌ ஒருவிட‌ய‌த்தைச் செய்திருக்கின்றேன். உங்க‌ளுக்கு அப்ப‌டி ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ந்தால் என்ன‌ செய்வீர்க‌ள் என‌க் கேட்டேன். அவ‌ர் தன‌து க‌ட‌ந்த‌கால‌த்தில் த‌ன்னை நேசித்த‌, ஆனால் த‌ன்னால் நேசிக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வாய்க்காத‌ ஆண்க‌ளுக்கு நேச‌த்துட‌ன் க‌டித‌ம் எழுதுவேன் என்றார்.
என் ந‌ண்ப‌ரைப் போல‌ உல‌க‌த்திலிருக்கும் பெண்க‌ள் அனைவ‌ரும் இவ்வாறாக‌ ‘ப‌கை ம‌ற‌ப்பு’ச் செய்ய‌த் துணிவார்க‌ளாயின் என் வாழ்க்கைக்கால‌ம் முழுதும் தின‌ம் ஒரு காத‌ற் க‌டித‌மாவ‌து என‌க்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என நினைக்கிறேன். 

(புதுவருடத்து உறுதிமொழிகள் தக்கவைக்கப்படின் இவ்வாறான குறிப்புகள் அவ்வப்போது உங்களை வதைக்கக்கூடும்…)

December 20, 2010

மு.தளையசிங்கத்தை வாசித்தல் - பகுதி 01

Filed under: மு.த‌ளைய‌சிங்க‌ம் — டிசே தமிழன் @ 12:07 pm

“இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே formula கலை மக்களுக்காக - நானும் கை தூக்குகிறேன். ஆனால், மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தன்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை ஒரு formulaவைக் கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது, முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்.”

(மு.த‌ளைய‌சிங்க‌ம், ‘முற்போக்கு இல‌க்கிய‌ம்‘)

1.
மு.த‌ளைய‌சிங்க‌ம், ஈழ‌த்தில் முகிழ்ந்த‌ முக்கிய‌ ப‌டைப்பாளி ம‌ட்டுமில்லாது க‌வ‌னிக்க‌த்த‌க்க‌தொரு சிந்த‌னையாரும் கூட‌.  அவ‌ருக்கு எழுத்தில் இருந்த‌ ந‌ம்பிக்கையைப் போல‌ க‌ள‌ப்ப‌ணியாற்றுவ‌திலும் அக்க‌றையிருந்த‌து. எழுத்து என்ப‌து உன்ன‌த‌மான‌து என்றும் அத‌ற்கு த‌னிம‌னித‌ர் ஒவ்வொருவ‌ரின் நேர்மையும், த‌னித்த‌ன்மையும் முக்கிய‌மான‌து என்றும் தொட‌ர்ந்து வ‌லியுறுத்திய‌வ‌ர். அவ்வாறு ப‌டைப்பில் நேர்மை அற்ற‌வ‌ர்க‌ளையும், க‌ட்சி/கொள்கை என்ற‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளுக்கு அட‌ங்கிப்போன‌வ‌ர்க‌ளையும், அதிகார‌ மைய‌ங்க‌ளாக‌ மாறுப‌வ‌ர்க‌ளையும் தொட‌ர்ச்சியாக‌ விம‌ர்சித்து வ‌ந்திருக்கின்றார். தானொரு ஆக்க‌ இல‌க்கிய‌வாதியே அன்றி ஒரு விம‌ர்ச‌க‌ன் அல்ல‌ என்று த‌ளைய‌சிங்க‌ம்  கூறிவ‌ந்தாலும், அவ‌ரை அறியாம‌லேயே ஈழ‌த்துச் சூழ‌லில் ஒரு த‌னித்துவ‌மான‌ திற‌னாய்வுச்செல்நெறியை உருவாக்கியிருக்கின்றார் என்ப‌தைக் க‌வ‌னித்தாக‌ வேண்டும்.

ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ளைப் போல‌ எழுத்தில் ஒரு க‌ற்ப‌னாவாத‌ புர‌ட்சியை உருவாக்கி த‌மக்குப் பின் ஒளிவ‌ட்ட‌ங்க‌ளையும், ப‌க்த‌ கோடிக‌ளையும் உருவாக்காது, தான் விரும்பிய‌/ந‌ம்பிய‌ மாற்ற‌ங்க‌ளுக்காய் க‌ள‌த்திலும் தளையசிங்கம் இற‌ங்கிய‌வ‌ர். அன்றைய காலத்து தமிழ் அரசியல் கட்சிகளோடு முரண்பட்டு ‘சர்வோதய’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர். மாற்றங்கள் பிறரால்/பிறதால் உருவாகும்வரை காத்திருக்காது தாம் விரும்பும் மாற்றங்கள் தம்மிலிருந்து முகிழவேண்டும் என நினைத்து சர்வோதயத்தை ஒரு அரசியல் முன்னணியாக்கி, தேர்தலில் தம் இயக்கம் சார்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியவர்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதற்கு -சாதி வெறிய‌ர்க‌ளுக்கு எதிராக- உண்ணாவிரதப் போராட்டத்தை தளையசிங்கம் தொடங்குகின்றார். இதனால் இவரும், அன்றைய காலத்தில் மாணவராய் இருந்த கவிஞர் சு.வில்வரத்தினமும் பொலிசால் மிக‌க்க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப்படுகின்றனர், இதன் நீட்சியில் தளையசிங்கம் நோயில் வீழ்ந்து, இரண்டு வருடத்திற்குள் த‌ன‌து இள‌வ‌ய‌திலேயே (38) ம‌ர‌ண‌ம‌டைகின்றார். தளையசிங்கம் அவ‌ர‌து கால‌த்தில் இல‌க்கிய‌ அதிகார‌ம் ஒரு குறிப்பிட்ட‌ க‌ட்சியிட‌ம்/முகாமிலும் குவிவ‌தை மிகக் கடுமையாக எதிர்த்த‌தைப் போல‌, நிஜ வாழ்விலும் அதிகார‌த்திற்கு/சாதிவெறியர்களுக்கு எதிராக‌ நின்ற‌ ஒரு சமூகப்பணியாளர் என்ப‌தையும் நாம் நினைவுகூர்ந்து கொள்ள‌லாம்.

காலத்துக் காலம் நிறைய‌ப் பேர் எழுதிக்கொண்டும், எழுத‌ ஆசைப்ப‌ட்டுக் கொண்டும், த‌ங்க‌ளைத் தாமே திருவுருவாக்கும் தீராத‌ ஆசையோடும் இருக்கின்றார்க‌ள், ஆனால் ஒரு த‌னித்துவ‌மான‌ க‌லை இல‌க்கிய‌வாதி என்பவர் த‌ன‌க்குப் பின்பான‌ தலைமுறைக்கும் சில‌வ‌ற்றை த‌ன் சுவ‌டுக‌ளாய் விட்டுச் செல்கின்றார். மு.த‌ளைய‌சிங்க‌ம் அந்த‌வ‌கையில் ஒரு த‌னித்துவ‌மான‌, ஈழ‌த்து இல‌க்கிய‌ப்ப‌ர‌ப்பில் மிக‌ அரிதாக‌த் தோன்றி ஒளிர்ந்துவிட்டு எரிந்துபோன‌ ஒரு விண்மீனென‌ச் சொல்ல‌லாம். த‌னித்துவ‌மான‌ எல்லாப் ப‌டைப்பாளிக்கும் நிக‌ழ்வ‌தைப் போல‌ த‌ளையசிங்க‌ம் அவ‌ர‌து கால‌த்தில் எழுச்சிக‌ளையும், ச‌ரிவுக‌ளையும் க‌ண்டிருக்கின்றார்.  அவ‌ரின் பாதிப்பில் பின்பு ‘உள்வ‌ட்ட‌ம்/வெளிவ‌ட்ட‌ங்க‌ளை’ உருவாக்கிய‌வ‌ர்க‌ள் மு.த‌வை ஏற‌க்குறைய‌ இன்றைய‌ கால‌த்தில் ம‌றந்தே விட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்குத் த‌ம‌க்குத்தாமே ஆல‌வ‌ட்ட‌மும் ஒளிவ‌ட்ட‌மும் பிடிக்க‌வே நேர‌ம் போதாமையால் ந‌ல்ல‌வேளையாக‌ மு.த‌ அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து விடுத‌லை பெற்றுவிட்டார். மேலும் உள்வ‌ட்ட‌த்தில் வைத்து பொத்தி பொத்திக் க‌லையை வ‌ள‌ர்த்து, இறுதியில் வெளிவ‌ட்ட‌த்திற்கு (ம‌க்க‌ளிட‌ம்) கொண்டுவ‌ருவ‌தையே ‘உள்வ‌ட்ட‌ம்’ கூறுகின்ற‌தென‌ பழைய தும்புக்கட்டைக்குப் புதுக்குஞ்சம் க‌ட்டுகின்ற‌வ‌ர்க‌ள், ஏன் உள்வ‌ட்ட‌த்தில் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌த‌நாட்டிய‌மும், க‌ர்நாட‌க‌ ச‌ங்கீத‌மும் ‘உன்ன‌த‌ க‌லைக‌ளாக்க‌ப்ப‌டுவ‌தும்’, யாருமே எடுத்துக்கொள்ளலாமென‌ எவ்வித‌க் க‌ட்டுப்பாடுக‌ளும‌ற்றிருந்த‌ நாட்டாரிய‌ல் க‌லைக‌ள் இன்ன‌மும் ‘உன்ன‌த‌க‌லைக‌ளாக‌’ எல்லோராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌வில்லையென்ப‌தைப் ப‌ற்றியெல்லாம் மூச்சுக்கூட‌ விட‌மாட்டார்க‌ள். உள்வ‌ட்ட‌ ம‌ண்குதிரையை ந‌ம்பி இல‌க்கிய‌ ஆற்றில் இற‌ங்கிய‌வ‌ர்க‌ள், இவ்வாறான‌ கேள்விக‌ளை நேர்மையாக‌வும் நேர‌டியாக‌வும் எதிர்கொள்வார்க‌ள் என‌ நாம் எதிர்ப்பார்ப்ப‌திலும் நியாய‌மில்லைத்தான்.

‘க‌லை க‌லைக்காக‌ அல்ல‌, க‌லை ம‌க்க‌ளுக்காக‌த்தான். ஆனால் க‌லை க‌ட்சிக்காக‌ மாறுவ‌தை ம‌ட்டும் எதிர்ப்பேன்’ என‌ தெளிவாக‌ச் சொல்கின்ற‌ மு.த‌வை கவனமாய் ம‌றைத்து ‘க‌லை க‌லைக்காக‌த்தான்’ என‌ அவ‌ரை முன்னிறுத்திய‌வ‌ர்க‌ள் எங்க‌ளுக்கு இதுவரை காலமும் கூறியிருக்கின்றார்க‌ள் என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌வும் கூடாது. த‌ன‌து குறுகிய‌ வாழ்க்கைக் கால‌த்தில் ‍அச்சிலேயே 1000 ப‌க்க‌ங்க‌ளுக்கு மேலாய் வ‌ர‌க்கூடிய‌வ‌ள‌வுக்கு- நிறைய எழுதிய‌வ‌ரை ஒரு த‌னித்த‌ அடையாள‌த்திற்குள் அடைக்க‌வும் முடியாது. மு.த‌ளைய‌சிங்க‌ம் எழுதிய‌ சிறுக‌தைக‌ள், நாவ‌ல், விம‌ர்ச‌ன‌ங்க‌ள், கோட்பாட்டு முய‌ற்சிக‌ள் என‌ ஒவ்வொன்றையும் விரிவாக‌ப் பார்ப்ப‌தே இக்க‌ட்டுரைத் தொட‌ரின் நோக்க‌ம். இத்தொட‌ரின் முத‌ல் ப‌குதியிற்கு தளைய‌சிங்க‌த்தின் ‘முற்போக்கு இல‌க்கிய‌ம்’, மூன்றாம் பக்கம்’, ‘ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சி’, ம‌ற்றும் ‘விம‌ர்ச‌ன‌ விக்கிர‌க‌ங்க‌ளை’ முத‌ன்மை எழுத்துப் பொருளாக‌ எடுத்துக்கொள்கின்றேன். ‘முற்போக்கு இல‌க்கிய‌ம்’ ம‌ற்றும் ‘ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சி’ ஆகிய‌வை த‌னித்த‌னி நூற்க‌ளாக‌ ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

இனி இக்க‌ட்டுரைக‌ளில் மு.த‌ முன்வைப்ப‌தை விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்கு முன், இவை எழுத‌ப்ப‌ட்ட‌ கால‌ப் பின்ன‌ணியை நாம் அவ‌தான‌த்தில் கொள்ள‌வேண்டும். 1948ல் இல‌ங்கைக்கு பிரித்தானியரிட‌மிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. எப்போதும்போல‌ ஆங்கிலேய‌ரிட‌மிருந்தும் இந்திய‌ர்க‌ளிட‌மிருந்தும் கிடைப்ப‌தைப் பெற்றுக்கொண்டு சுக‌ம் பெறும் ஈழத்த‌மிழ‌ர்க‌ளிடையே சுத‌ந்திர‌ம் என்ப‌து பெரிதாக‌ எதையும் புதிதாக விதைத்துவிட‌வில்லை என மு.த‌ளைய‌சிங்க‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார் . இப்ப‌டி மேலே ஆட்சி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு குனிந்து நின்று சேவ‌க‌ம் செய்து, தமது தனித்துவங்களை இழந்து நிம்ம‌தி காணும் த‌மிழ‌ர்க‌ளை ‘சோம்பேறிக‌ள்’ என‌ மு.த‌ காட்ட‌மாக‌வே விம‌ர்சிக்கின்றார் ம‌ட்டுமின்றி இப்ப‌டி இருப்ப‌வ‌ர்க‌ளால் எப்ப‌டி க‌லை இல‌க்கிய‌ங்க‌ளில் புதிதாய் சாதித்துவிட‌முடியுமென‌வும் கேள்வி எழுப்புகின்றார். த‌மிழ‌க‌த்தில் ஒரு பார‌தியும் புதுமைப்பித்த‌னும் தோன்றிய‌தைப் போல‌ த‌னித்துவ‌மான‌ எந்த‌ப் ப‌டைப்பாளியும் எம்மிடையே தோன்ற‌வில்லை என்ற‌ ஆத‌ங்க‌த்தை மு.த‌ முன்வைக்கின்றார்.

2.
1956ல் ஒரு புதிய‌ நம்பிக்கை கீற்று தோன்றத்தொட‌ங்குகின்ற‌து என‌ மு.த‌ ஏழாண்டு இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சியில் குறிப்பிடுகின்றார். அந்த‌ ஆண்டிலேயே ப‌ண்டார‌நாய‌க்காவினால் த‌னிச் சிங்க‌ள‌ச் ச‌ட்ட‌ம் கொண்டுவ‌ர‌ப்ப‌டுகின்ற‌து. இல‌ங்கையில் அதுவ‌ரை அர‌ச‌க‌ரும‌ மொழியாக‌ இருந்த‌ ஆங்கில‌த்திற்குப் ப‌திலாக‌ சிங்க‌ள‌ மொழி அர‌ச‌க‌ரும‌ மொழியாக‌க் கொண்டுவ‌ர‌ப்ப‌ட‌,. த‌மிழ் மொழி த‌ள்ள‌ப்ப‌டுகின்ற‌ நெருக்க‌டி நிலை தோற்றுவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. 56 த‌னிச் சிங்க‌ள‌ச் ச‌ட்ட‌ம் அர‌சிய‌லில் உற‌ங்கியிருந்த‌ த‌மிழ‌ரை எப்ப‌டி விழித்தெழ‌ச் செய்த‌தோ அப்ப‌டியே க‌லை இல‌க்கிய‌த்திலும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ மாற்ற‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து என்கின்றார் த‌ளைய‌சிங்க‌ம். இவ்வாறான‌ ஒரு உயிர்ப்புக்கு கைலாச‌ப‌தி தின‌கரன் ப‌த்திரிகைக்கு ஆசிரிய‌ராக‌ வ‌ந்த‌தையும் முத‌ன்மைக் கார‌ண‌மாக‌ அவ‌ர் கவனப்படுத்துகின்றார்.

‘மூன்றாவது பக்கம்’ கட்டுரையை பண்டிதர்களுக்கும், சிவத்தம்பி உள்ளிட்ட முற்போக்கு இலக்கியக்காரர்களுக்கு இடையில் தினகரனில் நடைபெறும் விவாதத்தின் எதிர்வினையாக மு.த எழுதுகின்றார். இந்த இரண்டு பக்கங்களின‌தும் போதாமையை விளக்கப்படுத்தினாலே மூன்றாவது பக்கம் தேவை என்றொரு நிலைமை உருவாகிவிடும், அந்த ‘மூன்றாவது பக்கமே’ தனக்கு உரியதெனத் த‌ளைய‌சிங்க‌ம் கூறுகிறார். ‘பண்டிதர்களையும் குறை சொல்ல முடியாதுதான். அவர்கள் நிற்கவேண்டிய இடத்தில்தான் நிற்கின்றார்கள்.ஜம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னால்! நம் தமிழ் இலக்கியப் பிரயாணத்தில் மூட்டை தூக்குபவர்கள் அவர்கள்தான். பழுவின் காரணத்தால் பின்னுக்கு நின்று இழுபட்டுக்கொண்டு கத்துகிறார்கள்’ என கால‌த்தோடு மாற‌முடியாத‌ பண்டிதர்களை சரியாக அடையாளங்காட்டுகின்றார் மு.த. அதேபோல் எப்படி பண்டிதர்களுக்கு தொல்காப்பியமும் நன்னூலும் தெய்வ நூல்களாகிவிட்டனவோ அப்படியே புதிய வகை விமர்சகர்களுக்கு ‘புதிய ஸ்ராலின் - சடனோவ் யந்திர விளக்கங்கள் தெய்வ வாக்குகளாகி விட்டன’ என்கின்றார். மேலும் ‘மார்க்ஸுக்கும் சரி, ஏங்கல்ஸுக்கும் சரி, லெனினுக்கும் சரி கலை இலக்கியத்தைப் பற்றிய நல்ல ரசனை எவ்வளவோ இருந்தது. ஆனால் சிருஷ்டி தெரியாத பின்பு வந்த யந்திரங்கள்தான் எல்லாவற்றையும் திருகிவிட்டன’ என்பதையும் மு.த குறிப்பிடத் தவறவில்லை. பண்டிதர்கள் பாலுணர்ச்சி பற்றி எழுதுவதை, அரசியல் கொள்கைகள் புகுத்தி எழுதுவதை, பழைய இலக்கியத்துக்கு மாறாக எழுதுவதை எல்லாம் ‘கூடாது’ என்று கூறுவதைப் போல, புதிய விமர்சகர்கள் ‘பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயம் ஒன்றைப் பற்றித்தான் எழுதவேண்டும்’ என்று கூறுகின்றனர் எனச் சுட்டிக்காடுகின்றார் தளையசிங்கம்.

கலைச்செல்வி இதழில் தொடராக எழுதிய ‘முற்போக்கு இலக்கியம்’ கட்டுரையில் ‘மனிதனின் பிரச்சினைகளை அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான்’ எனக் குறிப்பிடும் மு.த, ஆனால் ஈழத்தில் மட்டுந்தான் கட்சி சார்ந்து தமக்கு மட்டும் முற்போக்கு இலக்கியம்’ என்ற பெயரை patent right வாங்கி விட்டவர்கள் போல வைத்திருக்கின்றார்கள் என்று கேலி செய்கின்றார். அதேபோல் முற்போக்கு முகாமில் ஒரளவு நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களும் இறுதியில் தம் தனித்துவத்தை இழந்து கட்சிக்கொள்கைகளுக்கு ஏற்ப எழுதுகின்றவர்களாய் மாறிவிடுகின்|றார்கள் என்பதை மு.த கூறுகின்றார். மேலும் ‘கட்சிரீதியில் விற்பனை செய்யப்படும் கொள்கைகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவக்கூடினாலும், இலக்கிய வளர்ச்சியைக் கைப்பற்ற உதவா….அத்தனை பேர்கள் கூடி எழுதியும் அத்தனி பேர்கள் கூடிச் சங்கம் நடத்தியும் இலங்கையில் அவர்கள் ஒரு தனிமனிதன் சாதித்ததை விட அதிகமாகவோ புதிதாகவோ சாதித்துவிடவில்லை’ என்பதையும் சுட்டிக்காடுகின்றார்.

‘முற்போக்கு இலக்கியக் கட்டுரையில்’ பாலுணர்ச்சி எழுத்தில் மறைக்கக்கூடிய விடயமேயல்ல என‌க்கூறி, அவ்வாறு பாலுண‌ர்வு வெளிப்ப‌டையாக‌ எழுதப்பட்ட ‘தீ’யை மிகவும் பாராட்டுகின்றார். பாலுணர்ச்சி, பசியுணர்ச்சி ஆன்மீக உணர்ச்சியைப் போன்ற ஒருவகை உணர்ச்சி, ஆகவே ஏன் பாலுணர்ச்சியை நாம் தவிர்க்கவேண்டும் என வினாவுகிறார்.  ‘ஆன்மீக உணர்ச்சி, மனிதன் கடவுளாக மாற முயலும் ஞானியின் உணர்ச்சி! அதைத் தெரிவதற்கு முதலில் அதன் ஆரம்ப உணர்ச்சியான பாலுணர்ச்சியில் திளைப்பதற்கு, திளைத்துத் திருப்தியடைவதற்கு வசதி இருக்கவேண்டும். ஆனால், மனிதனை யந்திரமாக்கி விடுவதில் முனைத்து கொண்டிருக்கும் இன்றைய உலகம் அந்த வசதியைக் கொடுக்க மறுக்கிறது. ஒளித்து மறைத்து மூடி வைத்து, சாகும் வரைக்கும் அந்த அடிப்படை உணர்ச்சியைக்கூட ஒரளவுக்காவது புரிந்துகொள்ள முடியாத நிலையைத்தான் உருவாக்குகிறது. இந்த நிலையில் ஒன்றில் மனிதன் யந்திரமாக வாழவேண்டும் அல்லது சுத்தப் பைத்தியமாகவோ அல்லது ஓர் psychopathy ஆகவோதான் வாழவேண்டும். பின்னதில் கொஞ்சமாவது தனித்தன்மை கலந்த உயிரோட்டம் இருக்கிறது. எந்திரத்தை விட மிருகம் மேலானதுதானே?’ என மிகத் தெளிவாக அடக்கப்படுகின்ற பாலுணர்ச்சி பற்றி மு.த இந்தக் கட்டுரையில் உரையாடுகின்றார்.

அதேபோன்று அன்றையகால இடதுசாரிகளால் பிரபல்யப்படுத்தப்பட்ட பிரதேசவாதக் கதைகளை (வட்டாரக் கதைகள்) ,அவற்றுக்கு முன்பாக தப்பும் (Escapism) மனப்பான்மையோடு ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட கனவுக்கதைகளோடு ஒப்பிடும்போது எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கின்றார். ஆனால் ‘சர்வாதிகாரச் சங்கந்தான் சட்டம் ஒன்று வைத்துவிட்டது போல இன்று ஈழத்து எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரே ரீதியில் எழுதுகின்றார்கள்’ என்பதையும் கவனப்படுத்துகின்றார். இன்னும் ‘பாலுணர்ச்சியைக் கலந்து மனிதத்தன்மையைக் கலையோடு தருவதால் மாறுபடும் எஸ்.பொன்னுத்துரையின் தனித்தன்மைக் கதைகளையும், மிக இலகுவில் இலக்கியத் தரத்தைத் தொட்டுவிடுமோர் இலாவகமான நடையால் தனித்தன்மை பெறும் வ.அ.இராசரத்தினத்தின் கதைகளையும் தவிர மற்றவர்களின் கதைகள் பெரும்பாலும் பிரதேசமணம் என்றரீதியில் ஒரே type ஆகவே இருக்கின்றன! அதே யந்திரச் சாயல்! அதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’ எனக் கூறி எஸ்.பொவையும், வ.அ.இராசரத்தினத்தையும் த‌னித்துக் கவனப்படுத்துகின்றார்.

பிரதேச வாதமாக இருக்கும் நம் எழுத்தாளர்களின் பார்வை சர்வதேசமாகவும் விரியவேண்டும். அவ்வாறு அகலிக்கும்போதேதான் நம்முடைய போதாமைகள் தெரியும் ஆனால் ‘ஈழத்து எழுத்தாளர்களுக்கு அந்தப் பிரதேசவாதம் ஒரு fetish ஆக மாறி’விட்டதென மு.த கவலைப்படுகின்றார் . அதேபோன்று தனி மனிதனின் கேள்விகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடங்கொடுக்காத எந்தச் சமூகமும் என்றும் முன்னேறிவிடாது என்கின்றார். பிரஞ்சுப் புரட்சிக்கு பின் வந்த நெப்போலியன் காலமும்,, ரஷ்சியப் புரட்சிக்கு பின் வந்த ஸ்ராலின் காலமும் எதையெதையோ எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தையே கொண்டுவந்திருக்கின்றது எனக்கூறும் முத,  ’பழைய நிலைக்கு ஒரு புதிய பெயர் கிடைத்திருக்கிறதே ஒழிய புதிய மாற்றம் கிடைக்கவில்லை’ என்கின்றார். தனிமனிதனைச் சாதாரண எண்ணாக நினைத்து மறந்தோ மறுத்துவிடவோ முடியாது. ஒவ்வொரு தனிமனிதனையும் பற்றிச் சிந்திக்கவேண்டியவனாக அவர்களை வழிநடத்தும் தலைவன் இருக்கவேண்டும் என்கின்றார். ‘இன்றைய யந்திர அமைப்போடு சேர்ந்து தானும் யந்திரமாக வாழ விரும்பாதவன் ஒன்று சாகவேண்டும் அல்லது தானாகப் புரட்சி செய்து ஒரு புது வழி கண்டுபிடிக்க வேண்டும்’ என்கிறார். அதற்காய் கோதேயின் (Gothe) Faust மற்றும் Werther ஐ உதாரணமாக எடுத்து விரிவாக மு.தளையசிங்கம் விளங்கப்படுத்துகின்றார். ‘Werther போல தற்கொலை செய்யவோ அல்லது Faust போல டொக்டராகத் தொடங்கி எஞ்சினியராக முடிக்கத் தேவையில்லை’. நம் எல்லோருக்கும் வேண்டியது தனித்தன்மை. அதுவே முக்கியம் என வலியுறுத்தும் மு.த, ‘டி.எச்.லோறன்ஸ் தொட்டு பெர்னாட்ஷா வரை ஹக்ஸ்லி வரை ரகம் வேறுபடலாம்; அல்லது அமெரிக்க Hipsters Beatniks ஆகவும் ஜரோப்பிய Extenstialists ஆகவும் மாறுபடலாம். ஆனால் அத்தனை வேறுபாடுகளும் ஒன்றை உணர்த்துகின்றன. அதுதான் தனித்தன்மை’ என முற்போக்கு இலக்கியம் கட்டுரையில் அழுத்தமாக மு.த குறிப்பிடுகின்றார். இவ்வாறான தனித்தன்மையிலே ஈழத்து கலை இலக்கியப் படைப்புக்களும் முகிழவேண்டுமே அன்றி குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் அடக்கிப் போய் நிகழக்கூடாது என ‘முற்போக்கு இலக்கியம்’ கட்டுரையை மு.த முடிக்கின்றார்.

(தொடரும்)

December 10, 2010

‘பிறத்தியாள்’ தொகுப்பை முன்வைத்து…

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 11:31 am


1.
பானுபார‌தியின் ‘பிற‌த்தியாள்’ தொகுப்பு. போர்க்கால‌ச் சூழ‌லில் உயிர்த்திருத்த‌லுக்கான‌ த‌த்த‌ளிப்பையும், புல‌ம்பெய‌ர் வாழ்வின‌து நெருக்க‌டிக‌ளையும், அதிக‌ம் க‌வ‌னிக்காது புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணின் அக‌வுல‌க‌த்தையும் பேசுகின்ற‌து. இத்தொகுப்பிலுள்ள‌ 31 க‌விதைக‌ளில் அரைவாசிக் க‌விதைக‌ள் ஈழ‌த்தில் இருந்த‌போதும், மிகுதிக் க‌விதைக‌ள் புல‌ம்பெய‌ர் தேச‌த்திலிருந்தும் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ‘அமைதிப‌டை’யாக‌ இந்தியாவிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் எப்ப‌டி த‌ம‌து முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றி அழிவின் சித்திர‌ங்க‌ளை வ‌ரைந்தார்க‌ள் என்பதை ஈழ‌த்திலிருந்த‌போது பானுபார‌தி எழுதிய‌ சில‌ க‌விதைக‌ள் ப‌திவு செய்கின்ற‌ன‌. க‌லாவின் ச‌ர்ச்சைக்குரிய‌ க‌விதையான   ‘கோணேஸ்வ‌ரிக‌ள்’, ஆடைக‌ளைக் க‌ழ‌ற்றி அம்மாவின்/த‌ங்கையின் யோனிக‌ளை, ஒடுக்கும் இராணுவ‌த்தின் ‘ப‌சி’க்குத் திற‌க்க‌ச் சொல்லி ஒருவித‌ இய‌லாமையுட‌னும் கோப‌த்துட‌னும் எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.. அத‌ற்கு நிக‌ரான‌ அற‌ச்சீற்ற‌த்துட‌ன் ‘ஏய் பார‌த‌மே/ எல்லைக‌ள் தாண்டி/வெண்கொடிக‌ள் நாட்டுவ‌திருக்க‌ட்டும்/முத‌லில்/ உன்புத்திர‌ரின் வேக‌ம் த‌ணியும‌ட்டும்/பிசைந்து உருட்டி விளையாட‌/திர‌ண்ட உன் முலைக‌ளை/ அவ‌ர்க‌ளுக்குக் கொடு’ (ப‌ 29) என்கின்ற‌ பானுபார‌தியின் ‘வெடிகுண்டு பிசையும் பாண்ட‌வ‌ர்’ கவிதையும் எழுதப்‌ப‌ட்டிருக்கிற‌து. கால‌ அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது கலாவின் க‌விதைக்கு முன்பாக‌ பானுபார‌தியின் க‌விதை எழுத‌ப்ப‌ட்டிருகின்ற‌து என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்.

இந்திய‌ இராணுவ‌ கால‌த்தின் கொடுமிருளை, வெளியுல‌கிற்குத் தெரியாத‌ அச்ச‌ம் சூழ்ந்த‌ நாட்க‌ளை, நாளாந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம் பானுபார‌தி நுட்ப‌மாக‌ப் ப‌திவு செய்கின்றார். ‘தெரு நாய்க‌ள் கூட‌/ க‌ட‌லை எண்ணெயின் நாற்ற‌ம்/ தூர‌த்தில் வ‌ர‌வே/ வாலை ம‌ட‌க்கி/ யோனியைப் பொத்திக் கொண்டோட‌/ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌’ (ப‌ 24) என்கிறார். நாய்க‌ளே இவ்வ‌ள‌வு அச்ச‌முறுகின்ற‌து என்றால் அங்கு வாழும் மாந்தர்க‌ளின் நிலை ப‌ற்றி நாம் எதுவும் விரித்துக் கூற‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை. அதேபோல் இராணுவ‌ ஆக்கிர‌மிப்புக் கால‌த்தில் எழுதுவ‌த‌ற்கான‌ பேசுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் எந்த‌ள‌வில் ம‌ட்டுப்ப‌ட்டிருந்த‌து என்ப‌தை ‘ஒரு க‌விதையையோ/ காகித‌த்தையோ/ அல்ல‌து சிறு குறிப்பையோ/பெண்ணின் ம‌ர்ம‌ப் பிர‌தேச‌ங்க‌ளென‌/ சுட்ட‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் கூட‌/ ம‌றைத்து வைப்ப‌தென்ப‌து/ த‌ற்கொலைக்குச் ச‌ம‌மான‌ செய‌ல்’ (ப‌ 24) என்ற‌ வ‌ரிக‌ளிலிருந்து நாம் அறிந்துகொள்ள‌லாம். இவ்வாறான‌ ஒரு கொடுங்கால‌த்தில் தான் இன்றும் காஷ்மீர், ம‌ணிப்பூர், ஈராக், ஈழ‌ ம‌க்க‌ள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை நாம் நினைவூட்டிக் கொள்ள‌லாம்

புல‌ம்பெய‌ர் வாழ்வு குறித்தும் அநேக‌ பெண் ப‌டைப்பாளிக‌ளிலிருந்து மாறுப‌ட்ட‌ ஒரு பார்வையை பானுபார‌தியின் க‌விதைக‌ள் த‌ர‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌. வ‌ச‌ந்தி ராஜா, ‘தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம். என் மகள்களுக்கும். நம் பெண்களுக்கும்’ என‌ப் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தும்போது, பானுபார‌தியோ இன்ன‌மும் ஈழ‌த்திலிருந்த‌போது தாங்கியிருந்த‌ சிலுவைக‌ளையே இன்னும் சும‌க்க‌ வேண்டியிருக்கின்ற‌து என்கிறார். ‘ஏய் க‌ள்ள‌ ஞானிக‌ளே’ என்ற‌ க‌விதையில் ‘சிலுவையில்/ அறைய‌ப்ப‌ட்ட‌ப‌டியே புண‌ர‌ப்ப‌ட்டேன்/நித்திய‌த்தின் பெய‌ரால்’ என புல‌ம்பெய‌ர் தேச‌த்திலும் பாலின‌ வித்தியாச‌த்தால் ஒடுக்குத‌ல் நிக‌ழ்வ‌தைச் சுட்டிக்காட்டுகின்றார்.

அதேபோல் த‌னி ஈழ‌ம் கேட்டுப் போராடிய‌ இய‌க்க‌ங்க‌ளின் ச‌ன‌நாய‌க ம‌றுப்பைப் ப‌ற்றியும் பானுபார‌தி ப‌ல‌ இட‌ங்க‌ளில் குறிப்பிடுகின்றார். ‘எலும்பும் நெருப்பும்’ க‌விதையில் ‘ஒன்றும‌ட்டும் புரிந்த‌து/எங்கையாவ‌து எதையாவ‌து/புதைத்த‌லே இவ‌ர்க‌ளுக்குத் தெரிந்த‌வை’(ப‌ 38) என‌க் கேலி செய்கின்றார். மேலும் ஈழ‌ப்போர் முடிவுக்கு வ‌ந்த‌ 2009ல் எவ‌ரெவ‌ர் என்ன‌ அர‌சிய‌ல் செய்தாலும் பிர‌ச்சினையில்லை, ஆனால் ‘அத‌ற்காக‌ நீங்க‌ள்/எங்க‌ள் வாழ்வை/ மீண்டும்/பாயாய் விரித்து/ ப‌டுத்துருள‌ முடியாது க‌ண்டீரோ’ (ப‌ 74) என‌ எச்ச‌ரிக்க‌வும் செய்கிறார்

2.
புல‌ம்பெய‌ர‌ முன்ன‌ர் த‌ம‌க்கான‌ விடுத‌லை த‌னிநாட்டுப் போராட்ட‌ம் மூல‌ம் வ‌ருமென‌ ந‌ம்புகின்ற‌ ப‌டைப்பாளி, ப‌ல்வேறு இய‌க்க‌ங்க‌ளின் பெருக்க‌ங்க‌ளிலும், அவ‌ர்க‌ளின் ‘நாட்டாமை’த்த‌ன‌ங்க‌ளாலும் அந்த‌ ந‌ம்பிக்கையை இழ‌ந்துவிடுகின்றார். த‌ன‌க்கான‌ இனியான‌ விடுத‌லை என்ப‌து பெண் என்ப‌த‌ன் அடையாள‌த்தின் மூல‌மே க‌ண்ட‌டைய‌ப்ப‌டும் என்ற‌ ஒரு புள்ளியைப் 90க‌ளின் பின்பான‌ க‌விதைக‌ளில் வ‌ந்த‌டைகின்றார். த‌ன்னைப் போன்ற‌ பெண்க‌ள் வீட்டில் சிறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, த‌ங்க‌ளைச் சிறைப்ப‌டுத்திய‌வ‌ர்க‌ளே பெண் விடுத‌லை வேண்டுமென்ற‌ ஊர்வ‌ல‌ங்க‌ளில் முன்னிற்கும் முர‌ணை ‘வ‌ண்டுக‌ளின் த‌லைம‌றைவில்’ எள்ளி ந‌கையாடுகின்றார். அதுபோல‌ இன்னொரு க‌விதையில் ஆணை ஓரிட‌த்தில் த‌ரித்து நிற்கும் நில‌மாக‌வும், பெண்ணைக் கோப‌மாய் ஓடிக்கொண்டிருக்கும் அருவியாக‌வும் உவ‌மிக்கின்றார். இவ்வ‌ள‌வு ஆவேச‌ம் இருந்தும் இறுதியில் ‘வாளெடுத்த‌ பெண் தெய‌வ‌ங்க‌ளெல்லாம்/ நில‌த்த‌டியிலும் அருவியிலும்/ க‌டலிலும் ச‌ங்க‌ம‌மாகி/ சாதிக்கொரு/ பிள்ளை பெற்றுக்கொண்ட‌ன‌’ (ப‌ 20) என்கின்ற‌ சோக‌த்தையும் சொல்கின்றார்.

பெரியார் பெண் விடுத‌லைக்கான‌ ஒரு முன் நிப‌ந்த‌னையாக‌ ‘ஆண்மை’ ஒழிக்க‌ப்ப‌டுவ‌து குறித்துப் பேசுகின்றார். அதுபோல‌வே பானுபார‌தியும் ‘அம்மிக் க‌ல்லில் அடித்து நொறுக்க‌ப்ப‌டும்/ சித‌று தேங்காய் போல‌/ ஆண்மை நொறுக்கி’ வ‌ரும் திராணியுள்ள‌ ஆண்க‌ளோடே த‌ன்னால் சுத‌ந்திர‌மாக‌ப் பேசிக் க‌ளிக்க‌முடியுமென‌க் கூறுகின்றார்.
இவ்வாறாக‌ ஒடுக்குமுறைக்கு எதிரான‌ தெளிவான‌ புரித‌ல்க‌ளோடு இருக்கும் பானுபார‌தி ‘வ‌லிவுடைய‌ ம‌னுக்க‌ள்’ என்ற‌ க‌விதையில் ‘பிர‌ப‌ஞ்ச‌ம‌றியும்/ நானும் ம‌னுவென்று/ வ‌லிவுடைய‌ ம‌னுவென்று’ என‌ ம‌னுவை முன்னிறுத்தும்போது நெருட‌ச் செய்கின்ற‌து. ம‌னுவை முன்வைத்து விரிவாக‌ நாம் பேச‌த் தேவையேயில்லை. பானுபார‌தி ‘க‌டைசிப்ப‌க்க‌ம்’ க‌விதையில் ‘ந‌ள‌த்தியென்றும்/ ப‌ள்ளி ப‌றைச்சியென்றும்/அழுக‌ல் வாயால் சொல்லெறிந்து/ அடித்து விர‌ட்டிய‌தும்/ இந்த‌/க‌டைசிக் க‌ல‌ட்டி வெளிக்குள்தான்’ (ப‌ 77) என எழுதுகிறார். இவ்வாறு ம‌னித‌ர்க‌ள் சாதிக‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு ஒடுக்க‌ப்ப‌டுவ‌த‌‌ன் ஆதிமூல‌மே ம‌னுவில் இருந்து தொட‌ங்கும்போது ‘நானும் ம‌னுவென்ப‌து’ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்துவ‌து மிகுந்த‌ முர‌ணாக‌ இருக்கிற‌து. இத்தொகுப்பில் சில‌ க‌விதைக‌ள் மிக‌ எளிமையாக‌ சொற்க‌ளைத் தாண்டி எவ்வகையிலும் வாசிப்பு அனுப‌வ‌த்தில் நீட்சிய‌டைய‌வில்லை என்றாலும், ‘வாக்களிக்கப்பட்ட பூமியும் ஏழாற்றுப் படுகை நடந்த வழியும்’, ‘அஞ்சறைப்பெட்டியில் அடங்கிய நீரும் நிலமும்’, ‘வெடிகுண்டு பிசையும் பாண்டவர்’ போன்ற‌வை இத்தொகுப்பிலுள்ள‌ முக்கிய‌ க‌விதைக‌ள் என்ப‌தையும் குறிப்பிட‌வேண்டும்

ச‌ங்க‌கால‌ம் தொட‌ங்கி த‌மிழில் க‌விதைக்கென‌ நீண்ட‌ பராம்ப‌ரிய‌ம் உண்டு. நெடுங்கால‌மாய்ப் பெண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு க‌விதைக‌ளில் இருந்த‌போதும் அதை அவ்வ‌ள‌வாக‌ பேசாது விட்ட‌ ம‌ர‌பும் த‌மிழ‌ருக்கு உரித்தான‌தே. இன்றைய‌ கால‌த்தில் ஒருவித‌மாய் உறைந்துபோயிருக்கும் ஈழக்க‌விதையின் ஊற்றுக்க‌ளை திற‌ந்து முன்ன‌க‌ர்த்திக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் பெண் க‌விஞ‌ர்க‌ளே என்ற‌ க‌ருத்தைத் தொட‌ர்ந்து வ‌லியுறுத்தி வ‌ருகின்றேன்.அவ்வாறான‌ ஓர் ஊற்றை பானுபார‌தின் ‘பிற‌த்தியாள்’ திற‌ந்து வைத்திருக்கின்ற‌து என்ப‌தைத் துணிந்து கூற‌லாம். முக்கிய‌மாய் ஈழ‌த்த‌மிழ‌ரின் க‌விதைப்ப‌ர‌ப்பில் இன்றைய‌ கால‌த்தில் நிறைய‌ப் பெண் ப‌டைப்பாளிக‌ளின் தொகுப்புக்க‌ள் வெளிவ‌ர‌த் தொட‌ங்கியிருப்ப‌து மிக‌வும் உற்சாக‌ம் த‌ர‌க்கூடிய‌து. பாலின‌ அடிப்ப‌டையில் ஒரு பெண்ணாக‌வும், சாதிய‌ அடுக்குமுறையில் ஒரு த‌லித்தாக‌வும் தொட‌ர்ச்சியாக‌ ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற‌ பானுபார‌தியின் க‌விதைக‌ளிலிருந்து நாம் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கு நிறைய‌வே இருக்கின்ற‌து

(பதிப்பகம்: கருப்புப் பிரதிகள்)
-Nov 09, 2010

Next Page »

Powered by WordPress